Search This Blog

Dec 24, 2010

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சகல குடும்பங்களையும் உள்ளடக்கிய திட்டம் தேவை.


முஹம்மது சரீப்
புலிகளுடான இறுதி யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்   பார்த்ததை விட குறைந்தளவிலேயே உள்ளது. மன்னார் மாவட்டத்தின் சில முஸ்லிம் குடியிருப்புகள் 1991இன் ஆரம்பத்திலேயே இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.  இதனால் மன்னார் நகரப்பகுதி முஸ்லிம்கள் 1992 க்கு பிற்பாடு மன்னார் நகர் சென்று சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
வவுனியா-மன்னர் வீதியின் இடைநடுவே புலிகள் இராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்நததால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. அத்துடன் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் வீடு கடைகள் கட்டிடங்கள் என்பன புலிகளாலும் அவர்களைச் சார்ந்த சில விஷமிகளாலும் அழிக்கப்பட்டிருந்தன விரிவாக பார்க்க இந்த காரணங்களினால்  இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற விரும்பவில்லை.  ஆனால்  அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் அவர்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் இறுதி யுத்தத்துக்கு முன்பிருந்த காலத்திலிருந்தே மன்னார் மாவட்ட முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மீளக்குடியேற ஆரம்பித்திருந்தனர்
அவர்களுக்கு அமைச்சர் அவர்களும் தன்னாலான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததுடன் மீள்குடியேற்ற நிவாரணங்களையும் வழங்கியிருந்தார். இதனால் மன்னார் மாவட்டத்தில் 10 விழுக்காடு முஸ்லிம்கள் மீளக்குடியேறியுள்ளனர். இன்னும் 10 விழுக்காடு மக்கள் மீளக்குடியேறும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனா;. இவா;களில் பெரும்பாலானவா;கள் தொழில்கள் சரியாகக் கைகூடும் பட்சத்தில் நிரந்தரமாக அங்கு குடியேறிவிடுவர்.
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மந்ந கதியிலேயே நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஒரு சில குடும்பங்கள் ஏற்கனவே குடியேறியுள்ளன. முல்லைத்தீவு தண்ணீரூற்றிலும் சில குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. முல்லைத்தீவு நகரப்பகுதி ஏற்கனவே சுனாமியாலும் பின்னர் யுத்தத்தினாலும் பாதிப்படைந்ததால் முஸலிம்களின் வீடுகளும் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவடைந்துள்ளது. இந்த முஸ்லிம்களுக்கு வீடுகளை அமைத்து திட்டமிட்ட  முறையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் அவர்களில் மேலும் சிலர் மீளக்குடியேறுவர் என்பதில் ஐயமில்லை.
ஆனால் யாழ்ப்பான முஸ்லிம்களை பொருத்த மட்டில் அவர்களின் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் வீடுகள் கடைகள் என்பன சம்பூ ரணமாக அழிக்கப்பட்டு சோனகரிஸ்தான் எனப்படும் அவர்களின் பிரதேசம் ஒரு யுத்த சூனியப் பிரதேசம் போல் காட்சியளிக்கின்றது. இந்தப்பிரதேசத்தை மீளக்கட்டியமைக்க அரசாங்கம் இதுவரை எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில தனவந்தர்கள் ஒன்று பட்டு தமது நிதியையும் இதற்கென மக்களிடமிருந்து திரட்டப்பட்ட சில உதவிகளையும் கொண்டு ஐந்து பள்ளிவாசல்களை மீள நிர்மானித்துள்ளனர். ஒஸ்மானியா கல்லூரியின் எஞ்சியிருந்த சில பகுதிகளை திருத்தி பாடசாலையையும் செயற்பட வைத்துள்ளனர். ஆனால் வீடுகளை மீளமைக்க புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு  எதையுமே வழங்காததால் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது.
யாழ்ப்பாணம் சோனகரிஸ்தான் பகுதியில் காணப்படும் ஹதீஜா கல்லூரி மதரஸா பாடசாலை மஸ்ரஉத் தீன் பாடசாலை சின்ன ஹதீஜா என்பன முற்றாக அழிவடைந்தே காணப்படுகின்றன. ஓஸ்மானியா கல்லூரியை பொருத்த மட்டில் அப்பாடசாலையில் காணப்பட்ட ஏழு கட்டடங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு  கட்டடத்தின் கீழ்ப்பகுதி மட்டும் திருத்தப்பட்டு பாடசாலை இயங்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகிவிட்டதால் அதை முற்றாக அகற்றிவிட்டே புதிய கட்டிடம் அமைக்க வேண்டியுள்ளது.
2002ல் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையின் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஆயிரத்துக்குமேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்துடன் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். மேலும் 35 குடும்பங்கள் அக்காலப்பகுதியல் மீளக்குடியேறியிருந்தனர். ஓஸ்மானியா பாடசாலையும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவ்வாறானவர்களை புலிகள் அதிகபட்ச வரிகளை விதித்தும் சந்தேகம் என்ற தோரணையில் விசாரணை நடத்தி பயமுறத்தியும் முஸ்லிம்களின் வன்னியுடான போக்குவரத்தை தடுத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எண்ணத்தை சிதறடித்திருந்தனர். 2006ல்  ஏ-9 வீதி மூடப்பட்டதால் யாழ்ப்பாண முஸ்லிம்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் விமானம் மூலமும் கப்பல் மூலமும் பொருட்களை யாழ் கொண்டு சென்று விற்று வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டனர். இந்நிலையில் இன்று யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது.  ஆனால் 120 குடும்பங்களே மீளக்குடியேறியுள்ளனர்.
2010இன் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறுவதில் முனைப்புடன் செயற்பட்டனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட யாழ் முஸ்லிம்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளியூர் முஸ்லிம்களும் வியாபார நிமித்தம் யாழ்ப்பாணத்தில் எப்போதும் காணப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இரண்டு பள்ளிகளில் ஜும்ஆ நடாத்துமளவுக்கு சனப்புளக்கமிருந்தது.
இந்நிலையில் யாழ் மாநகர சபை நகரப்பகுதியில் காணப்பட்ட நடைபாதை வியாபாரத்தை தடுத்தது. இதனால் முன்னூருக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களிடம் பணியாளார்களாக வேலைசெய்த 1200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இம்முஸ்லிம்களுக்கு வேறு இடத்தில் கடைகள் தருவதாக கூறிய நகர நிர்வாகிகள் கட்டப்பட்ட புதிய கடைகளை முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. இது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு செயலா என முஸ்லிம்கள் சந்தேகப்படுகின்றனர். முஸ்லிம்கள் செய்த இன்னொரு வியாபாரம் பழைய இரும்புகளை வாங்கி கொழும்புக்கு ஏற்றி விற்பதாகும். இந்த வியாபாரத்தை இராணுவ  பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக்கூறி இராணுவம் தடுத்து விட்டது. இதனால் இரும்புத் தொழில் செய்துவந்த 500 இக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழில்களை முஸ்லிம்கள் செய்து வந்ததற்கான காரணங்கள் அவர்களிடம் கடைகளை வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து அதில் தொழில் செய்வதற்கு போதுமான பணமில்லாமையாகும். ஏற்கனவே புலிகள் அவர்களின் பணம் நகை பொருட்கள் கடைகள் என்பவற்றை கொள்ளையடித்து அவர்களை அகதிகளாக்கியிருந்தனர். கடந்ந 20 வருட காலத்தில் இம்முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காணப்பட்ட பொருளாதார நிலமை அவர்களின் வாழ்வியழை முன்னேற்றியிருக்கவில்லை.
அரசாங்க உதவிகள் புனா;வாழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று போலவே கடந்த 20 வருடங்களாக ஏமாந்து வாழ்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸை சோர்ந்தவர்கள்  8 வருடங்களுக்கு மேலாக புனர்வாழ்வமைச்சை தம் கையகப்படுத்தி வைத்திருந்த போதிலும் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகவேயிருந்தனர். அமைச்சர் றிஸாட்டுடைய காலத்தில் முழுமையாக அவரது பணியை நிறைவேற்ற அவருக்கு வழங்கப்பட்ட பட்ட ஆறு வருடங்கள் போதாமல் போய் விட்டது. இந்நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புனர்வாழ்வமைச்சை கேட்டு வாங்கியதால் என்ன பிரயோசனம் என்ன என்பதாக யாழ் முஸ்லிம்கள் அங்கலாய்க்கிறார்கள்.
இங்கு நாம் நோக்க வேண்டிய இன்னொரு விடயமுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் மன்னாரைச் சோர்ந்தவர்களுக்கே ஆறு வருடங்களில் புனர்வாழ்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் போதாமலிருந்தது. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்கள் 14 நாட்களுக்குள் யாழ் செல்ல வேண்டும் என்பதாக அரசாங்கம் பணித்துள்ளது. வேருடன் பிடுங்கப்பட்ட ஒரு சமுதாயம் இருபது வருடங்களின் பின்பு எவ்வாறு குறுகிய அவகாசத்தில் அங்கு சென்று மீளக்குடியேற முடியும். 14 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் எப்படி சாத்தியமாகும் என்பதை அறியாதவர்கள் எல்லாம் அரசாங்கத்தில் இருப்பது ஆபத்தானது.
மேலும் புத்தளம் பக்கா பள்ளியில் ஹஜ்ஜ}ப் பெருநாள் குத்பாவில் விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கே. வடக்கு முஸ்லிம்கள் புறமுதுகு காட்டி ஓடி வந்தவர்கள். அவர்கள் புத்தளத்தை விட்டு வெளியேறி தமது பிரதேசங்களுக்கு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்பதாக அப்துல்லாஹ் மௌலவி என்பவரால் பயான் செய்யப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஏன் ஹிஜ்ரத் செய்து வெளியேறிச் சென்றார்கள். நபியவர்களின் ஹிஜ்ரத்தை புறமுதுகு காட்டி ஓடியது என்று கூறலாமா? யுத்தத்திலிருந்து தானே புறமுதுகு காட்டி ஓட முடியும். யுத்தமில்லாத ஓர் சூழ்நிலையில் ஆயுதங்களோ அல்லது யுத்தத்துக்கான தயாரிப்புகளோ இல்லாத ஒரு ஊர் எவ்வாறு உலகில் முதன்மை பெற்று விளங்கிய பயங்கரவாத ஆயுதக்குழுவைச் சோர்ந்த இரண்டாயிரம் பேர்  தம்மை சுற்றி வளைக்கும் போது மோதுவார்கள். மதீனா வாசிகள் மீது ஜிகாத் கடமையானது போல்  புத்தளம் முஸ்லிம்கள் மீதும் புலிகளுக்கெதிராக யுத்தம் செய்வது கடமையல்லவா? இது கடந்த இருபது வருடத்துக்கு முன்பு வாலிபராக இருந்த அந்த அப்துல்லாஹ் மௌலவி மீதும் கடமையல்லவா? ஓற்றுமையாக இருக்க வேண்டிய ஒரு சமுதாயத்தில் இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒற்றுமையை குழைத்து கொலையை விட ஒரு கொடிய பாவம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபி (ஸல்) அவாகளின் காலத்தில் மதீனாவாசியாக இருந்திருந்தால் மக்கா வெற்றிகொளளப்பட்டவுடன் நபியவர்களை மதீனாவிலிந்து வெளியேற்றி மக்காவுக்கு அனுப்பியிருப்பார் போலும்.
புத்தளம் வந்தோரை வாழவைத்த ஊர். புலிகளால் விரட்டப்பட்டு நிர்க்கதியாக அகதியாக வந்தவர்களை புத்தளத்து முஸ்லிம்களே முதலில் வரவேற்றார்கள். அவர்களில் பெரும்பாலானவாகள் ஏழைகளாக இருந்த போதும் தமது சாப்பாட்டில் ஒரு பங்கை அநாதரவாக வந்திறங்கிய வடமாகாண முஸ்லிம்களுக்காக வழங்கி அவர்களின் பசியை போக்க உதவினார்கள். புத்தளம் 1990களில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாக விளங்கியது. இன்று புத்தளம் புதிய தோற்றம் பெற்று புத்துணர்வுடன் காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்தால் -ஒரு காரணம்- அங்கு பணப்புளக்கம் அதிகரித்து மக்களின் வருமானமும் சேமிப்பும் பெருகியதால் தான் என்பதை நாம் உணர வேண்டும்.
புத்தள பூர்வீக மக்களுக்கு  பல்கலைக்கழக அனுமதி மற்றும் அரச வேலை வாய்ப்புக்களில் சில பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ள போதும் அவற்றை விடுத்து ஏனைய துறைகள் அனைத்திலும் புத்தளம் இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. புத்தளத்தின் பூர்வீக குடிகள் அரசியல் ரீதியாக ஒற்றுமையின்மையாலும் விட்டுக்கொடுக்கும் தன்மை சமுதாய நலனை முன்னிருத்தி செயற்படும் தன்மை என்பன இல்லாமையாலும் அரசியல் அநாதைகளாக கடந்த இரண்டு தசாப்தங்களாக காணப்படுகின்றனர் . ஆனால் வடமாகாண முஸ்லிம்களின் வரவால் ஏற்பட்ட பாடசாலை இடநெருக்கடிக்கு பகரமாக புத்தளம் மாவட்டத்தில் 22 முஸ்லிம் பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள் மறைந்த அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் தலைவருமாகிய அஸ்ரப் அவர்களால் அமைத்துக்கொடுக்கப்பட்டது. புத்தளம் நூர்பகுதியில் ரயில்வே நிலையம்  கூட வடமாகாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.    எனவே வடமாகாண முஸ்லிம்களின் வரவு புத்தளத்துக்கு புத்துணர்ச்சியையும் சமுதாய பலத்தையும் கொடுத்துள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு தண்ணீரூற்று கிளிநொச்சி  நாச்சிக்குடா பிரதேச முஸ்லிம்கள் புத்தளத்துடன் பின்னிப்பிணைந்து விட்டனர். மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விழுக்காடு அதிகமாக இருந்த போதிலும் அவர்களில் எஞ்சியவர்கள்  எதிர் காலத்தில் புத்தளத்தை தமது பூர்வீக பிரதேசமாகக் கொள்ளப்போகிறவர்களின் சனத்தொகை ஏனைய பிரதேச முஸ்லிம்களின் தொகையை விட அதிகமானதாகும். எனவே புத்தளத்தை விட்டு இம்முஸ்லிம்களை வெளியேற்ற நினைப்பது மடத்தனமான காரியமாகும். முற்றமாக அவர்களையும் உள்ளடக்கி எவ்வாறு எதிர்காலத்தில் அரசியல் கல்வி மற்றும் மார்க்கப்பணிகளை முன்னெடுக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே சிறந்த செயற்பாடாகும்.
அதேவேளை இப்போது இடம்பெயர்ந்து வாழும் சிலர் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேற ஆவலாக உள்ளார்கள். ஆனால் அவ்வாறானவர்களுக்குள்ள  பிரச்சினைகள் அங்கு சென்று என்ன தொழில் செய்வது அதற்கான மூலதனத்தை எவ்வாறு பெருவது என்பவை தான். சாதாரணமாக ஒரு குடியிருப்பு தொழிலை மையமாக வைத்தே உருவாகும். ஓரிடத்தில் விவசாயம் செய்ய முடியுமென்றால் அங்கு விவசாயிகள் குடியேறி ஒரு விவசாயக் குடியிருப்பொன்று உருவாகும் அதே போன்று மீனவத் தொழில் ஒரு கடற்கரை பிரதேசத்தில் செய்ய முடியுமாயின் அங்கு ஒரு மீனவக் குடியிருப்பு உருவாகும். அதேகோட்பாடு தான் நீண்ட காலத்தின் பின் மீளக்குடியேறுபவர்களின் உள்ளத்திலும் காணப்படும். ஓரிடத்தில் தொழிலும் அமைந்து அந்த இடம் குடியிருக்க பாதுகாப்பாகவும் விளங்கினால் மக்கள் தாமாகவே தமது சேமிப்பிலிருந்து வீடு கட்டி வாழத் தொடங்கிவிடுவார்கள்.
எனவே மீள்குடியேறும் பிரதேசங்களில் தொழில் வாய்ப்பை உருவாக்க அதிகமான வளங்களை செலவழிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் வியாபார நிறுவனமொன்றையோ அல்லது தமது வியாபாரத்தின் கிளையொன்றையோ அவ்வப்பிரதேசங்களில் ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் அப்பிரதேசத்தை சோர்ந்த இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். அவர்களில் சிலர் நாளடைவில் அங்கேயே குடியிருந்து விடுவர். மேலும் அரசாங்க வேலை வாய்ப்புகள் மீளக்குடியேற வேண்டிய பிரதேசத்தை மையமாக வைத்து பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
1990இல் வெளியேற்றத்துக்கு முன்பு யாழ் சோனகரிஸ்தான் பகுதியில் ஏறக்குறைய 2100 வீடுகள் இருந்தன. இன்று அவற்றில் நாற்பது வீடுகளே எஞ்சியுள்ளன. தமிழர் சிலர் அவ்வீடகளில் குடியிருந்ததால் இந்த வீடகள் தப்பியிருந்தன. ஆனால் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் யாவும் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த கூரைகள் கதவுகள் யன்னல்கள் சுவர் கல்லுகள் என்று எல்லாவற்றையும் உடைத்து சில தமிழர்கள் வியாபாரம் செய்தனர். சில வீடகளின் அத்திவாரங்கள் கூட தோண்டியெடுக்கப்பட்டு அதன் கற்கள் விற்கப்பட்டுள்ளன. இக்கற்களை வாங்கிய தமிழர்கள் தமது வீட்டைக்கட்டியுள்ளனர். இந்த வீடுகளிலிருந்த கட்டில்கள் அலுமாரிகள் சமையல் பொருட்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக வைத்து தமிழர்களுக்கு விற்கப்பட்டது. எஞ்சிய  பொருட்கள் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு கூட கொண்டுசென்று விற்கப்பட்டுள்ளது. சோனகரிஸதானை பார்க்க 2002ம் ஆண்டு திரும்பிச் சென்ற முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இவ்வாறான ஒரு பேரழிவு யாழ்ப்பாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ  ஏன் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்டிருக்கவில்லை.
அடுத்தடுத்து 30 -40 அடி அகலமான காணிகளுக்குள் காணப்பட்ட வீடுகள் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் இப்படி எல்லாமே நொருக்கப்பட்டுக் கிடந்தால் அதன் உடமைதாரார்களுக்கு எப்படியிருக்கும். இந்த அதிர்ச்சி தான் மீள்குடியேற்றத்தை தடுக்கும் மனோவியல் ரீதியான முதல் காரணமாகும்.
சிறிலங்கா வே எனப்படும் நிறுவனம் யாழ்ப்பாண முஸ்லிம்களில் 150 குடும்பங்களின் தலைவர்களை மீளக்குடியேற்றும் நோக்கத்துடன் அழைத்துச் சென்றுள்ளது. இவ்வாறான வற்புறுத்தல் ரீதியிலான குடியேற்றங்கள் வெற்றியளிக்கப் போவதில்லை. 250 கிலோமீற்றருக்கு அப்பால் வாழும் ஒரு சமூகத்தை திடீரென கொண்டுபோய் குடியமா;த்த முடியுமா. தெளிவான திட்டமிடல் இன்றி செய்யப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிப்போh; சற்று சிந்திக்க வேண்டும். வீடுகளை முதலில் கட்டிக்கொடுத்து விட்டு அவர்களை கூட்டிச்சென்றிருந்தால் அவர்கள் தனிமையாக அன்றி குடும்பத்துடன் அங்கு சென்றிருப்பார்கள். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இவ்வாறான ஒரு நடவடிக்கை சாலப்பொருத்தமற்றதாகும்.
மக்களுக்கு முதலில் அவகாசம் வழங்கப்படவேண்டும். இடம்பெயர்ந்து இன்னோர் பிரதேசத்தில் குடியேறிவிட்ட ஆழ வேரூண்றிவிட்ட ஒரு சமூகத்தை எவ்வாறு ஒரு தெளிவான திட்டமின்றி அறைகுறை வாக்குறுதிகளுடன் இடம் பெயர்த்து கொண்டுசெல்வது என்பது பற்றியெல்லாம் பொறுப்பாளார்கள் சிந்திக்க வேண்டும்.
சிறிலங்கா வே நிறுவனத்தின் யாழ் பயணத்தைத் தொடர்ந்து புத்தளத்திலுள்ள வடமாகாண முஸ்லிம்கள் நிவாரணம் நிறுத்தப்படப் போவதாக கூறப்பட்டு வடக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இவ்வாறு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 1090 குடும்பங்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 650 குடும்பங்களும் தமது பிரதேசங்களுக்கு சென்றனர் . இவர்களுக்கு மண்வெட்டி அளவாங்கு போன்ற பொருட்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பலர்தங்குவதற்கு இடமின்றி சிறமப்பட்டதுடன் தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களுக்கு உடனடியாகத் திரும்பிவிட்டனர்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சரியாக திட்டமிடப்பட்டு ஒரு பொறிமுறையாக செய்யப்பட வேண்டும். அளவாங்கு மண்வெட்டி என்பவற்றை வழங்குவதைவிட அரசாங்கமே காணிகளை துப்பரவாக்குவதிலிருந்து கட்டிடங்களை மீளமைப்பது வரையான வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சர் றிஸாட் தனது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். மேலும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்பதையும் யாழ் மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பாh;த்துள்ளார்கள். மேலும் வடக்கை பூர்வீகமாகக் கொண்ட பலரது குடும்பங்கள் இன்று கிளைவிட்டு பெரும் பரம்கரைகளாக உருவாகியுள்ளன. இவர்கள் எல்லோரும் தமது பூர்வீக பிரதேசங்களில் மீளக்குடியேற அவர்களுக்கு காணிகள் இடங்கள் இல்லை. இவ்வாறானவர்களில் இரண்டுவிதமான மக்கள் உள்ளனர்.
ஒரு சாரார் தாம் தற்போது வாழும் பிரதேசங்களிலேயே குடியிருக்கு விரும்புபவர்கள். மற்றொரு சாரார் தமது பூர்வீக பிரதேசங்களுக்கு சென்று வாழ விரும்புவோர். இவர்களின் விருப்பங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களுக்கான நிவாரணப்பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படாதவிடத்தில் பிறகு அவர்கள் முற்றாக கைவிடப்படுவார்கள். எனவெ அமைச்சர்கள் இது விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة