Search This Blog

May 20, 2011

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !


நல்லையா தயாபரன்
ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?
ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது.
ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .
ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும்.
ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் .
பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.
இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர்.
26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.
ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.

தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மூன்றாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா உட்பட 12 நாடுகளிலிருந்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மாநாட்டின் மலேசிய பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளனர். இதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சுமார் 160 இலங்கையர்கள் பங்குகொள்ளவுள்ளனர்

யாழ் முஸ்லிம்களை மீள்குடியேற்ற அமைச்சர் கோரிக்கை !


யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம்களை  மீள்குடியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் பிரதேச செயலக மட்டத்திலான அபிவிருத்தி கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இவ்வாறான பல் கோரிக்கைகள்  அமைச்சர்களால் பல தடவைகள் விடுக்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கைகள் இன்று வரையும் கோரிக்கைகளாக மட்டும்தான் உள்ளது என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில், காணி இல்லாத மக்களுக்கும் தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்க காணி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதி


அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முஸ்லிம் ,தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தி ஏ.எல். நஹியா மற்றும் எஸ் . தில்லை நடராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் கடந்த வியாழகிழமை சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசமைப்பு பேரவை கூட்டத்தில் புதிய பிரதம நீதியரசர் , மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழு , ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றுக்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க சேவை ஆணைக்குழு 17ஆவது திருத்தப்பட்ட அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டு, அரசதுறை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கல்கள் ஆகியவற்றை மேற்கொள்கின்றது.
17ஆம் திருத்தம், அரச உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் ஆகியவற்றின் அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டன. இவற்றுள் மாகாண அரச சேவைகள், பொலிஸ் சேவை, நீதிச் சேவை, திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் உட்படமாட்டார்கள்என்பது குறிபிடத்தக்கது
ஏ.எல். நஹியா அரசாங்கத்தில் பல பதவிகளை வகித்துள்ளார் தற்போது பிரதேச செயலக கிராம சேவைகள் பிரிவுகள் எல்லை நிர்ணய கமிட்டி அங்கத்தவராகவும் செயல்படுகின்றார் தற்போது இவர் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குவும் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

இந்திய சட்டசபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள்


இந்திய சட்டசபை தேர்தலில் கேரளா மாநிலத்திலும் கடந்த சட்டசபை தேர்தலை விட இந்த வருடம் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது 2006-ல் 25 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே கொண்டு இருந்த கேரளா, இந்த வருட சட்ட சபை தேர்தலில் 32-முஸ்லிம் வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதில் அதிகமான எம்.எல்.ஏக்கள் பத்ருதீன் அஜ்மல் கட்சியான இந்தியா ஐக்கிய ஜனநாயக முன்னணி (India United Democratic Front) சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
அதேவேளை தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்துள்ளது என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது தமிழ் நாடில் குறிபிடத்தக்க வெற்றியாக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம்.எம்.எச் ஜவாஹிருல்லாஹ் எனவர் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்க்கடித்து வெற்றி பெற்றுள்ளார் இந்தியாவை பொறுத்தவரையில் முஸ்லிம் கட்சிகள் அல்லாத காட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவதை விடவும் தாம் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகளாக இருப்பதாக பொதுவாக விமர்சனம் முன்வைக்கபடுகின்றது.
புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசின் அமைச்சரவையில் புதுமுகங்கள் உட்பட சுமார் 35 அமைச்சர்கள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிமுக கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சிக்கே அதிகம் கிடைத்து இருப்பதால் முஸ்லிம்கள் நிறைந்துள்ள வேலூர் அல்லது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. கூட்டணிக்குள் முதலில் வந்ததோடு கடைசிவரை அதிமுக தலைமைக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்காமல், சிறுபான்மை ஓட்டுக்களை அதிமுக கூட்டணிக்குக் கொண்டுவந்த மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது

May 19, 2011

ஐந்து நேரம் தொழலாம்; ஜும்ஆவுக்குச் செல்ல முடியாது – மேஜர் ஜெனரல் பீரிஸ் (EXCLUSIVE)


வியாழக்கிழமை, 19 மே 2011 

இவ் வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டாய வதிவிட தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று அது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


இப் பயிற்சி நெறியில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தத்தமது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு எந்தவித தடைகளும் இல்லை. ஆனால் அதற்காக அவர்களை வெளியில் அனுப்புவதற்கு எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை – அமைச்சர் எஸ்.பி
இதேவேளை இப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பல முஸ்லிம் மாணவர்களும் பெற்றோரும் இப் பயிற்சி நெறி தொடர்பில் தம்மிடம் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையுமே வெளிப்படுத்தியுள்ளதாகவும் எவரும் இதனை எதிர்மறையாக நோக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற போதிலும் திட்டமிட்ட படி இப் பயிற்சி நெறி நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இராணுவ முகாம்களில் நடத்தப்படுகிறது என்பதற்காக இது ஒருபோதும் இராணுவப் பயிற்சியாக அமையமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் காலையில் 5 மணிக்கு தூக்கத்தை விட்டு எழும்ப வேண்டும் எனவும் இரவு 10.45 மணிக்கு தூக்கத்திற்குச் செல்ல வேண்டும் எனவும் அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில் அவர்களுக்கு நேர முகாமைத்துவம், ஒழுக்க விழுமியங்கள், மற்றவர்களை அணுகும் முறை, தங்குமிடத்தை ஒழுங்குபடுத்துதல், உடங்பயிந்சி, ஆடை அணியும் முறை, தலைமைத்துவக் கட்டுப்பாடு உள்ளிட்ட வாழ்க்கைக்கு அத்தியவசியமான விடயங்கள் கற்பிக்கப்படவிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துடன் இப் பயிற்சி நெறிக்காக கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அப் பொருட்கள் அனைத்தையும் ஒருவர் புதிதாக கொள்வனவு செய்ய வேண்டுமானால் சுமார் 15000 ரூபா தேவைப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாவனைப் பொருட்களையே கொண்டு வருமாறு கூறியுள்ளதாகவும் புதிதாக பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

சட்டத்துக்கு முரணானது – ஐ.தே.க

இதற்கிடையில் இன்றைய தினம் கொழும்பில் இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது.
இங்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. தேசிய இளைஞர் முன்னணியின் கல்விக் குழுத் தலைவர் தம்மிக விக்ரம ஆராச்சி, இக் கட்டாய பயிற்சி நெறியானது பல்கலைக்கழக சட்டவிதிமுறைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார்.

இது ஒரு இராணுவப் பயிற்சி அல்ல எனும் அமைச்சரின் கருத்தை மறுத்துரைத்த அவர், அப்படியானால் ஏன் ரீ சேட்களையும் அiரைக் காற்சட்டைகளையும் கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

வழக்குத் தாக்கல் செய்வோம்- அ.ப.மா.ஒன்றியம்

இதேவேளை இப் பயிற்சி நெறிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர் கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் கடிதம் சிங்கள மொழியில் உள்ளதால் தமிழ் மொழி மூல மாணவர்கள் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படை வீரர்களை சுட்டு வீழ்த்தும் சீன ராணுவம் (வீடியோ இணைப்பு)


அமெரிக்க நாட்டு படைவீரர்களை சீன ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களை தற்பொழுது சீனா வெளியிட்டுள்ளது.
இந்த போர் இரு நாட்டு எல்லையில் நடைபெறுவது அல்ல, கணணி விளையாட்டில். இந்த தாக்குதல் சம்பவங்கள் சீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ விளையாட்டில் உள்ளது.
பொதுவாக அமெரிக்கா தான் இதுபோன்ற வீடியோ விளையாட்டுக்களை அதிகம் வெளியிடும். அந்த வீடியோக்களில் அமெரிக்க ராணுவம், மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்வோரை தாக்கி அழிக்கும்படி அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பிடல் கேஸ்‌‌ட்ரோவை தாக்குவது போல அமெரிக்கா வீடியோ விளைாட்டு ஒன்றில் வெளியிட்டிருந்தது. தற்போது சீனா அறிமுகப்படுத்தியுள்ள வீடியோ விளையாட்டில் அமெரிக்கப் படையினரை சுட்டுவீழத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ விளையாட்டு வல்லரசான அமெரிக்காவை கோபமூட்டிருக்கிறதோ இல்லையோ, மத்திய கிழக்கு நாடுகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

المشاركات الشائعة