நவம்பர் மாத ஆரம்பத்தில் தன்னை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்றவிசாரணைகளுக்காக நஹ்ஸனில் உள்ள சிறைப்பிரிவுக்கு மாற்றிய போது மிக மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக பலஸ்தீன் இளம் பெண் கைதியான ஸமூத் கர்ராஜேஹ் வயது 22)வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்ற விசாரணைக்காகத் தாமன் சிறையில் இருந்து ரமேல் சிறைக்கு மாற்றியபோது ‘சோதனை’ என்ற பெயரில் ஆடைகளைக் கலையுமாறு கேட்டு ஆண்-பெண் இராணுவச் சிப்பாய்கள் குழுவொன்று தன்னை மிகக் கடுமையாகத் துன்புறுத்தியதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றிடம் கர்ராஜேஹ் சாட்சியமளித்துள்ளார்
ஆடைகளைக் கலைய முடியாதெனத் தான் உறுதியாக மறுத்தபோது, இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களும் பெண் ஜெயிலர்களும் மயக்கமுறும் வரை தன்னைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து இம்சித்ததில் தன் உடலெங்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பலஸ்தீன் இளம் பெண் தன்னுடைய வாக்குமூலத்தில், ‘ஸஹர்’ என்ற பெயருடைய இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய் தன்னுடைய தலையை மறைத்திருந்த ஹிஜாப் ஆடையை பலவந்தமாக இழுத்துக் கழற்றி, கழுத்தைச் சுற்றி கைகளால் இறுக்கிப் பிடித்து கடுமையாக அடித்து இம்சித்ததோடு, தரையில் தள்ளிவிட்டு காறி உமிழ்ந்ததாகவும், பின்னர் கைவிலங்கினைப் பற்றித் தரதரவென்று இழுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சித்திரவதைகளின் பின்னர் தன்னை கரப்பான் பூச்சிகள் நிறைந்த ஒடுங்கியதோர் அழுக்குக் கொட்டடியில் தள்ளி இரவு முழுதும் அடைத்து வைத்ததாகவும், உறங்குவதற்கு ஒரு மெத்தையோ போர்த்துவதற்கு ஒரு போர்வையோ இன்றி துர்நாற்றம் நிறைந்த வெறுந்தரையில் வலியுடனும் திகிலுடனும் கிடக்கவேண்டி இருந்தது என்றும் அந்தப் பெண் சாட்சியமளித்துள்ளார்.
சிறைக்கைதிகள் நலன்பேணும் தேசிய உயர் குழு, கர்ராஜேஹ் எனும் இளம் பெண்ணுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் மேற்கொள்ளப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனத்தை மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேற்படி இளம் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சித்திரவதைகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் பலஸ்தீன் கைதிகளிடம் எவ்வளவு கொடூரமாகவும் குரூரத்துடனும் நடந்துகொள்கின்றது என்பதையே காட்டுகின்றது என்று மேற்படி அமைப்பு கருத்துரைத்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை பலஸ்தீன் பெண் கைதிகளை மிகக் குரூரமாகவும் இழிவாகவுமே நடத்தி வருகிறது என்றும், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கர்ராஜேஹ்க்கு மட்டும் முதன்முதலாக நிகழவில்லை, மாறாக, ரமேல் சிறையில் அபீர் உதேஹ் எனும் பலஸ்தீன் பெண் கைதிக்கு நிகழந்தது போன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான பலஸ்தீன் பெண் கைதிகள் மிகக் கடுமையாக அடித்து இம்சிக்கப்பட்டும் மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பலஸ்தீன் பெண் கைதிகளுக்கு நடக்கின்ற இத்தகைய கொடூரமான சித்திரவதைகள் அனைத்துமே வெளியில் வருவதில்லை என்றும், ஓரிரு சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களின் வழியே வெளித்தெரிய வருகின்றன என்றும் சிறைக்கைதிகள் நலன்பேணும் தேசிய உயர் குழு விசனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment