Search This Blog

Dec 29, 2010

இலங்கையில் முஸ்லிம்கள் 8 வீதம்: சிறைச்சாலைகளில் 21 வீதம் – தொழிலதிபர் அல்ஹாஜ் பஸ்லுல் ஜிப்ரி



30/12/2010
- பஷீர்-
இன்று கல்வி முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாகப் போயுள்ளது. அதனைத் தேடியெடுத்து சமூகமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த கல்வி முன்னேற்றத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது என பபுவாநியுகினி இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதியுமான தொழிலதிபர் ஏ.எம் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்தார். இன்று மாலை கொழும்பில் (2010.12.29) இஸ்லாமிய ஆய்வு அமைப்பு (IRO) ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபத்தில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது.
நாட்டில் 8 வீதம் வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 21 வீதமானோர் சிறைச்சாலைகளில் இருக்கின்ற அதேவேளை இறுதியாக வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின்படி 2.8 வீதமான முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்ற அவல நிலையிலேயே எமது கல்வி நிலையுள்ளது.
நாட்டிலுள்ள 823 முஸ்லிம் பாடசாலைகளில் 30 முஸ்லிம் பாடசாலைகள் மிகக்குறைவான அடிப்படை வசதிகள்தானும் இல்லாத நிலையில் காணப்படுவதாகவும் இதில் பெரும்பாலான பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் காணப்படுவதாகவும் அண்மைய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நாட்டின் தலைநகரில் உள்ள பாடசாலைகளுக்கே இந்நிலை என்றால் முஸ்லிம்களின் கல்வி நிலை எந்தளவு பாதிக்கப்படும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
சாதாரண தரம் வரையோ 10ம் தரம் வரையோ படித்து விட்டால் பாடசாலையில் இருந்து விலகி பணம் சம்பதிக்கும் அவசர நிலை இன்று ஆரோக்கியமற்ற ஒரு இளைய சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பெண்களின் கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் எமது பின்னடைவுக்குப் பெரும் காரணமாகும். ஒரு பெண் கல்வி கற்றவளாக உருவாகும்போது முழுக் குடும்பமுமே கல்வி கற்ற பிரயோசனத்தை அடைந்து கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் IRO வின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் மற்றும் சஊதி அரேபிய துதுவராலயத்தின் உதவிக் கணக்காளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ. அப்துல் அஸீஸ் (நளீமி) பிரபல வர்த்தகர் இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோரும் உரையாற்றினர்.

இலங்கை பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிக்கும் ?



இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் முஸ்லிம்கள் இழந்துள்ளன நிலம்
இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ?
:சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை  அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.
பாலஸ்தீனுக்கான  இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில்  உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிக விரைவில் இது குறித்து அமைச்சரவைக்கு யோசனையை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அதனையடுத்து அரசு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.
தற்போது பாலஸ்தீன்  இராஜதந்திர பிரதிநிதி அலுவலகமே செயற்பட்டு வருகிறது.  அரசு சுதந்திர பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டதும் அந்த அலுவலகம் உயர்ஸ்தானிகராலயமாக மாற்றப்படும். அதேபோன்று இலங்கையிலிருக்கும் பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகமும் தூதுவராலயமாக மாறும் எனவும் கலாநிதி ஜயசிங்க தெரிவித்துள்ளார்
பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டாலும் அதன் எந்த ஆண்டுகளுக்குரிய எல்லைகளை கொண்டதாக அங்கீகரிப்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை ,என்பதுடன் இதை தொடர்ந்து இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது இந்நிலையில் அடுத்த மாதம் இஸ்ரேலின் உயர் மட்ட தூது குழு ஒன்று இலங்கை வரவுள்ளது என்பது குறிபிடத்தக்கது

Dec 27, 2010

வலுவான இஸ்லாமிய ஊடகம் தேவை - ஒ.ஐ.சி பொதுச்செயலாளர்

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்ள வலுவான ஊடகம் தேவை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (organisation of islamic countries) பொதுச் செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிக் ப்ரோட்காஸ்டிங் யூனியனின்(ஐ.பி.யு) பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் இக்மலுத்தீன்.

ஊடக உலகின் வேகமான வளர்ச்சிக்கொப்ப செயல்படுவதற்கு இஸ்லாமிய ஊடகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. 2005 ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் மக்காவில் நடந்த ஒ.ஐ.சி மாநாட்டில் ஐ.பி.யு போன்ற ஒ.ஐ.சி ஊடகங்களையும், சர்வதேச இஸ்லாமிய செய்தி ஏஜன்சியையும்(ஐ.ஐ.என்.எ) வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது என இக்மாலுத்தீன் தெரிவித்தார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் எதார்த்தமாக்கும் விதத்தில் ஐ.பி.யு வை வலுப்படுத்த வேண்டுமென சவூதி அரேபியாவின் கலாச்சார செய்தி தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் கோஜா தெரிவித்தார்.

சுனாமி சுட்டு ஆறு வருடங்கள்



S.M.அப்துல்லாஹ்
கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும்அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் அழிந்தனர் ! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது . அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டது.
சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதேவேக நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் ஆசியாசின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று புவியமைப்பியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.39:55
உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் மனிதனை அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகள் அனைத்திலிருந்தும் வேறான ஒரு பாதையில் இட்டுசெல்கின்றது இபாதத்துகள் வெறும் சம்பிரதாயங்களாக மட்டும் எம்மில் எஞ்சியுள்ளது இஸ்லாம் போதிக்கும் தனிநபர் நடத்தை, சமூக நடத்தை எதுவும் எமது சமுகத்தில் பெரிய அளவிலான தாகங்களை பெற்று எம்மை வழிநடத்த நாம் எம்மை தயார் படுத்துவதில்லை இறைவன் எமக்கு தொடர்ந்தும் அவகாசம் தருகின்றார் அவன் எமக்கு வழங்கியுள்ள அவகாசத்தை சரியாக பயன்படுத்துவதில் இருந்து தொடர்ந்தும் நாம் தவரிவருகின்றோம்.
அதற்கு பிரதான காரணமாக உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் எம்மை ஆட்கொண்டுள்ளது என்பதுதான், சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்தி போய்யின அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதை மனிதனை படைத்த இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. இறை கட்டளைகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். வரம்பு மீறாதீர்கள் இடப்பட்ட கட்டளைகளை வாழ்வின் இலக்குகளாக கொண்டு செயல்படுங்கள் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.
உலகில்  சுனாமி, பூகம்பம், ,புயல், மழை, வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல  நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக 1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். 1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர  சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது.
فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).46:24.25

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு


ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு.

Conference
எதிர்வரும் 31 டிசெம்பர் 2010 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஒன்றை நடாத்தwww.idrees.lk ஏற்பாடு செய்துவருகின்றது.
போருக்குப் பிந்திய இலங்கையில் பொதுவாக போர் முடிந்துவிட்ட ஆறுதல் தென்பட்டாலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இன்னும் தீராமலே இருக்கின்றன. இதற்கு கடந்தகாலங்களில் நாம் நம்பிக்கொண்டிருந்த கொள்கைகளிலும் வழிமுறைகளிலும் காணப்படும் கோளாறுகளையும் குளறுபடிகளையும் இனம் கண்டு புதிய யுகத்திற்கான திறன்களுடன் எவ்வாறு முன்னகரலாம் என்பதற்கான ஒரு விழிப்பூட்டல் மாநாடாக இது அமைகின்றது.
பின்வரும் தலைப்புகளில் இம்மாநாடு நடைபெற இருக்கின்றது
  • நெருக்கடிகளைக் கையாள்வதில் நபிகளாரின் வழிமுறை
  • புதிய இலங்கையில் வரலாறு, பண்பாடு, சகஜீவனம் போன்றவற்றுக்கான இஸ்லாமிய சிந்திப்பு முறை
  • சவால்களை எதிர்கொண்டு புத்தாக்கத்துடன் இளைஞர்கள் சிந்திப்பது எப்படி?
  • வினைத்திறனுள்ள இஸ்லாமிய குடும்பவாழ்வு
எனவே, கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

Dec 24, 2010

நிலம் விழுங்கும் பூதம்!


அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் இது தொடர்பான செய்திகள் பலவற்றை எமது இணையத்தளம் பதிவு செய்து வருகின்றது இந்த வகையில் ஊடகவியலாளர் மப்றூக் எழுதியுள்ள நிலம் விழுங்கும் பூதம்! என்ற தலைப்பில் ஆக்கம் ஒன்று தமிழ் மிரர் இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த ஆக்கத்தை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது நன்றி தமிழ் மிரர்
மப்றூக்- உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! விரிவாக பார்க்க
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் – இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை! சரி… இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்!
அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது – மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர், அவரின் ஞாபகமாக இக் கிராமத்துக்குச் சூட்டப்பட்ட பெயராகும். இதன் நிஜப் பெயர் ஆலிம்சேனை. இப்போதும் – ஆலிம்சேனை என்றுதான் கணிசமான மக்கள் இந்த இடத்தை அழைக்கின்றார்கள். அந்தப் பெயர்தான் அவர்களுக்குத் தெரியும்!
அஷ்ரப்நகர் – சர்ச்சைக்குரிய தீகவாபியின் எல்லைக் கிராமமாகும். அதனால், அஷ்ரப்நகரையும் சர்ச்சைகள் தொற்றிக் கொண்டே வருகின்றன.
மேற்படி அஷ்ரப்நகர் – காடு சார்ந்த பிரதேசமாகும். நீண்ட வரலாற்றினைக் கொண்ட இக்கிராமத்தில் 1950களில் முஸ்லிம் மக்கள் குடியிருந்ததாக கூறுகின்றார் ஐ.எல்.அலியார் என்பவர். இவர் அஷ்ரப் நகர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவராகக் கடமையாற்றுகின்றார்.
’1952ஆம் ஆண்டுகளில் நாங்கள் இங்கு இருந்தோம். அதற்கு முன்னர் எங்கள் வாப்பா, வாப்பாவின் வாப்பா என்று இருந்திருக்கிறார்கள். இது எங்கள் பரம்பரை நிலம்’ என்று அலியார் மேலும் கூறுகின்றார்.
இவ்வாறானதொரு கிராமத்திலுள்ள 31 பொதுமக்களின் 66 ஏக்கள் பரப்பரவுள்ள காணிகளின் அனுமதிப் பத்திரங்களை அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர ரத்துச் செய்துள்ளதோடு, அந்த மக்கள் அனைவரையும் குறித்த காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்கிற உத்தரவொன்றினையும் பிறப்பித்துள்ளார்.
இதற்கான காரணம்; மேற்படி 31 பேரும் தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கவில்லை என்பதாகும்.
அரசாங்க அதிபர் கன்னங்கர, இந்த முடிவினை எடுப்பதற்கு பின்னணிக் கிளைக் கதையொன்று உள்ளது. அது என்ன என்று இப்போது பார்ப்போம்.
அஷ்ரப் நகர், காடு சார்ந்த பிரதேரம் என்று கூறியிருந்தோமல்லா. ஆதனால், இங்கு யானைகளின் அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகும். அடிக்கடி கிராமத்துக்குள் நுழையும் யானைகள், இங்குள்ள குடியிருப்புக்கள் மற்றும் பயிர்களையெல்லாம் சேதமாக்கி விட்டுச் செல்லும். சிலவேளைகளில் அகப்படும் ஆட்களையும் இந்த யானைகள் தாக்கியுள்ளதாக அஷ்ரப்நகர் வாசிகள் கூறுகின்றார்கள். இதனால் – இந்த மக்களுக்கு யானைகளிடமிருந்து பாதுகாப்பு தேவையாக இருந்தது.
‘இதை சாட்டாக வைத்துக்கொண்டு வனவளத் திணைக்களத்தினர் வந்தார்கள். தாங்கள் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கவுள்ளதாகச் சொன்னார்கள். நாங்களும் சந்தோஷப்பட்டோம். உண்மையாக, வேலியினை அமைப்பதாயின் கிராமத்தின் எல்லையில் அல்லவா அமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்கள் காணிகளின் ஊடாக வேலியை அமைப்பதற்கு முயற்சித்தார்கள். அதை நாங்கள் எதிர்த்தோம். அது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தோம்’ என்கிறார் சர்ச்சைக்குரிய 66 ஏக்கர் காணிகளின் சொந்தக்காரர்களில் ஒருவரான அ.கமர்தீன் என்பவர்.

1970களில் கமர்தீன் – தன் தந்தையாருடன் இப்பிரதேசத்தில் இருந்த காடுகளை வெட்டி காணியாக்கியிருக்கின்றார். இவ்வாறு அவர்கள் காடு வெட்டியெடுத்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அரசாங்கம் 1980ஆம் ஆண்டு உரிய நபர்களுக்கு வழங்கியுள்ளது.
வனவளத் திணைக்களத்தினர் பொதுமக்களின் காணிகளுடாக – யானை வேலி அமைப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பின. இவ்விவகாரத்தை சில முஸ்லிம் அரசியல்வாதிகள்; மேலிடத்துக்கும் கொண்டு சென்றனர். எனவே, இவ்விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமூகமானதொரு தீர்வினைக் காணுமாறு அறுவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்!
அஷ்ரப்நகர் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வந்தார். அவர் மூலம் தமக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்குமென பொதுமக்கள் ஆவலுடன் கூடினார்கள். ஆனால், அரசாங்க அதிபர் அந்தப் பிரச்சினையைத் தலைகீழாகக் கையிலெடுத்தார்.
அதாவது, நீங்கள் குடியிருக்கும் காணிகள் உங்களுக்குரியவைதானா என்பதை நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். எனவே, உங்கள் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினூடாக எனக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு 14 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகின்றேன் என்று கூறிவிட்டு கிளம்பினார் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர!
மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும், கெடுவாக வழங்கப்பட்ட காலத்துக்குள் தமது காணிகளுக்கான அனுதிப்பத்திரத்தின் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்தனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அவற்றை – அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்தார்!
இந்தப் பின்னணியில்தான், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அதனால் அவற்றினை வலுவிழந்ததாகக் கருதி ரத்துச் செய்வதோடு, குறித்த காணிகளில் குடியிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் 01.12.2010 எனும் திகதியிட்ட கடிதமொன்றின் மூலமாக உத்தரவிட்டுள்ளார்.
இங்கு இன்னுமொரு பிரச்சினை ஆரம்பமாகிறது.

அதாவது, இந்த விடயத்தில் அரசாங்க அதிபர் தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரான எம்.ஏ.அன்சில் கூறுகின்றார். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதன் பிறகு – இவ்வாறான காணி அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்வதற்கான அதிகாரம் – பிரதேச செயலாளர் அல்லது காணி ஆணையாருக்கு மட்டுமே உள்ளதாகவும் தவிசாளர் அன்சில் சுட்டிக் காட்டுகின்றார்.
இதுதவிர இன்னுமொரு விவகாரமும் உள்ளது. அஷ்ரப்நகர் மக்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்காமல் இருப்பது போல், தீகவாபியிலுள்ள சிங்கள மக்களில் 184 பேர் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமல் இருக்கின்றனர். அப்படியென்றால், அஷ்ரப்நகர் மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்த சமகாலத்தில் தீகவாபியிலுள்ள குறித்த 184 சிங்கள மக்களின் காணி அனுமதிப்பத்திரங்களையும் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால், உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று அஷ்ரப்நகர் மக்கள் கேட்கின்றார்கள்.
‘இதன்படி பார்க்கும்போது, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தில் தனது இனவாத முகத்தினைக் காட்டியிருக்கின்றார். அவர் இந்த விடயத்தில் நேர்மையுடன் செயற்படவில்லை. இதைத் தவிர வேறொன்றையும் இது விடயத்தில் என்னால் கூற முடியாது’ என்று அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அன்சில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திக் கொண்டார்.
அஷ்ரப்நகர் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவதும் பறிக்கப்படுவதும் இதுவொன்றும் முதல் முறையல்ல! பொன்னன்வெளி, பள்ளக்காடு, ஆள்சுட்டான்வெளி, கரங்கோவட்டை என்று முஸ்லிம்களின் நிலங்களை பேரினப் பூதங்கள் விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில்தான் இப்போது, அஷ்ரப்நகர் பலி கேட்கப்பட்டிருக்கிறது.
தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை அஷ்ரப்நகர் மக்கள் புதுப்பிக்காதமை அவர்களின் குற்றமில்லையா? பிறகெப்படி அரசாங்க அதிபரை நீங்கள் பிழை சொல்லலாம் என்று யாரேனும் எண்ணக் கூடும். அதனால், மேற்படி காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை ஏன் அந்த மக்கள் புதுப்பிக்கவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கடந்த கால யுத்த சூழ்நிலையில் அஷ்ரப்நகர் மக்கள் அங்கிருந்து பல தடவை இடம்பெயர்ந்தனர். மேலும் 1990ஆம் ஆண்டில் 13 முஸ்லிம்களை இப்பிரதேசத்தில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றிருந்தனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பது பற்றி எவ்வாறு ஒருவரால் யோசிக்க முடியும்?!
எனவே, அஷ்ரப்நகர் மக்கள் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமைக்குரிய நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றினை அப்படியே வைத்துவிட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இப்படி நடந்து கொள்வது அநீதியிலும் அநீதி என்பது அந்த மக்களின் கருத்தாகும்.
ஒரு பாரிய மழை பெய்தாலே – மக்களால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதற்காக நாட்டிலுள்ள சில சட்டங்களும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்ற போது, பயங்கரவாதமும் யுத்த சூழ்நிலையும் நிலவிய காலப்பகுதியொன்றில் தமது காணிகளின் அனுமதிப் பத்திரங்களை சிலர் புதுப்பிக்கவில்லை என்பதை ஒரு காரணம் எனத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு – அரசாங்க அதிபர் இப்படிக் காவடியாடுவது நியாயமேயில்லை என்கின்றார் முஸ்லிம் அரசியல்வாதியொருவர்!
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி – காணி ஆணையாளருக்குக் கடிதமொன்றை எழுதியிருப்பதும் இங்கு கவனத்துக்குரியதொரு விடயமாகும். அந்தக் கடிதத்தில் – காணி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமைக்கான நியாயங்களை விளக்கியிருப்பதோடு, குறித்த காணிகளின் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான புதிய காலக்கெடுவொன்றினை வழங்குமாறும் ஹசன் அலி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டம் அம்பாறை மட்டும்தான். ஏற்கனவே அந்தப் பெரும்பான்மையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் – முஸ்லிம்களிடமிருக்கும் நிலங்களும் இப்படியே பறிபோகுமானால், கடைசியில் முஸ்லிம்களுக்கென்று ஒரு ‘கச்சைத்துண்டு’ கூட மிஞ்சப் போவதில்லை!
எனவே, இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு – மக்கள் ‘சும்மா’ இருந்து விடக்கூடாது! பொது அமைப்புக்களும் – மக்களும் இவ்விடயம் தொடர்பில் களத்தில் இறங்க வேண்டும் என்கிறனர் சமூக அக்கறையாளர்கள்.
யானைகளிடமிருந்து நமது நிலங்களை பிறகு காப்பாற்றிக் கொள்ளலாம். முதலில் பூதங்களிடமிருந்து காத்துக் கொள்வோம்!!

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சகல குடும்பங்களையும் உள்ளடக்கிய திட்டம் தேவை.


முஹம்மது சரீப்
புலிகளுடான இறுதி யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்   பார்த்ததை விட குறைந்தளவிலேயே உள்ளது. மன்னார் மாவட்டத்தின் சில முஸ்லிம் குடியிருப்புகள் 1991இன் ஆரம்பத்திலேயே இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.  இதனால் மன்னார் நகரப்பகுதி முஸ்லிம்கள் 1992 க்கு பிற்பாடு மன்னார் நகர் சென்று சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
வவுனியா-மன்னர் வீதியின் இடைநடுவே புலிகள் இராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்நததால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. அத்துடன் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் வீடு கடைகள் கட்டிடங்கள் என்பன புலிகளாலும் அவர்களைச் சார்ந்த சில விஷமிகளாலும் அழிக்கப்பட்டிருந்தன விரிவாக பார்க்க இந்த காரணங்களினால்  இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற விரும்பவில்லை.  ஆனால்  அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் அவர்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் இறுதி யுத்தத்துக்கு முன்பிருந்த காலத்திலிருந்தே மன்னார் மாவட்ட முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மீளக்குடியேற ஆரம்பித்திருந்தனர்
அவர்களுக்கு அமைச்சர் அவர்களும் தன்னாலான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததுடன் மீள்குடியேற்ற நிவாரணங்களையும் வழங்கியிருந்தார். இதனால் மன்னார் மாவட்டத்தில் 10 விழுக்காடு முஸ்லிம்கள் மீளக்குடியேறியுள்ளனர். இன்னும் 10 விழுக்காடு மக்கள் மீளக்குடியேறும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனா;. இவா;களில் பெரும்பாலானவா;கள் தொழில்கள் சரியாகக் கைகூடும் பட்சத்தில் நிரந்தரமாக அங்கு குடியேறிவிடுவர்.
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மந்ந கதியிலேயே நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஒரு சில குடும்பங்கள் ஏற்கனவே குடியேறியுள்ளன. முல்லைத்தீவு தண்ணீரூற்றிலும் சில குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. முல்லைத்தீவு நகரப்பகுதி ஏற்கனவே சுனாமியாலும் பின்னர் யுத்தத்தினாலும் பாதிப்படைந்ததால் முஸலிம்களின் வீடுகளும் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவடைந்துள்ளது. இந்த முஸ்லிம்களுக்கு வீடுகளை அமைத்து திட்டமிட்ட  முறையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் அவர்களில் மேலும் சிலர் மீளக்குடியேறுவர் என்பதில் ஐயமில்லை.
ஆனால் யாழ்ப்பான முஸ்லிம்களை பொருத்த மட்டில் அவர்களின் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் வீடுகள் கடைகள் என்பன சம்பூ ரணமாக அழிக்கப்பட்டு சோனகரிஸ்தான் எனப்படும் அவர்களின் பிரதேசம் ஒரு யுத்த சூனியப் பிரதேசம் போல் காட்சியளிக்கின்றது. இந்தப்பிரதேசத்தை மீளக்கட்டியமைக்க அரசாங்கம் இதுவரை எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில தனவந்தர்கள் ஒன்று பட்டு தமது நிதியையும் இதற்கென மக்களிடமிருந்து திரட்டப்பட்ட சில உதவிகளையும் கொண்டு ஐந்து பள்ளிவாசல்களை மீள நிர்மானித்துள்ளனர். ஒஸ்மானியா கல்லூரியின் எஞ்சியிருந்த சில பகுதிகளை திருத்தி பாடசாலையையும் செயற்பட வைத்துள்ளனர். ஆனால் வீடுகளை மீளமைக்க புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு  எதையுமே வழங்காததால் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது.
யாழ்ப்பாணம் சோனகரிஸ்தான் பகுதியில் காணப்படும் ஹதீஜா கல்லூரி மதரஸா பாடசாலை மஸ்ரஉத் தீன் பாடசாலை சின்ன ஹதீஜா என்பன முற்றாக அழிவடைந்தே காணப்படுகின்றன. ஓஸ்மானியா கல்லூரியை பொருத்த மட்டில் அப்பாடசாலையில் காணப்பட்ட ஏழு கட்டடங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு  கட்டடத்தின் கீழ்ப்பகுதி மட்டும் திருத்தப்பட்டு பாடசாலை இயங்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகிவிட்டதால் அதை முற்றாக அகற்றிவிட்டே புதிய கட்டிடம் அமைக்க வேண்டியுள்ளது.
2002ல் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையின் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஆயிரத்துக்குமேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்துடன் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். மேலும் 35 குடும்பங்கள் அக்காலப்பகுதியல் மீளக்குடியேறியிருந்தனர். ஓஸ்மானியா பாடசாலையும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவ்வாறானவர்களை புலிகள் அதிகபட்ச வரிகளை விதித்தும் சந்தேகம் என்ற தோரணையில் விசாரணை நடத்தி பயமுறத்தியும் முஸ்லிம்களின் வன்னியுடான போக்குவரத்தை தடுத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எண்ணத்தை சிதறடித்திருந்தனர். 2006ல்  ஏ-9 வீதி மூடப்பட்டதால் யாழ்ப்பாண முஸ்லிம்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் விமானம் மூலமும் கப்பல் மூலமும் பொருட்களை யாழ் கொண்டு சென்று விற்று வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டனர். இந்நிலையில் இன்று யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது.  ஆனால் 120 குடும்பங்களே மீளக்குடியேறியுள்ளனர்.
2010இன் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறுவதில் முனைப்புடன் செயற்பட்டனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட யாழ் முஸ்லிம்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளியூர் முஸ்லிம்களும் வியாபார நிமித்தம் யாழ்ப்பாணத்தில் எப்போதும் காணப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இரண்டு பள்ளிகளில் ஜும்ஆ நடாத்துமளவுக்கு சனப்புளக்கமிருந்தது.
இந்நிலையில் யாழ் மாநகர சபை நகரப்பகுதியில் காணப்பட்ட நடைபாதை வியாபாரத்தை தடுத்தது. இதனால் முன்னூருக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களிடம் பணியாளார்களாக வேலைசெய்த 1200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இம்முஸ்லிம்களுக்கு வேறு இடத்தில் கடைகள் தருவதாக கூறிய நகர நிர்வாகிகள் கட்டப்பட்ட புதிய கடைகளை முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. இது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு செயலா என முஸ்லிம்கள் சந்தேகப்படுகின்றனர். முஸ்லிம்கள் செய்த இன்னொரு வியாபாரம் பழைய இரும்புகளை வாங்கி கொழும்புக்கு ஏற்றி விற்பதாகும். இந்த வியாபாரத்தை இராணுவ  பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக்கூறி இராணுவம் தடுத்து விட்டது. இதனால் இரும்புத் தொழில் செய்துவந்த 500 இக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழில்களை முஸ்லிம்கள் செய்து வந்ததற்கான காரணங்கள் அவர்களிடம் கடைகளை வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து அதில் தொழில் செய்வதற்கு போதுமான பணமில்லாமையாகும். ஏற்கனவே புலிகள் அவர்களின் பணம் நகை பொருட்கள் கடைகள் என்பவற்றை கொள்ளையடித்து அவர்களை அகதிகளாக்கியிருந்தனர். கடந்ந 20 வருட காலத்தில் இம்முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காணப்பட்ட பொருளாதார நிலமை அவர்களின் வாழ்வியழை முன்னேற்றியிருக்கவில்லை.
அரசாங்க உதவிகள் புனா;வாழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று போலவே கடந்த 20 வருடங்களாக ஏமாந்து வாழ்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸை சோர்ந்தவர்கள்  8 வருடங்களுக்கு மேலாக புனர்வாழ்வமைச்சை தம் கையகப்படுத்தி வைத்திருந்த போதிலும் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகவேயிருந்தனர். அமைச்சர் றிஸாட்டுடைய காலத்தில் முழுமையாக அவரது பணியை நிறைவேற்ற அவருக்கு வழங்கப்பட்ட பட்ட ஆறு வருடங்கள் போதாமல் போய் விட்டது. இந்நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புனர்வாழ்வமைச்சை கேட்டு வாங்கியதால் என்ன பிரயோசனம் என்ன என்பதாக யாழ் முஸ்லிம்கள் அங்கலாய்க்கிறார்கள்.
இங்கு நாம் நோக்க வேண்டிய இன்னொரு விடயமுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் மன்னாரைச் சோர்ந்தவர்களுக்கே ஆறு வருடங்களில் புனர்வாழ்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் போதாமலிருந்தது. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்கள் 14 நாட்களுக்குள் யாழ் செல்ல வேண்டும் என்பதாக அரசாங்கம் பணித்துள்ளது. வேருடன் பிடுங்கப்பட்ட ஒரு சமுதாயம் இருபது வருடங்களின் பின்பு எவ்வாறு குறுகிய அவகாசத்தில் அங்கு சென்று மீளக்குடியேற முடியும். 14 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் எப்படி சாத்தியமாகும் என்பதை அறியாதவர்கள் எல்லாம் அரசாங்கத்தில் இருப்பது ஆபத்தானது.
மேலும் புத்தளம் பக்கா பள்ளியில் ஹஜ்ஜ}ப் பெருநாள் குத்பாவில் விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கே. வடக்கு முஸ்லிம்கள் புறமுதுகு காட்டி ஓடி வந்தவர்கள். அவர்கள் புத்தளத்தை விட்டு வெளியேறி தமது பிரதேசங்களுக்கு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்பதாக அப்துல்லாஹ் மௌலவி என்பவரால் பயான் செய்யப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஏன் ஹிஜ்ரத் செய்து வெளியேறிச் சென்றார்கள். நபியவர்களின் ஹிஜ்ரத்தை புறமுதுகு காட்டி ஓடியது என்று கூறலாமா? யுத்தத்திலிருந்து தானே புறமுதுகு காட்டி ஓட முடியும். யுத்தமில்லாத ஓர் சூழ்நிலையில் ஆயுதங்களோ அல்லது யுத்தத்துக்கான தயாரிப்புகளோ இல்லாத ஒரு ஊர் எவ்வாறு உலகில் முதன்மை பெற்று விளங்கிய பயங்கரவாத ஆயுதக்குழுவைச் சோர்ந்த இரண்டாயிரம் பேர்  தம்மை சுற்றி வளைக்கும் போது மோதுவார்கள். மதீனா வாசிகள் மீது ஜிகாத் கடமையானது போல்  புத்தளம் முஸ்லிம்கள் மீதும் புலிகளுக்கெதிராக யுத்தம் செய்வது கடமையல்லவா? இது கடந்த இருபது வருடத்துக்கு முன்பு வாலிபராக இருந்த அந்த அப்துல்லாஹ் மௌலவி மீதும் கடமையல்லவா? ஓற்றுமையாக இருக்க வேண்டிய ஒரு சமுதாயத்தில் இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒற்றுமையை குழைத்து கொலையை விட ஒரு கொடிய பாவம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபி (ஸல்) அவாகளின் காலத்தில் மதீனாவாசியாக இருந்திருந்தால் மக்கா வெற்றிகொளளப்பட்டவுடன் நபியவர்களை மதீனாவிலிந்து வெளியேற்றி மக்காவுக்கு அனுப்பியிருப்பார் போலும்.
புத்தளம் வந்தோரை வாழவைத்த ஊர். புலிகளால் விரட்டப்பட்டு நிர்க்கதியாக அகதியாக வந்தவர்களை புத்தளத்து முஸ்லிம்களே முதலில் வரவேற்றார்கள். அவர்களில் பெரும்பாலானவாகள் ஏழைகளாக இருந்த போதும் தமது சாப்பாட்டில் ஒரு பங்கை அநாதரவாக வந்திறங்கிய வடமாகாண முஸ்லிம்களுக்காக வழங்கி அவர்களின் பசியை போக்க உதவினார்கள். புத்தளம் 1990களில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாக விளங்கியது. இன்று புத்தளம் புதிய தோற்றம் பெற்று புத்துணர்வுடன் காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்தால் -ஒரு காரணம்- அங்கு பணப்புளக்கம் அதிகரித்து மக்களின் வருமானமும் சேமிப்பும் பெருகியதால் தான் என்பதை நாம் உணர வேண்டும்.
புத்தள பூர்வீக மக்களுக்கு  பல்கலைக்கழக அனுமதி மற்றும் அரச வேலை வாய்ப்புக்களில் சில பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ள போதும் அவற்றை விடுத்து ஏனைய துறைகள் அனைத்திலும் புத்தளம் இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. புத்தளத்தின் பூர்வீக குடிகள் அரசியல் ரீதியாக ஒற்றுமையின்மையாலும் விட்டுக்கொடுக்கும் தன்மை சமுதாய நலனை முன்னிருத்தி செயற்படும் தன்மை என்பன இல்லாமையாலும் அரசியல் அநாதைகளாக கடந்த இரண்டு தசாப்தங்களாக காணப்படுகின்றனர் . ஆனால் வடமாகாண முஸ்லிம்களின் வரவால் ஏற்பட்ட பாடசாலை இடநெருக்கடிக்கு பகரமாக புத்தளம் மாவட்டத்தில் 22 முஸ்லிம் பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள் மறைந்த அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் தலைவருமாகிய அஸ்ரப் அவர்களால் அமைத்துக்கொடுக்கப்பட்டது. புத்தளம் நூர்பகுதியில் ரயில்வே நிலையம்  கூட வடமாகாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.    எனவே வடமாகாண முஸ்லிம்களின் வரவு புத்தளத்துக்கு புத்துணர்ச்சியையும் சமுதாய பலத்தையும் கொடுத்துள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு தண்ணீரூற்று கிளிநொச்சி  நாச்சிக்குடா பிரதேச முஸ்லிம்கள் புத்தளத்துடன் பின்னிப்பிணைந்து விட்டனர். மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விழுக்காடு அதிகமாக இருந்த போதிலும் அவர்களில் எஞ்சியவர்கள்  எதிர் காலத்தில் புத்தளத்தை தமது பூர்வீக பிரதேசமாகக் கொள்ளப்போகிறவர்களின் சனத்தொகை ஏனைய பிரதேச முஸ்லிம்களின் தொகையை விட அதிகமானதாகும். எனவே புத்தளத்தை விட்டு இம்முஸ்லிம்களை வெளியேற்ற நினைப்பது மடத்தனமான காரியமாகும். முற்றமாக அவர்களையும் உள்ளடக்கி எவ்வாறு எதிர்காலத்தில் அரசியல் கல்வி மற்றும் மார்க்கப்பணிகளை முன்னெடுக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே சிறந்த செயற்பாடாகும்.
அதேவேளை இப்போது இடம்பெயர்ந்து வாழும் சிலர் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேற ஆவலாக உள்ளார்கள். ஆனால் அவ்வாறானவர்களுக்குள்ள  பிரச்சினைகள் அங்கு சென்று என்ன தொழில் செய்வது அதற்கான மூலதனத்தை எவ்வாறு பெருவது என்பவை தான். சாதாரணமாக ஒரு குடியிருப்பு தொழிலை மையமாக வைத்தே உருவாகும். ஓரிடத்தில் விவசாயம் செய்ய முடியுமென்றால் அங்கு விவசாயிகள் குடியேறி ஒரு விவசாயக் குடியிருப்பொன்று உருவாகும் அதே போன்று மீனவத் தொழில் ஒரு கடற்கரை பிரதேசத்தில் செய்ய முடியுமாயின் அங்கு ஒரு மீனவக் குடியிருப்பு உருவாகும். அதேகோட்பாடு தான் நீண்ட காலத்தின் பின் மீளக்குடியேறுபவர்களின் உள்ளத்திலும் காணப்படும். ஓரிடத்தில் தொழிலும் அமைந்து அந்த இடம் குடியிருக்க பாதுகாப்பாகவும் விளங்கினால் மக்கள் தாமாகவே தமது சேமிப்பிலிருந்து வீடு கட்டி வாழத் தொடங்கிவிடுவார்கள்.
எனவே மீள்குடியேறும் பிரதேசங்களில் தொழில் வாய்ப்பை உருவாக்க அதிகமான வளங்களை செலவழிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் வியாபார நிறுவனமொன்றையோ அல்லது தமது வியாபாரத்தின் கிளையொன்றையோ அவ்வப்பிரதேசங்களில் ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் அப்பிரதேசத்தை சோர்ந்த இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். அவர்களில் சிலர் நாளடைவில் அங்கேயே குடியிருந்து விடுவர். மேலும் அரசாங்க வேலை வாய்ப்புகள் மீளக்குடியேற வேண்டிய பிரதேசத்தை மையமாக வைத்து பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
1990இல் வெளியேற்றத்துக்கு முன்பு யாழ் சோனகரிஸ்தான் பகுதியில் ஏறக்குறைய 2100 வீடுகள் இருந்தன. இன்று அவற்றில் நாற்பது வீடுகளே எஞ்சியுள்ளன. தமிழர் சிலர் அவ்வீடகளில் குடியிருந்ததால் இந்த வீடகள் தப்பியிருந்தன. ஆனால் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் யாவும் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த கூரைகள் கதவுகள் யன்னல்கள் சுவர் கல்லுகள் என்று எல்லாவற்றையும் உடைத்து சில தமிழர்கள் வியாபாரம் செய்தனர். சில வீடகளின் அத்திவாரங்கள் கூட தோண்டியெடுக்கப்பட்டு அதன் கற்கள் விற்கப்பட்டுள்ளன. இக்கற்களை வாங்கிய தமிழர்கள் தமது வீட்டைக்கட்டியுள்ளனர். இந்த வீடுகளிலிருந்த கட்டில்கள் அலுமாரிகள் சமையல் பொருட்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக வைத்து தமிழர்களுக்கு விற்கப்பட்டது. எஞ்சிய  பொருட்கள் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு கூட கொண்டுசென்று விற்கப்பட்டுள்ளது. சோனகரிஸதானை பார்க்க 2002ம் ஆண்டு திரும்பிச் சென்ற முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இவ்வாறான ஒரு பேரழிவு யாழ்ப்பாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ  ஏன் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்டிருக்கவில்லை.
அடுத்தடுத்து 30 -40 அடி அகலமான காணிகளுக்குள் காணப்பட்ட வீடுகள் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் இப்படி எல்லாமே நொருக்கப்பட்டுக் கிடந்தால் அதன் உடமைதாரார்களுக்கு எப்படியிருக்கும். இந்த அதிர்ச்சி தான் மீள்குடியேற்றத்தை தடுக்கும் மனோவியல் ரீதியான முதல் காரணமாகும்.
சிறிலங்கா வே எனப்படும் நிறுவனம் யாழ்ப்பாண முஸ்லிம்களில் 150 குடும்பங்களின் தலைவர்களை மீளக்குடியேற்றும் நோக்கத்துடன் அழைத்துச் சென்றுள்ளது. இவ்வாறான வற்புறுத்தல் ரீதியிலான குடியேற்றங்கள் வெற்றியளிக்கப் போவதில்லை. 250 கிலோமீற்றருக்கு அப்பால் வாழும் ஒரு சமூகத்தை திடீரென கொண்டுபோய் குடியமா;த்த முடியுமா. தெளிவான திட்டமிடல் இன்றி செய்யப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிப்போh; சற்று சிந்திக்க வேண்டும். வீடுகளை முதலில் கட்டிக்கொடுத்து விட்டு அவர்களை கூட்டிச்சென்றிருந்தால் அவர்கள் தனிமையாக அன்றி குடும்பத்துடன் அங்கு சென்றிருப்பார்கள். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இவ்வாறான ஒரு நடவடிக்கை சாலப்பொருத்தமற்றதாகும்.
மக்களுக்கு முதலில் அவகாசம் வழங்கப்படவேண்டும். இடம்பெயர்ந்து இன்னோர் பிரதேசத்தில் குடியேறிவிட்ட ஆழ வேரூண்றிவிட்ட ஒரு சமூகத்தை எவ்வாறு ஒரு தெளிவான திட்டமின்றி அறைகுறை வாக்குறுதிகளுடன் இடம் பெயர்த்து கொண்டுசெல்வது என்பது பற்றியெல்லாம் பொறுப்பாளார்கள் சிந்திக்க வேண்டும்.
சிறிலங்கா வே நிறுவனத்தின் யாழ் பயணத்தைத் தொடர்ந்து புத்தளத்திலுள்ள வடமாகாண முஸ்லிம்கள் நிவாரணம் நிறுத்தப்படப் போவதாக கூறப்பட்டு வடக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இவ்வாறு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 1090 குடும்பங்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 650 குடும்பங்களும் தமது பிரதேசங்களுக்கு சென்றனர் . இவர்களுக்கு மண்வெட்டி அளவாங்கு போன்ற பொருட்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பலர்தங்குவதற்கு இடமின்றி சிறமப்பட்டதுடன் தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களுக்கு உடனடியாகத் திரும்பிவிட்டனர்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சரியாக திட்டமிடப்பட்டு ஒரு பொறிமுறையாக செய்யப்பட வேண்டும். அளவாங்கு மண்வெட்டி என்பவற்றை வழங்குவதைவிட அரசாங்கமே காணிகளை துப்பரவாக்குவதிலிருந்து கட்டிடங்களை மீளமைப்பது வரையான வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சர் றிஸாட் தனது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். மேலும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்பதையும் யாழ் மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பாh;த்துள்ளார்கள். மேலும் வடக்கை பூர்வீகமாகக் கொண்ட பலரது குடும்பங்கள் இன்று கிளைவிட்டு பெரும் பரம்கரைகளாக உருவாகியுள்ளன. இவர்கள் எல்லோரும் தமது பூர்வீக பிரதேசங்களில் மீளக்குடியேற அவர்களுக்கு காணிகள் இடங்கள் இல்லை. இவ்வாறானவர்களில் இரண்டுவிதமான மக்கள் உள்ளனர்.
ஒரு சாரார் தாம் தற்போது வாழும் பிரதேசங்களிலேயே குடியிருக்கு விரும்புபவர்கள். மற்றொரு சாரார் தமது பூர்வீக பிரதேசங்களுக்கு சென்று வாழ விரும்புவோர். இவர்களின் விருப்பங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களுக்கான நிவாரணப்பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படாதவிடத்தில் பிறகு அவர்கள் முற்றாக கைவிடப்படுவார்கள். எனவெ அமைச்சர்கள் இது விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

துபாய் தூதரக அதிகாரியாக காதன்குடியை சேர்ந்த ஒருவர்


காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் றஹீம் என்பவர் துபாயில் (Dubai) உள்ள இலங்கை தூதுவராலயத்தின் முதன்மை பொறுப்பதிகாரியாக (Consul General) இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போது ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் வர்த்தகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (Minister – Commercial & Economics) கடந்த இரண்டரை வருடங்களாக கடமையாற்றி வரும் இவர் ஜேர்மனியில் இருந்தவாரே துபாய்க்கு முதன்மை பொறுப்பதிகாரியாக பதவி ஏற்று செல்லவுள்ளார்.
இந்த மாத இறுதிப் பகுதியில் தனது பதவிகளை முடித்துக் கொள்ளும் இவர், ஜனவரி 2011 முதற்பகுதியில் துபாயில் தனது கடமைகளை ஏற்கவுள்ளார் என்று காத்தான் குடி இன்போ இணைய செய்திகள் தெரிவிகின்றன.

யாழ். மாவட்ட வாக்காளர்கள் 3 லட்சம் பேர் நீக்கம்


2007ம் ஆண்டுக் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாவர் என்று பதிவுகள் உள்ளன இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3,70,620பேரில் அதே தொகைதான் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 300,000 பேரின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்என்றும் யுத்தகாலத்தில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன விரிவாக பார்க்க
வெளியான தகவலில் புதிய மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருக்கும். எனினும் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் வாக்காளர்களின் கணக்கெடுப்புகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. என்று அந்த செய்தி தெரிவித்துள்ளது.

தீவிரவாதி என அபாண்டம்- டாக்டர் ஹனீஃபிற்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க ஆஸி. சம்மதம்


Dr.
Muhamed Haneef

ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப். டாக்டரான இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.

இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார்.

ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன்.

விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
News:
 தட்ஸ் தமிழ்

المشاركات الشائعة