அந்த யதார்த்தத்துக்கு விதிவிலக்காக இருக்க விரும்பும் எவரும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே வீசப்படுவார்கள் என்பதற்கு சமகால அரபுலகின் மக்கள் புரட்சிகளே மகத்தான சான்றுகளாகும்.
டியூனீசியாவின் பென் அலியோ, எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கோ, லிபியாவின் கடாபியோ, யெமனின் அலி அப்துல்லாஹ் சாலிஹோ, சிரியாவின் பஷர் அல் அஸாதோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதும் ஆட்சியாளர்களோ, அதிகாரம் படைத்தவர்களோ இந்த உலக நியதிக்கு ஒருபோதும் விதிவிலக்காக இருக்க முடியாது.
அரபுலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமையைப் பெற்றிருந்த கடாபிக்கு அந்தப் பெருமையே ஈற்றில் உலையாக அமைந்துவிட்டமை கவலைக்குரியது.
1969 ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் தனது 27ஆவது வயதிலேயே லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றியபோது கடாபியின் வீரத்தையும் தூரநோக்கையும் உலகமே ஒருகணம் திரும்பிப் பார்த்தது. ஆனால் அதே கடாபி இன்று தனது மக்களாலேயே இரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டபோது அதே உலகம் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டது.
இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கிடையிலும் கடாபி ஒரு சகாப்தத்தையே படைத்திருக்கிறார் என்றால் அது மிகையாது.
கடாபிக்கு முன்னர் லிபியாவை ஆட்சி செய்த இத்ரீஸ் தனது நாட்டின் வளங்களை மேற்குலகுக்கு தாரைவார்ப்பதில் முன்னின்று செயற்பட்டார். ஆனால் கடாபியோ இத்ரீஸின் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர்முரணானவர்.
கடாபி ஏகாதிபத்தியத்தின் பரம விரோதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அமெரிக்காவை எதிர்ப்பது என்பது அவருக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல என்று கூட வர்ணிக்கலாம்.
அரபு தேசத்தின் குபேரர்கள் எல்லாம் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் காலடியில் மண்டியிட்டுக் கிடக்க கடாபியோ அந்த நாடுகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். பொருளாதாரத் தடைகளையும் வேறு பல நெருக்கடிகளையும் மேற்குலகு ஏற்படுத்திய போதிலும் கடாபி மசிந்து கொடுக்கவில்லை.
தனக்கென தனியானதொரு பாணியை வகுத்துக் கொண்ட அவர் 1977இல் நாட்டின் பெயரை ‘லிபியா அரப் அல் ஜமாஹிரிய்யா’ என மாற்றியதுடன் மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை எனும் தனது அரசியல் சித்தாந்தத்தையும் தயாரித்தார். ‘பச்சைப் புத்தகம்’ என அழைக்கப்படும் அந்த சித்தாந்தம் இஸ்லாத்தையும் கலந்து எழுதப்பட்டிருந்தது.
கடாபி இஸ்லாத்தை நேசிப்பவராகத் தன்னை வெளியுலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட அவர் தனது பச்சைப் புத்தகத்தையே தனது வேத வாக்காகக் கொண்டிருந்தார்.
ஆனாலும் கடாபி தனது ஆட்சிக் காலத்தில் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றினார். மற்றெல்லா ஆபிரிக்க தேசங்களும் வறுமையில் வாடினாலும் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்த இடத்திலேயே இருந்தது. இதற்குக் காரணம் நாட்டின் எண்ணெய் வளத்தை சிறந்த வருமான வழியாகப் பயன்படுத்தியமையே ஆகும்.
மட்டுமன்றி சில நாடுகள் மீது போர் தொடுத்த கடாபி அதன் மூலமாக இரசாயன ஆயுதங்கள் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டார். அத்துடன் மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்பட்ட சில இயக்கங்களுக்கு அவர் ஆயுதங்களை வழங்கி உதவினார். குறிப்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐரிஷ் குடியரசு இராணுவத்திற்கு கடாபி ஆயுதங்களை வழங்கினார். இதன் காரணமாகவும் அவர் சர் வதேச நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியேற்பட்டது.
1980களில் சர்வதேச நாடுகள் பலவும் லிபியா மீது தடைகளை விதித்தன. லிபியாவுடன் எந்தவொரு இராஜதந்திர ரீதியான தொடர்புகளையும் கொண்டிருப்பதில்லை என அவை தீர்மானம் நிறைவேற்றின.
1988 இல் இடம்பெற்ற ‘லொக்கர் பீ’ விமானக் குண்டுவெடிப்பு கடாபிக்கு மென்மேலும் தலையிடியைக் கொடுத்தது. 270 பேரைப் பலி கொண்ட அந்த விமான விபத்திற்கு லிபிய பிரஜையான அப்துல் பாசித் அல் மெக்ராஹி என்பவரே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து 2003 இல் கடாபி அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டதுடன் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 10 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டயீடாகச் செலுத்தினார்.
அதுமாத்திரமன்றி ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் போர் தொடுத்ததையடுத்து லிபியா மீதும் அமெரிக்கா போர் தொடுக்கலாம் என அஞ்சிய கடாபி தான் வைத்திருக்கும் நாசகார ஆயுதங்களை அழித்துவிடுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்காவுக்கும் லிபியாவுக்குமிடையிலான உறவு மலரத் தொடங்கியது. லிபியா மீதான இராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகளை அமெரிக்கா தளர்த்தியது.
2009 இல் முதன் முறையாக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த கடாபி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார். 15 நிமிடங்கள் மாத்திரமே அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய அவர் ஐ.நா. சாசனத்தின் பிரதியை கிழித்து வீசியதுடன் ஐ.நா பாதுகாப்புச் சபையை அல் கைதா இயக்கத்திற்கு ஒப்பிட்டு சாடியிருந்தார். ஆபிரிக்க நாடுகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தமைக்காக அந் நாடுகள் 7.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டயீடாக வழங்க வேண்டும் எனவும் அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறு மீண்டும் மேற்குலகுடன் கடாபி உறவினை தொடர ஆரம்பித்த போதிலும் மேற்கு நாடுகள் கடாபி மீது எப்போதும் ஒரு கண்ணை வைத்தே இருந்தன. சர்வதேச அரசியல் அரங்கில் அவ்வப்போது கவனயீர்ப்பைப் பெறும் வகையில் நடந்து கொள்ளும் கடாபி எந்த நேரத்திலும் அமெரிக்காவுக்கோ அல்லது அதன் நேச நாடுகளுக்கோ எதிராக திசை திரும்பக் கூடும் என்பதே அவற்றின் கருதுகோளாகும்.
இந்நிலையில்தான் 2011 இன் ஆரம்பத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் மக்கள் புரட்சி துளிர்விடத் தொடங்கியது.
டியூனீசியாவில்தான் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க மக்கள் புரட்சி துளிர்விட்டது. பின்னர் அது எகிப்துக்கும் லிபியாவுக்கும் சிரியாவுக்கும் யெமனுக்கும் பஹ்ரைனுக்கும் ஜோர்தானுக்கும் பரவியது.
மக்கள் சக்திக்குப் பயந்து டியூனீசிய அதிபர் பென் அலி பதவி துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் சக்தியை நசுக்க முற்பட்ட போதிலும் அது முடியாது போகவே எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கும் பதவி துறந்து எகிப்தின் எல்லைப் புறத்துக்குச் சென்றார். இப்போ து அவர் வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்.
யெமனில் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதன் அதிபர் அப்துல்லாஹ் அலி சாலிஹ் பதவி விலகப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.பஹ்ரைனிலும் மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜோர்தானில் மக்கள் புரட்சி வெடித்த போதிலும் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து போராட்டத்தைத் தணிக்கச் செய்திருக்கிறார் அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ். சவூதி அரேபியா கூட மக்கள் புரட்சிகளுக்குப் பயந்து மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியிருக்கிறது.
துரதிஷ்டவசமாக லிபியாவில் கடந்த பெப்ரவரி மாதம் புரட்சி வெடித்த போதிலும் கடாபி அதனைக் கணக்கிலெடுக்கவில்லை. தனக்கெதிராக மக்கள் புரட்சி செய்யக் கூடாதுஎன்றே கடாபி விரும்பினார்.
மரணிக்கும் வரை தானே லிபியாவின் தலைவர் எனக் குறிப்பிட்ட கடாபி தான் ஒருபோதும் பதவி துறக்கமாட்டேன் என்றும் சவால் விட்டார்.
அது மாத்திரமன்றி போராட்டத்தில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்லுமாறும் தனது படையினருக்கு உத்தரவிட்டார்.
போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் அங்குலம் அங்குலமாக... அறை அறையாக... வீடு வீடாக...தேடிக் கொல்லுங்கள்" என்பதே கடாபியின் உத்தரவாகவிருந்தது.
பின்பு ஒரு தடவை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் எனக்கெதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் எலிகளைப் போன்றவர்கள். எலிகளை நசுக்குவது போல அவர்களை நசுக்கிக் கொல்வேன்" எனக் காட்டமாகக் கூறியிருந்தார்.
கடாபியின் இந்த அறைகூவல் லிபிய கிளர்ச்சியாளர்களைக் கடுமையாக உசுப்பேற்றியது. அவர்களும் கடாபியை எதிர்த்து போராடத் துணிந்தார்கள். திரிபோலியில் உள்ள பச்சைச் சதுக்கத்தில் ஒன்று கூடி அகிம்சையாகப் போராடிய அவர்கள் பின்னர் தமது கைகளில் ஆயுதங்களை ஏந்தினார்கள். கடாபியின் படையினரை எதிர்த்து துணிந்து நின்று போராடினார்கள். பின்னர் அப் போராட்டம் ஒரு சிவில் யுத்தமாக பரிணாமம் பெற்றது.
இங்குதான் கடாபி பாரிய வரலாற்றுத் தவறொன்றை இழைத்தார். தருணம் பார்த்துக் காத்திருந்த மேற்கு நாடுகள் லிபியாவுக்குள் மூக்கை நுழைக்க வழி திறந்து கொடுத்ததே கடாபி இழைத்த அந்த வரலாற்றுத் தவறாகும்.
தனது நண்பர்களான பென் அலியையும் முபாரக்கையும் கடாபி உதாரணமாகக் கொண்டு பதவி துறந்திருக்கலாம். இல்லையேல் அரசியல் சீர்திருத்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம். அரசியல் கட்சிகளுக்கு அனுமதியளித்து தேர்தல் ஒன்றை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட முனைந்திருக்கலாம்.
ஆனால் தனக்கே உரித்தான ‘கர்வம்’ கடாபியின் கண்ணை மறைத்துவிட்டது. தானே ‘அரசர்களுக்கெல்லாம் அரசன்’ என்ற கடாபியின் நினைப்பே இறுதியில் அவர் முகத்தில் மண்ணை வாரிப் போட்டுவிட்டது.
கடாபி இயல்பிலேயே பிடிவாதக்காரர். 42 வருடங்கள் ஆட்சி செய்தபோதிலும் அவருக்கு தனது இராஜபோக வாழ்க்கை மீதான பற்றுதல் குறைந்துவிடவில்லை. கூடவே அவரது மனைவி, மகள் மற்றும் மகன்களுக்கும்தான்.
அவர்களாவது கடாபிக்கு ஆலோசனை கூறி அவரை ஆட்சியிலிருந்து ஒதுங்கவோ அல்லது சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ நிர்ப்பந்தித்திருந்தால் இன்று தமது அன்புக்குரிய கணவரை - தந்தையை பரிதாபகரமாக இழக்க வேண்டி ஏற்பட்டிராது.
ஆக கடாபி சரியான தருணத்தில் சரியான முடிவை மேற்கொள்ளாமையானது கிளர்ச்சிப் படையினருக்கும் மேற்கு நாடுகளுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது.
நேட்டோ நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கின. போதாக்குறைக்கு விமானங்களை அனுப்பி கடாபியின் நிலைகள் மீது குண்டு மாரி பொழிந்தன.
கடாபியும் சளைக்கவில்லை. தனது நாட்டு மக்கள் என்றும் பாராது கிளர்ச்சியாளர்களைக் கொன்றொழித்தார். கிளர்ச்சியாளர்களும் தமது சகோதரர்கள் என்றும் பாராது கடாபியின் ஆதரவாளர்களையும் படையினரையும் கொன்றொழித்தார்கள்.
ஈற்றில் ஒரேநாட்டு சகோதரர்களே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொலை செய்யும் நிலை. லிபியா எங்கும் இரத்தமும் பிணங்களுமே காட்சியளித்தன.
எட்டு மாத காலமாகத் தொடர்ந்த இந் நிலைக்கு கடந்த 20ஆம் திகதி அதவாது கடாபி கொல்லப்பட்ட பின்னர்தான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
கடாபியையும் அவரோடு எஞ்சியிருந்த சிலரையும் அழிப்பதற்காக சிர்ட் நகரை முழுமையாகவே குண்டு வீசி சின்னாபின்னமாக்கின நேட்டோ விமானங்கள்.
கடைசியில் ஒரு கழிவு நீரோடைக் குழாய்க்குள் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்தார் கடாபி. அந்தக் குழாய்க்குள் கடாபிதான் இருக்கிறார் என்று தெரியாமல்தான் கிளர்ச்சிப் படையினர் அவரைக் கைது செய்தார்கள். பின்னர் அவர்தான் கடாபி என்பதைக் கண்டறிந்து வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
ஆபிரிக்க தேசத்திலேயே ‘அரசர்களுக்கெல்லாம் அரசர்’ என புகழ்ந்து வர்ணிக்கப்பட்ட கடாபி கடந்த 20 ஆம் திகதி மிகவும் மோசமான முறையில் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டார். சப்பாத்துக் கால்களால் உதைத்துக் கேவலப்படுத்தப்பட்டார். அவர் எங்களை எலிகள் என அழைத்தார். ஆனால் அவர்தான் ஒரு எலியைப் போல பதுங்கியிருந்தார்" என கடாபியை கைது செய்த கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்த கருத்து இந்த இடத்தில் ஞாபகிக்கத்தக்கதாகும்.
எது எப்படியிருப்பினும் கடாபி எனும் ஒரு சகாப்தம் இன்று வீழ்த்தப்பட்டுவிட்டது. அந்த வீழ்ச்சி ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் அளித்திருப்பதைப் போலவே மற்றுமொரு சாராருக்கு அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் அந்த மகிழ்ச்சியோ விடுதலையோ அதிர்ச்சியோ கவலையோ இப்போதைக்கு முக்கியமல்ல. மாறாக லிபியா எனும் வளம்கொழிக்கும் தேசத்தின் எதிர்காலமே முக்கியமானதாகும்.
லிபியாவின் எதிர்காலத்தை அதன் இடைக்கால அதிகார சபை பொறுப்பேற்றிருக்கிறது. எட்டு மாதங்களுக்குள் தேர்தல் ஒன்றை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போவதாக அதன் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் உறுதியளித்திருக்கிறார்.
புதிய அரசியல் யாப்பை வரைந்து அதில் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முன்னுரிமையளிக்கப்போவதாக இடைக்கால அதிகார சபை அறிவித்தல் விடுத்திருக்கிறது. இந்த அறிவிப்பு மேற்குலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரபுலகப் புரட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த வெற்றிக்காக லிபிய மக்கள் கொடுத்திருக்கும் விலைதான் மிக அதிகமானது!