Search This Blog

Sep 29, 2011

வடக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தீர்வு


முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த விடயத்தை சமுதாய நலன் விரும்பிகள் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
யுத்தங்கள் மூலம் பாரிய உயிரழிவுகளை சந்தித்த ஒவ்வொரு நாடும் பிரதேசமும் இவ்வாறான வன்முறைகளை எதிர் நோக்கியதையே வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னரும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரும் இவ்வாறான நிலமைகள் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தன. இந்த யுத்தங்களில் பல மில்லியன் ஆண் படை வீரர்கள் மாண்டனர்.
இதனால் யுத்தத்தில் பங்கு பற்றிய நாடுகளில் ஆண்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் விபச்சாரம் தலை தூக்கியது. ஆண் துணையின்றி வாழ்ந்த பெண்கள் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆணுக்குப் பதில் குடும்ப சுமைகளை சமாளிக்க பெண்கள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். வேலை செய்யுமிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். இவ்வாறாக பெண்கள் மீதான தொடர் வன்முறைகள் தலைமுறை தலைமுறையான மேற்படி நாடுகளில் காணப்பட்டதால் பெண்கள் சமூகத்தில் தமக்கான அந்தஸ்தை இழந்து விட்டிருந்தனர். இந்த அடக்குமுறைகள் இறுதியில் பெண்களை பணிய வைத்து அவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு வித்திட்டது. இன்று ஐரோப்பாவில் பெருமளவிலான பெண்கள் திருமணம் முடித்துக் கொள்ளாமல் காலத்துக்கு காலம் ஒவ்வொரு நபர்களுடன் குடித்தனம் நடத்துகின்றனர். பாடசாலை மாணவிகள் பாடசாலை காலங்களிலேயே கருவுற்று பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர்.
இன்று அமெரிக்காவில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு பெண் வல்லுறவு புரியப்படுகின்றாள். ஒரு நாளைக்கு 720 பேரும் ஒரு வருடத்தில் 263000 பேரும் பாலியல் வல்லுறவு புரியப்படுகின்றனர். இங்கிலாந்தில் இது நாளொன்றுக்கு 230 பேராகவுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 26000 முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் யுத்த அழிவுகள் கட்டுப்பாடற்ற கலாச்சாரம் மனித உரிமை என்ற பெயரில் ஆண்களை பாதுகாக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் போன்றனவாகும்.
இந்த நிலமை இன்று இலங்கையையும் ஆட்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தி சண்டையிட்டு மாண்டனர். அதே போன்று ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் தமது உயிரை இழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் ஏறக்குறைய எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வாலிபர்களும் சிங்கள பிரதேசங்களில் அதேயளவிலான சிங்கள வாலிபர்களும் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் ஊணமுற்றவர்களாக திருமணம் முடிக்க முடியாத ஒரு நிலையில் வாழ்கின்றனர். யுத்த காலத்தில் நிலவிய அமைதி இன்மை காரணமாக ஆறு இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடியேறியுள்ளனர். அவர்களில் அரைவாசிப் பேர் திருமணமாகாதவர்கள். இவ்வாறான யுத்த உயிரிழப்புகள் மற்றும் புலம் பெயர்வுகளினால் உள்நாட்டில் ஆண்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. மறுபுறம் குடும்பங்கள் ஆண் தலைமையின்றி காணப்படுகின்றன.
இந்நிலையில் ஆண்களின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களின் நிலமையினை ஆராய்ந்தால் தனியாக இருக்கும் பெண்களே அதிகமாக வன்முறைகளுக்கு உள்ளாவதைக் காணலாம். தனியாக அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் தனியாக வீட்டிலிருப்பவர்கள் வீட்டில் ஆண் துணையின்றி இருப்பவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்யும். அப்படியானால் தீர்வு என்ன என்று பார்த்தால் படிமுறையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.
முதலாவதாக தனியாக இருக்கும் பெண்கள் விதவைகள் என்பவர்களுக்கு சட்டரீதியான துணைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்புடன் இந்த விடயத்தில் செயல்பட வேண்டும். வடக்கில் ஐந்து இலட்சம் பெண்களும் மூன்று இலட்சத்துக்கு சற்று கூடிய தொகையிலேயே ஆண்கள் உள்ளனர். எனவே தகுதியுள்ள வசதியுள்ள சில ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க முடியும் .
இரண்டாவதாக இந்துக் கலாச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் 30 வயதுக்கு பின்பே திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் பெண்களினதும் ஆண்களினதும் உணர்ச்சி நரம்புகள் 15 வயதிலேயே வேலை செய்யத் தொடங்கிவிடுவதுடன் அந்த உணர்ச்சிகளை அடக்குவதற்கான வாய்க்கால்களையும் அவை தேடவைக்கின்றன. அதனால் தான் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகள் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். எனவே காலம் தாழ்த்திய திருமணங்கள் தவறுகளுக்கு காரணமாக அமைந்து விடக்கூடியவை. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் திருமணத்தை முடிப்பதற்கு தகுதியானவர்களாக காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை முடித்து வைப்பதே சிறந்தது.
மூன்றாவதாக பெண்கள் தனியாக அலுவலகங்களில் வேலை செய்வதையே தனியாக பிரயாணங்கள் செய்வதையோ தவிர்க்க வேண்டும். வேலை வாய்ப்பை பெறும் அவசரத்தில் அதிகமான பெண்கள் தமது பாதுகாப்பு பற்றிய விடயங்களை மறந்துவிடுகிறார்கள். மேலை நாடுகளில் வல்லுறவு புரியப்படும் பெண்களில் 7 வீதமானோர் அலுவலகங்களில் வைத்தே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
அடுத்ததாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் செல்லும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்கிறார்களா அவர்களது நண்பர்கள் யார் என்று ஆராய்ந்து அவர்கள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக பெண்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பல விதிமுறைகளை பின்பற்றும் அதேவேளை ஆண்கள் பெண்கள் விடயத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் வல்லுறவு புரிபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதால் அத்தண்டனைக்கு பயந்து பலர் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலாருக்கும் பகிரங்கமாக வைத்து கசையடிகள் வழங்கப்படுகின்றன. ஆண்கள் நான்கு வரையான பெண்களை திருமணம் முடிக்க அனுமதிக்கப்படுவதால் விதவைகள் தனியாக உள்ள பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கின்றது. முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணமகள் கொடை கொடுப்பதால் பெண்களைப் பெற்ற குடும்பங்கள் வரதட்சனை பிரச்சினைகளை எதிர் நோக்குவதில்லை.
இந்து கலாச்சாரம் பலதார மணம்புரிதலை ஏற்றுக் கொள்வதில்லை. விதவைகளும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தில் விதவைக்கும் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் முடிப்பதனூடாக விகிதாசார அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் அது ஒரு தீர்வாக அமைகின்றது. யுத்தம் என்பது இனியெப்போதும் வேண்டாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அதிகமாக பிரித்தானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் அங்கு ஆண்கள் குறைவடைந்து பெண்கள் அதிகமாகி அதனால் விபச்சாரம் போன்ற சமூகச் சீரழிவுகள் தலை தூக்கின. இதனால் ஆண்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப் பட்டு பிரித்தானிய பெண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டனர்.. மேலதிக பற்றாக்குறையை நிரப்பவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் திருப்பியழைக்கப்பட்டனர். இதனால் தான் இலங்கையும் இந்தியாவும் 1948இல் சுதந்திரம் பெற்றன.
இன்று அவ்வாறானதொரு நிலை தான் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் காணப்படுகிறது.எனவே இஸ்லாமிய வழிமுறைகளை இப்பிரதேசங்களில் உள்வாங்குவதன் மூலமாக அதிகரித்து வரும் பெண்கள் தொகையாலும் ஏனைய காரணங்களாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது நோக்கப்பட வேண்டும்.

thanks: Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة