ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பகுதியில் குடியேற்ற நிர்மாணங்களை நடத்திவரும் இஸ்ரேலின் மீது தடை விதிக்கவேண்டும் என ஐரோப்பிய யூனியனின் முன்னாள் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச சட்டங்களை மீறிவரும் இஸ்ரேலுக்கு இதர நாடுகளைப் போலவே தடையை விதிக்கவேண்டும் என இத்தலைவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனின் முன்னாள் வெளியுறவுத்துறை தலைவர் ஜாவியர் சொலானாவுடன் 25 பேர் அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
1967 ஆம் ஆண்டு எல்லையில் மாற்றம் கொண்டுவருவதை ஐரோப்பிய யூனியன் அங்கீகரிக்கக்கூடாது. பழைய எல்லைகள் அடங்கிய அனைத்து அதிகாரங்களையும் பெற்ற ஃபலஸ்தீன் நாடுதான் அவசியமானது என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'குடியேற்ற பகுதிகளில் பொருட்களை இறக்குமதிச் செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடைவிதிக்கவேண்டும். ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்பிராந்தியத்திற்கு பிரதிநிதிக் குழுவை அனுப்பவேண்டும். இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் துரிதமாக நடக்கும் சூழலில் அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது.' இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியின் ரொமானோ ப்ரோடி, கியுலியானோ அமாட்டோ, ஜெர்மனியின் ரிச்சார்ட் ஃபோன், ஹெல்மட் ஸ்கிமட், அயர்லாந்தின் மாரி ராபின்சன், ஸ்பெயினின் ஃபிலிப் கோன்சாலஸ், நார்வேயின் தோர்வால்ட் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், கமிஷனர்களும் இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
ஆனால், ஐரோப்பிய யூனியன் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.
தலைவர்களின் கோரிக்கைக்கு இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment