Search This Blog

Dec 24, 2010

நிலம் விழுங்கும் பூதம்!


அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் இது தொடர்பான செய்திகள் பலவற்றை எமது இணையத்தளம் பதிவு செய்து வருகின்றது இந்த வகையில் ஊடகவியலாளர் மப்றூக் எழுதியுள்ள நிலம் விழுங்கும் பூதம்! என்ற தலைப்பில் ஆக்கம் ஒன்று தமிழ் மிரர் இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த ஆக்கத்தை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது நன்றி தமிழ் மிரர்
மப்றூக்- உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! விரிவாக பார்க்க
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் – இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை! சரி… இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்!
அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது – மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர், அவரின் ஞாபகமாக இக் கிராமத்துக்குச் சூட்டப்பட்ட பெயராகும். இதன் நிஜப் பெயர் ஆலிம்சேனை. இப்போதும் – ஆலிம்சேனை என்றுதான் கணிசமான மக்கள் இந்த இடத்தை அழைக்கின்றார்கள். அந்தப் பெயர்தான் அவர்களுக்குத் தெரியும்!
அஷ்ரப்நகர் – சர்ச்சைக்குரிய தீகவாபியின் எல்லைக் கிராமமாகும். அதனால், அஷ்ரப்நகரையும் சர்ச்சைகள் தொற்றிக் கொண்டே வருகின்றன.
மேற்படி அஷ்ரப்நகர் – காடு சார்ந்த பிரதேசமாகும். நீண்ட வரலாற்றினைக் கொண்ட இக்கிராமத்தில் 1950களில் முஸ்லிம் மக்கள் குடியிருந்ததாக கூறுகின்றார் ஐ.எல்.அலியார் என்பவர். இவர் அஷ்ரப் நகர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவராகக் கடமையாற்றுகின்றார்.
’1952ஆம் ஆண்டுகளில் நாங்கள் இங்கு இருந்தோம். அதற்கு முன்னர் எங்கள் வாப்பா, வாப்பாவின் வாப்பா என்று இருந்திருக்கிறார்கள். இது எங்கள் பரம்பரை நிலம்’ என்று அலியார் மேலும் கூறுகின்றார்.
இவ்வாறானதொரு கிராமத்திலுள்ள 31 பொதுமக்களின் 66 ஏக்கள் பரப்பரவுள்ள காணிகளின் அனுமதிப் பத்திரங்களை அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர ரத்துச் செய்துள்ளதோடு, அந்த மக்கள் அனைவரையும் குறித்த காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்கிற உத்தரவொன்றினையும் பிறப்பித்துள்ளார்.
இதற்கான காரணம்; மேற்படி 31 பேரும் தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கவில்லை என்பதாகும்.
அரசாங்க அதிபர் கன்னங்கர, இந்த முடிவினை எடுப்பதற்கு பின்னணிக் கிளைக் கதையொன்று உள்ளது. அது என்ன என்று இப்போது பார்ப்போம்.
அஷ்ரப் நகர், காடு சார்ந்த பிரதேரம் என்று கூறியிருந்தோமல்லா. ஆதனால், இங்கு யானைகளின் அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகும். அடிக்கடி கிராமத்துக்குள் நுழையும் யானைகள், இங்குள்ள குடியிருப்புக்கள் மற்றும் பயிர்களையெல்லாம் சேதமாக்கி விட்டுச் செல்லும். சிலவேளைகளில் அகப்படும் ஆட்களையும் இந்த யானைகள் தாக்கியுள்ளதாக அஷ்ரப்நகர் வாசிகள் கூறுகின்றார்கள். இதனால் – இந்த மக்களுக்கு யானைகளிடமிருந்து பாதுகாப்பு தேவையாக இருந்தது.
‘இதை சாட்டாக வைத்துக்கொண்டு வனவளத் திணைக்களத்தினர் வந்தார்கள். தாங்கள் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கவுள்ளதாகச் சொன்னார்கள். நாங்களும் சந்தோஷப்பட்டோம். உண்மையாக, வேலியினை அமைப்பதாயின் கிராமத்தின் எல்லையில் அல்லவா அமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்கள் காணிகளின் ஊடாக வேலியை அமைப்பதற்கு முயற்சித்தார்கள். அதை நாங்கள் எதிர்த்தோம். அது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தோம்’ என்கிறார் சர்ச்சைக்குரிய 66 ஏக்கர் காணிகளின் சொந்தக்காரர்களில் ஒருவரான அ.கமர்தீன் என்பவர்.

1970களில் கமர்தீன் – தன் தந்தையாருடன் இப்பிரதேசத்தில் இருந்த காடுகளை வெட்டி காணியாக்கியிருக்கின்றார். இவ்வாறு அவர்கள் காடு வெட்டியெடுத்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அரசாங்கம் 1980ஆம் ஆண்டு உரிய நபர்களுக்கு வழங்கியுள்ளது.
வனவளத் திணைக்களத்தினர் பொதுமக்களின் காணிகளுடாக – யானை வேலி அமைப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பின. இவ்விவகாரத்தை சில முஸ்லிம் அரசியல்வாதிகள்; மேலிடத்துக்கும் கொண்டு சென்றனர். எனவே, இவ்விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமூகமானதொரு தீர்வினைக் காணுமாறு அறுவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்!
அஷ்ரப்நகர் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வந்தார். அவர் மூலம் தமக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்குமென பொதுமக்கள் ஆவலுடன் கூடினார்கள். ஆனால், அரசாங்க அதிபர் அந்தப் பிரச்சினையைத் தலைகீழாகக் கையிலெடுத்தார்.
அதாவது, நீங்கள் குடியிருக்கும் காணிகள் உங்களுக்குரியவைதானா என்பதை நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். எனவே, உங்கள் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினூடாக எனக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு 14 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகின்றேன் என்று கூறிவிட்டு கிளம்பினார் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர!
மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும், கெடுவாக வழங்கப்பட்ட காலத்துக்குள் தமது காணிகளுக்கான அனுதிப்பத்திரத்தின் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்தனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அவற்றை – அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்தார்!
இந்தப் பின்னணியில்தான், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அதனால் அவற்றினை வலுவிழந்ததாகக் கருதி ரத்துச் செய்வதோடு, குறித்த காணிகளில் குடியிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் 01.12.2010 எனும் திகதியிட்ட கடிதமொன்றின் மூலமாக உத்தரவிட்டுள்ளார்.
இங்கு இன்னுமொரு பிரச்சினை ஆரம்பமாகிறது.

அதாவது, இந்த விடயத்தில் அரசாங்க அதிபர் தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரான எம்.ஏ.அன்சில் கூறுகின்றார். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதன் பிறகு – இவ்வாறான காணி அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்வதற்கான அதிகாரம் – பிரதேச செயலாளர் அல்லது காணி ஆணையாருக்கு மட்டுமே உள்ளதாகவும் தவிசாளர் அன்சில் சுட்டிக் காட்டுகின்றார்.
இதுதவிர இன்னுமொரு விவகாரமும் உள்ளது. அஷ்ரப்நகர் மக்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்காமல் இருப்பது போல், தீகவாபியிலுள்ள சிங்கள மக்களில் 184 பேர் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமல் இருக்கின்றனர். அப்படியென்றால், அஷ்ரப்நகர் மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்த சமகாலத்தில் தீகவாபியிலுள்ள குறித்த 184 சிங்கள மக்களின் காணி அனுமதிப்பத்திரங்களையும் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால், உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று அஷ்ரப்நகர் மக்கள் கேட்கின்றார்கள்.
‘இதன்படி பார்க்கும்போது, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தில் தனது இனவாத முகத்தினைக் காட்டியிருக்கின்றார். அவர் இந்த விடயத்தில் நேர்மையுடன் செயற்படவில்லை. இதைத் தவிர வேறொன்றையும் இது விடயத்தில் என்னால் கூற முடியாது’ என்று அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அன்சில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திக் கொண்டார்.
அஷ்ரப்நகர் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவதும் பறிக்கப்படுவதும் இதுவொன்றும் முதல் முறையல்ல! பொன்னன்வெளி, பள்ளக்காடு, ஆள்சுட்டான்வெளி, கரங்கோவட்டை என்று முஸ்லிம்களின் நிலங்களை பேரினப் பூதங்கள் விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில்தான் இப்போது, அஷ்ரப்நகர் பலி கேட்கப்பட்டிருக்கிறது.
தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை அஷ்ரப்நகர் மக்கள் புதுப்பிக்காதமை அவர்களின் குற்றமில்லையா? பிறகெப்படி அரசாங்க அதிபரை நீங்கள் பிழை சொல்லலாம் என்று யாரேனும் எண்ணக் கூடும். அதனால், மேற்படி காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை ஏன் அந்த மக்கள் புதுப்பிக்கவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கடந்த கால யுத்த சூழ்நிலையில் அஷ்ரப்நகர் மக்கள் அங்கிருந்து பல தடவை இடம்பெயர்ந்தனர். மேலும் 1990ஆம் ஆண்டில் 13 முஸ்லிம்களை இப்பிரதேசத்தில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றிருந்தனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பது பற்றி எவ்வாறு ஒருவரால் யோசிக்க முடியும்?!
எனவே, அஷ்ரப்நகர் மக்கள் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமைக்குரிய நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றினை அப்படியே வைத்துவிட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இப்படி நடந்து கொள்வது அநீதியிலும் அநீதி என்பது அந்த மக்களின் கருத்தாகும்.
ஒரு பாரிய மழை பெய்தாலே – மக்களால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதற்காக நாட்டிலுள்ள சில சட்டங்களும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்ற போது, பயங்கரவாதமும் யுத்த சூழ்நிலையும் நிலவிய காலப்பகுதியொன்றில் தமது காணிகளின் அனுமதிப் பத்திரங்களை சிலர் புதுப்பிக்கவில்லை என்பதை ஒரு காரணம் எனத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு – அரசாங்க அதிபர் இப்படிக் காவடியாடுவது நியாயமேயில்லை என்கின்றார் முஸ்லிம் அரசியல்வாதியொருவர்!
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி – காணி ஆணையாளருக்குக் கடிதமொன்றை எழுதியிருப்பதும் இங்கு கவனத்துக்குரியதொரு விடயமாகும். அந்தக் கடிதத்தில் – காணி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமைக்கான நியாயங்களை விளக்கியிருப்பதோடு, குறித்த காணிகளின் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான புதிய காலக்கெடுவொன்றினை வழங்குமாறும் ஹசன் அலி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டம் அம்பாறை மட்டும்தான். ஏற்கனவே அந்தப் பெரும்பான்மையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் – முஸ்லிம்களிடமிருக்கும் நிலங்களும் இப்படியே பறிபோகுமானால், கடைசியில் முஸ்லிம்களுக்கென்று ஒரு ‘கச்சைத்துண்டு’ கூட மிஞ்சப் போவதில்லை!
எனவே, இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு – மக்கள் ‘சும்மா’ இருந்து விடக்கூடாது! பொது அமைப்புக்களும் – மக்களும் இவ்விடயம் தொடர்பில் களத்தில் இறங்க வேண்டும் என்கிறனர் சமூக அக்கறையாளர்கள்.
யானைகளிடமிருந்து நமது நிலங்களை பிறகு காப்பாற்றிக் கொள்ளலாம். முதலில் பூதங்களிடமிருந்து காத்துக் கொள்வோம்!!

No comments:

Post a Comment

المشاركات الشائعة