Search This Blog

Aug 20, 2011

இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது




இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு தாக்குதலுக்குதளை தாம் நடத்தவில்லை என்று காஸாவை ஆளும் ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ள போதும் இஸ்ரேல் விமாங்கள் காஸா மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.தாக்குதலுக்கான தொடர்பை மறுத்துள்ள ஹமாஸ் இஸ்ரேல் தாக்கினால் திருப்பி தாக்குவோம், ஹமாஸ் கைகளை கட்டி பார்த்து கொண்டிருக்காது என்று தெரிவித்திருந்தது.
இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் தாக்குதலில் இரண்டு இராணுவதினர் , மற்றும் ஐந்து இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு சில மணி நேரத்தில், இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு Popular Resistance Committees -PRC என்ற காஸாவில் இயங்கும் ஹமாஸுடன் இணையாத போராளிகள் அமைப்பு ஒன்று பொறுப்பு என்று இஸ்ரேல குற்றம் சாட்டியுள்ள போதும் அந்த PRC அமைப்பு அதை மறுத்துள்ளது.
இந்த இஸ்ரேல தாக்குதில் PRC அமைப்பின் தலைவர் ஒருவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் கொல்லபட்டுள்ளனர். என்று இஸ்ரேல தெரிவித்துள்ளது. இதேவேளை சில மணித்தியால இடைவெளியில் காஸா மீது இஸ்ரேல் இரண்டாவது தடவையாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் ஏழு பலஸ்தீனர்களை  தாம் கொன்றுள்ளதாக இஸ்ரேல்  தகவல்கள்  தெரிவிக்கின்றது .இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் ஹாமாஸ் இஸ்ரேல மீது திருப்பி தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரமழான் கண்ட பத்ர் களம்




இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். இந்த போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த போர் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.
உண்மையில் இந்த களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிகொண்டது. தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர், சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர் இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். 
இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நீரூபித்தனர் இந்த கொள்கை உணர்வினகாரனமாக அதிக எண்ணிக்கை கொண்ட பலமான படையை ஒரு சிறிய படை எதிர்கொண்டது வெற்றிபெற்றது.


Aug 17, 2011

அமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் – ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கை இங்கு முழுமையாக  பதிவு  செய்யபடுகின்றது:
ஊடக அறிக்கை: அண்மைக் காலமாக நாட்டின் அனேகமான பகுதிகளில் மர்ம மனித நடமாட்டம் பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில ஊர்களில் அவ்வாறு சந்தேகத்திற்கிடமான சிலர் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் சிலர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இச்செய்திகள் வதந்திகள் எனவும், சில பைத்தியக்காரர்களது செயலெனவும் அரசியல் இலாபம் கொண்டன எனவும் பேசப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் அமைதியை நிலைநாட்டும் கடமையை காவல்துறையினர் கையாளும் போது, பொதுமக்கள் சட்டத்தை தம்கையிலெடுக்கலாகாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் காவல்துறையோடு மோதலில் ஈடுபடுவதும் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள அரச, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் சாணக்கியமான செயலல்ல. இப்பீதி நிலைமையை இல்லாதொழிக்கும் விடயத்தில் காவல்துறையினரோடு ஒத்துழைக்கலாம், சந்தேகத்திற்கிடமானவர்களைப் பிடித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
அதேநேரம் அரசும் காவல்துறையினரும் பீதியற்ற நிலைமையையும் சகஜ வாழ்வையும் ஏற்படுத்தும் விடயத்தில் கூடிய கரிசனை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறது. இந்நாட்டுப்பிரஜைகள் எவரும் நிம்மதியற்று வாழ்வதை எவரும் அங்கீகரிக்கமாட்டார்கள். எந்தச் சமூகத்தவரகளாயினும் நிம்மதியோடு வாழவே விரும்புவர்.
இந்நிலையில் அதற்கு குந்தகமான நிகழ்வுகள் மக்களை ஆக்குரோஷம் செய்யவே தூண்டிவிடும். எனவே இம்மர்ம மனிதர்களின் உண்மை நிலையை அறிந்து நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடப்பாடு அரசுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் உரியதாகும் என்பதை அ.இ.ஜ.உ வலியுறுத்திக் கூறுகிறது.
அதேநேரம் நாங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது. அல்லாஹ்வின் உதவியை நம்பி நிற்கும் நாம் துஆ ஓதும் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக நோன்பில் ஓதப்படும் குனூத்திலும் துஆக்கேட்குமாறு அ.இ.ஜ.உ முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறது.
‘ஹிஸ்னுல் முஸ்லிம்” ‘அல் அத்கார்” போன்ற நூல்களில் உள்ள ‘துஆவுல் கர்ப்” போன்றவையும் ‘அல்லாஹும்மஸ்துர் அவ்ராதினா வஆமின் ரவ்ஆதினா” என்றுள்ள துஆவையும் அதிகமாக ஓதும்படி ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கிறது.
இவ்வண்ணம்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Aug 13, 2011

கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமும்….!


இனாமுல்லாஹ்: கடந்த பல தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதர்களின்அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளமையால் மக்கள் பீதியும் அச்சமும் கொண்டுள்ளனர்,
குறிப்பாக மாதர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளை பாது காப்பு தரப் பினரால் காத்திரமான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படாமையும் , கைது செய்யப்படுபவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக இன்றைய ஜும்மா குத்பாக்களில் உலமாக்கள் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசன்களைப் பெற்று மிகவும் பொறுப்புடனும், நிதானமாகவும் மக்களை அறிவுறுத்தல் வேண்டும், தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லது கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட “மஜ்லிஸ் அல் ஷூரா” க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது…அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள /கொல்ல நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஊடக வியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை சரிவரச் செய்வதன் மூலம் இந்த செய்தியை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பதோடு இவ்வாறான அறிவுறுத்தல்களை வாசிக்கும் ஏனைய சகோதரர்களும் தமது ஊர் ஜமாத்துகளின் அவதானத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
-lankamuslim-

Aug 8, 2011

துருக்கிய இராணுவத்தின் அதிகாரப் பற்கள் பிடுங்கப்படுகின்றது


M.ரிஸ்னி முஹம்மட்
 துருக்கியை சிவில் தேசமாக மாற்றும் போராட்டத்தில்  மூன்றாவது தடவையாக  அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசு தொடர்ந்தும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது. துருக்கியின் அதிமுக்கிய நான்கு இராணுவ தளபதிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தாமாக இராஜினாமா செய்தார்கள் என்பதை விடவும் துருக்கி அரசாங்கம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது என்பதுதான் சரியானது.
அதை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குள் புதிய இராணுவ தளபதிகளை நியமித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு இறுதியாக உருவாக்கப்பட்ட உருவாக்கப்பட்ட துருக்கி சட்ட யாப்பும்  இராணுவத்திற்கு அரசாங்கத்தை கட்டுபடுத்தவும் , அரசாங்க தலைவர்களை பதவி நீக்கவும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
இறுதி கிலாபத் என்று வர்ணிக்கப்படும் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் கலீபா துருக்யின் அன்றைய இராணுவ தளபதியாக இருந்த முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவனால் பதவி நீக்கப்பட்டு, கிலாபத்தும் உலகில் இருந்து 1924.03.03 அன்று அழிக்கப்பட்டது.
 துருக்கியில் மீண்டும் இஸ்லாம் எழுச்சி பெறாதிருக்க மேற்கு எஜமான்களின் ஆலோசனைப்படி அன்றில் இருந்து துருக்கியில் இராணுவத்தில் கையில் கூடிய அதிகாரம் வழங்கும் சட்ட நடைமுறை இருந்து வருகின்றது. இந்த நிலையில் துருக்கி தற்போதைய இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கத்துக்கும் , இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் இடையில் கடுமையான முறுகல் நிலை தொடர்கின்றது.
இராணுவத்தில் ஒரு பிரிவினர் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க சதிப்புரட்சி ஒன்றை திட்டமிட்து செய்ய இருத்த போது அவர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டனர், துருக்கி தலைநகர் அங்காராவில் இரண்டு மஸ்ஜிதுகளில் குண்டுகளை வெடிக்க செய்து பாரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் துருக்கி அரசு மக்களை பாதுகாக்க தகுதியற்றது என்ற குற்றசாட்டை முன்வைத்து அரசாங்கத்தை கவிழ்க்க இருந்தமை அரசால் கண்டுபிடிக்க பட்டதை தொடர்ந்து பல இராணுவ தளபதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது இஸ்லாமிய மார்க்க விரோத முறையில் உருவாகப்பட்டுள்ள இராணுவத்திற்கும் அரசாங்கதிற்கும் இடையிலான முறுகலை அதிகரித்திருந்தது.  இந்த நிலையில் பெரும் மக்கள் ஆதரவை பெற்று மூன்றாவது தடவையாகவும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆளும் தரப்பு இராணுவத்தின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பிடிங்கி வருகின்றது.
துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசு இராணுவத்தில் எல்லைமீறிய அதிகாரத்தை ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கி வருகின்றது. இந்த தொடரில் துருக்கி இராணுவத்தின் தளபதியாக பதவி வகித்து வந்த ஐசிக் கொசானீர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் புதிய தளபதிகளை நியமிப்பதில் கடந்த சில நாட்களாக கடுமையான இழுபறிக்கு பின்னர் புதிய  தளபதிகள் நியமிக்க பட்டுள்ளனர்.
எனினும் புதிய நியமங்களிலும் அரசு விரும்பாத தளபதிகள் இடம்பெற்றுள்ளமை துருக்கி இராணுவ தலைமை அவைக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகார போட்டியை காட்டுவதாக உள்ளது. தற்போது  தரைப்டை தளபதியாக நியமிக்கபட்டுள்ள ஹய்ரி கிவிரிகொக்லு என்பவர், சைபிரஸ் நாட்டின் நிலைகொண்டுள்ள துருக்கி இராணுவத்திற்கு தளபதியாக இருந்த போது. இஸ்லாமிய முறையில் உடையணிந்த தனது மனைவியுடன் சைபிரஸ் தீவுக்கு சென்ற ஜனாதிபதி அப்துலாஹ்குல்லை வரவேற்க மறுத்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
புதிய தளபதியுடன் துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான்


-OURUMMAH-

முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்களா எவ்வளவு தூரம் உண்மை


M.ஷாமில் முஹம்மட்
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு   பத்தாவது சுற்றுடன் முறிந்துள்ளது. அல்லது முடங்கிவிட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பத்தாவது சுற்று பேச்சு நடை பெரும் வரையிலும் முஸ்லிம் தரப்புடன் பேச்சுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சின் உள்ளடக்கம் அதன் ஆழ அகலம் என்பன பற்றிய எந்த தகவலும் இரு தரப்பாலும் வெளியிடப்படவில்லை.
இதில் அரசுடன் இருக்கும் முஸ்லிம் தரப்புக்கும் கூட எந்த வகையிலும் தெரிவிக்கப் படவில்லை. அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தாலும். முஸ்லிம், தமிழ் தரப்புகள் சர்ச்சைக்குள்ளாகும் விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்புடன் பேசவில்லை. அல்லது மறைத்து கொண்டது.
இந்த நிலையில் முஸ்லிம் தரப்பில் சார்பில் பேச்சில் கூடிய முனைப்பு காட்டிவந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் தரப்பை ஏமாற்றி வருவதாக தெரிவித்தது எனினும் இறுதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக தனித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தும் பேசுவதற்கான வாய்ப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித முறுகல் நிலையும் இல்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் பேசும் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார் .
அதன் பின்னர் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பத்தாவது சுற்று பேச்சு முறிந்து விட்டுள்ளது . இது தொடர்பாக அரசு விடுத்த அறிக்கையில் இனிமேல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதன் மூலமாகவே இனப் பரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அப்போது கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் என்று அரசு நம்புவதாகவும் குறிப்பட்டது . ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக் குழு என்கிற அரசின் யோசனையை ஏற்கனவே நிராகரித்துள்ளன என்பதுகுறிபிடத்தக்கது .
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கான பேச்சு பத்தாவது சுற்றுடன் முறிந்தது மட்டுமல்லாமல் இனி பேச்சு தொடங்குவதே ஒரு பிரச்சினையாகியுள்ளது என்பதைத்தான் கள நிலவரம் காட்டுகின்றது. தற்போது முறிந்துள்ள பேச்சு, இலங்கை அரசு தரப்பு மீது வெளிநாடுகள் மேலும் அழுத்தங்களை கொடுக்க வாய்ப்புகளை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் தரப்பு காத்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர் தரப்பு பேசினால்தான் முஸ்லிம் தரப்பும் பேசும் என்ற நிலையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் காத்திருகின்றனர் என்ற விமர்சனத்தை மேலும் வலுவாகியுள்ளது .தமிழ் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் முஸ்லிம் தரப்பும் பேச முற்படுகின்றது. தாமும் தனித்தரப்பாக பேசவேண்டும் என்று கூறுகின்றது இது பச்சோந்திதனமானது என்று தமிழ் தரப்பில் பலரினால் விமர்சிக்கப்படுகின்றது.
ஆக முஸ்லிம்கள் தமிழருக்கு வழங்கப் படபோவதை தட்டிப்பறிக்க அல்லது பங்குகேட்க பேசவேண்டும் என்கின்றனர். இவர்களுக்கு தமிழர்கள்தான் பிரச்சினையா ?  என்று கேட்கின்றனர். பகுதியளவில் உண்மைதான் தமிழ் தரப்புதான் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினை!.
இலங்கையில் முஸ்லிம்கள் சிங்கள தரப்பால் தொடரான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப் படவில்லை. இன கலவரங்கள் நிகழ்து அவை முஸ்லிம்களுக்கு முழுமையான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் அவை ஒப்பீட்டளவில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர் கொண்டதை விடவும் சிறியதுதான் என்பதும். 1915 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகாலத்தில் அவ்வப்போது இடம்பெற்று வந்த சிங்கள , முஸ்லிம் இனக்கலவரம் அதன் பின்னர் இடைக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளி  போலீஸ் படுகொலை மற்றும் அண்மைக்காலங்களில் , கொழும்பு மருதானை ,கண்டி மாவனளை, காலி பேருவளை போன்ற பகுதிகளிலும் பெரிய அளவில் இடம்பெற்ற பெளத்த பேரினவாத்தின் முஸ்லிம்கள் மீதான இன வன்முறை. இவைகள் வடக்கு கிழக்கில் தமிழர் தரப்பால் முஸ்லிம்கள் சந்தித்த பயங்கரவாதத்தில் இருந்து வித்தியாசமானது.
வடக்கு கிழக்கு வெளியே இடம்பெறுவதை இனகலவரமாக அடையாளப்படுத்தினாலும் வடக்கு கிழக்கில் இடம்பெற்றவை இனகலவரம் அல்ல அது தெளிவான முஸ்லிம் இனசுத்திகரிப்பு, முஸ்லிம்களை திட்டமிட்டு ஒடுக்கும் ஒழுங்கமைந்த இஸ்தாபன ரீதியான நடவடிக்கை . முஸ்லிம்களின் சொந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டி அடித்து அவர்களை நிரந்தரமாக வேறு பிரதேசத்தில் அகதிகளாக ஆக்கிய இனசுத்திகரிப்பு , முஸ்லிம் பொருளாதரத்தை கொள்ளையடித்து இலங்கை வரலாற்றில் செய்யப்பட்ட மிகப்பாரிய கொள்ளை சம்பவமாக பதிவு செய்த ஈழ வீர பயங்கரவாதம் . இலங்கையில் 7000 வரையான முஸ்லிம்களை படுகொலை செய்த இனப் பயங்கரவாதம் .
இவை அனைத்தையும் செய்துவிட்டு இன்று ஏன் முஸ்லிம்கள், தமிழர் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் நாங்களும் பேசவேண்டும் என்று கூறுகின்றார்கள் என்ற அப்பாவிகள் போன்று கேள்வியும், முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்கள் என்ற குற்றசாட்டும் தமிழ் தரப்பால் பரவலாக  வைக்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுடனும் , தமிழர்களுடனும் உறவாடியபோதும் பெரும்பாலானவர்கள் தமது தாய்மொழியாக தமிழையே கொண்டிருக்கும்போதும் 1915 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தம்முடைய கோரமுகத்தை முதல் தடவையாக முஸ்லிம்களின் மீது காட்டி கண்டியில் தொடங்கிய இன கலவரம் முஸ்லிகளின் வர்த்தகத்தின் மீது குறிவைத்து கொழுப்பில் முஸ்லிம்களின் வர்த்தக செல்வாக்கு மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடாத்திபோது . முஸ்லிம்கள் மிக பாரிய இழப்பை சந்தித்தார்கள் அந்த காலகட்டத்தில் தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி குலாவிகொண்டிருந்தது.
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்று இருந்தபோதும் மொழிவாதம் பேசும் தமிழ் இனம் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளான போது எந்த உதவியும் புரியவில்லை அன்று இருந்த எந்த தமிழ் அமைப்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. என்பதற்கும் மேலாக சிங்கள பெளத்த இனவாதத்தை தூண்டியவர்களுக்கு சாதமாக பேசியும் செயல்பட்டும் வந்துள்ளனர் என்பது வரலாறு. இந்த வரலாற்று லச்சனங்களை கொண்டுள்ள இவர்கள் முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார் எப்படி கூறமுடியும்.
அந்த விமர்சனத்தில் எந்த நியாயமும் இல்லாதபோதும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட வேண்டும், இலங்கையில் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டது போன்று வடக்கு கிழக்கு வெளியிலும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் அனால் அவைகள் வடக்கு கிழக்கு பிரச்சினை போன்று பூதாகரமானதாக இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருப்பதை மறுக்கமுடியாது , முஸ்லிம் பகுதிகளுக்கு முஸ்லிம் கிராம சேவை அதிகாரிகள் இன்மை , பல முஸ்லிம் பிரதேசங்களில் போதுமான மக்கள் தொகை இருந்தும் அவை அருகில் இருக்கும் பெரும்பான்மை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் தனது பிரதான விடயமாக கருதும் மார்க்க தளங்களை நிர்மாணிப்பதிலும், புனர் நிர்மாணம் செய்வதிலும் பாரிய தடைகளை எதிர்கொள்ளுதல், முஸ்லிம்கள் பகுதிகளில் இருக்கும் நிலங்கள் விழுங்க படுகின்றமை, சிறிய கிராமங்களில் வாழும் முஸ்லிமகள் பாரிய உயிர் அச்சுறுத்தல்ளை எதிர்கொள்ளுதல், தொடராக வஞ்சிக்கப் படல், போன்ற பிரச்சினைகளை உள்ளன இவைகள் நிரந்தர தீர்வுகள் இன்றி பிரச்சினைகளாக மட்டுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இவை தொடர்ந்தும் பிரச்சினையாக மட்டும் இருப்பதற்கு வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்து வருகின்றமை பிரதான காரணமாக உள்ளபோதும் இவற்றை சரியான முறையில் கையாள எந்த பொறிமுறை உருவாக்கமும் இடம்பெறவில்லை என்பதும் முஸ்லிம் சமூகம் வடக்கு கிழக்கு வெளியே தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களை புரிந்து கொள்ளாமை ஒரு பிரதான காரணமாக உள்ளது .
உதாரணமாக வடக்கு கிழக்கு வெளியே முஸ்லிம்கள் செறிவாகவும் , அதிகமாகவும் வாழும் பிரதேசமான புத்தளத்தில் கூட இந்த பிரச்சினைகள் அதிகள் உள்ளது , புத்தளம் தொகுதியில் வாழ்கின்ற மக்களுடைய நிருவாக அலகுளில் பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிபிடத்தக்கது.
கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவிகின்றார். இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
புத்தளம் தொகுதியில் இருக்கும் அக்கரைப்பற்று கடையாமோட்டை பிரதேசம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்களுடைய பிரதேச செயலகம் முந்தலில் அதுவும் ஆனமடுவை தொகுதியில் அமைந்துள்ளது. முந்தல் பிரதேச செயலகம் என்பது 31 கிராம சேவர் பிரிவுகளைக் கொண்டபோதும் . இதில் 24 கிராம சேவகர் பிரிவு புத்தளம் தேர்தல் தொகுதிக்கும் 7 கிராம சேவகர் பிரிவு ஆனமடுவை தொகுதிக்குள்ளும் காணப்படுகின்றன. ஆனால் 24 கிராம சேவகர் பிரிவில் வாழுகின்ற மக்கள் ஆனமடுவை தொகுதிக்குச் செல்வதென்பது முடியாத விடயமாக இருந்தும் நடை முறையில் அப்படிதான் அமைக்கப்பட்டுள்ளது.
2006ஆம் அண்டு நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் புதிய பிரதேச செயலகம் கடையாமோட்டையில் வழங்குவதற்கான அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்பட் நிலையில் அது இன்று வரையில் வர்த்தமானி அறிவித்தல் விடப்படாது முடங்கிக்கிடப்பதாக குற்றம் சாட்டபடுவது குறிபிடத்தக்கது.
அதேபோன்று புத்தளத்தில் ஒரு கல்விப்பணிமனையும் இல்லாத நிலை இருக்கிறது இதனால் பல தரப்பட்ட பின்னடைவுகளை மாணவ சமூகம் எதிர்கொள்கின்றது. புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கின்ற ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளும் கிட்டத்தட்ட 1000 குடும்பங்களை கொண்ட கிராம சேவகர் பிரிவாக இருந்தாலும், புத்ததளம் நகரில் இருக்கின்ற அதிகமான கிராம சேவகர் பிரிவு 5000, 6000 குடும்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவை சம்பந்தமாக பலதரப்பட்ட சிபாரிசுகள் செய்யப்பட்டாலும் இன்றுவரை அது சம்மந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவிலை . என்று சுட்டிகாட்ட படுவது குறிபிடத்தக்கது.
அதேபோன்று ௨௧ வருடங்களுக்கு முன்னர் வடக்கில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளத்தில் தொகையாக வாழ்வதினால் புத்தளத்தில் படித்தவர்கள், பதவிகளை பெற்றுகொள்வதில் பிரச்சினைகள் இருபதாகவும் புத்தளத்தில் இருக்கின்றவர்களுக்கு அரசியல், அதிகாரம் இல்லாத நிலையில் வடக்கிலிருந்து வந்த மக்களுக்கு அரசியல், அதிகாரம் உள்ளதன் காரணமாக புத்தளத்தில் உள்ள எல்லா நிருவாகங்களையும் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் தம் வசப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் . வடக்கில் இருந்து புத்தளம் வந்தவர்களினால் பல நன்மைகள் ஏற்பட்டு இருக்கிறது ஏற்பட்டு வருகின்றது என்பதை அந்த சமூக தலைவர்களை தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கின்றனர் ஆனாலும் தீர்வு காணவேண்டிய பல பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டு அது தொடர்பாகவும் முஸ்லிம் தலைமை தீர்வுக்கான முயற்சிக்க வேண்டும் .இடத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்
இந்த பின்னணிகளை கொண்டு முஸ்லிம் அரசியல் தரப்பு செயலாற்றவேண்டும். தமிழர் தரப்பு பேசும்போது முஸ்லிம் தரப்பும் பேசவேண்டிய அவசரதேவைகள் இருக்கின்றது அதேபோன்று வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசுடன் முஸ்லிம் அரசியல் தரப்பு பேசவேண்டிய தேவைகள் அதிகம் இருக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போற்றத்தக்கது அதேபோன்று இலங்கையின் ஏனைய பிரதேசங் களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை காண முனையவேண்டும் இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Aug 1, 2011

தஹஜ்ஜத்/ தராவீஹ்/ வித்ரு/ இரவுத் தொழுகை/ ஓர் அலசல்


(தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)
நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் – விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.
உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள். ‘அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரடகளே! வித்ருத் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அலி – இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் (ரலி – ம்) ஆகியோர் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)
வித்ருத் தொழுகையின் நேரம்
1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 417)
2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) புகாரி 998)
3) சுப்ஹூக்கு முன் வித்ரை தொழுங்கள் பஜ்ர் நேரம் வந்து விட்டால் இரவுத் தொழுகை – வித்ரு முடிவடைந்து விடுகின்றன என்பது நபிமொழி (அபூஸயீத்(ரலி) திர்மிதி 431)
இந்த மூன்று ஹதீஸில் முதல் ஹதீஸூடன் மற்ற ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தெரிகின்றன. முதல் ஹதீஸ் தூங்குமுன் வித்ரு தொழுது விட வேண்டும் என்கிறது. மற்றவை இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழ வேண்டும் என்கின்றன. இந்த முரண்பாட்டை கலையும் விதமாகவும் மேலதிக விளக்கமாகவும் மற்றொரு ஹதீஸ் கிடைக்கின்றது.
உங்களில் எவரேனும் இரவின் இறுதிப் பகுதியில் விழிக்க முடியாது என்று அஞ்சினால் அவர் வித்ரு தொழுது விட்டு தூங்கட்டும். இரவில் எழலாம் என்று யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர் இரவின் கடைசியில் வித்ரை தொழட்டும் ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் குர்ஆன் ஓதும் போது மலக்குகள் அங்கு வருகிறார்கள் இதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஜாபிர் (ரலி) திர்மிதி 418, புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)
இந்த ஹதீஸ்களிலிருந்து வித்ரு தொழுகையின் நேரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
இனி பலதரப்பட்ட தொழுகை என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் தொழுகைகளைப் பார்த்து விட்டு வித்ரைத் தொடர்வோம்.
1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல்லைல் 3) தஹஜ்ஜத்து 4) தராவீஹ் 5) வித்ரு
இப்படி ஐந்து வித தொழுகைகளை மக்கள் விளங்கி வைத்துள்ளனர். இந்த தொழுகைகளையும் அதன் எண்ணிக்கைகளையும் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பம். அறிஞர்களின் தடுமாற்றம் இவர்களின் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.
ஐந்துப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த தொழுகைகளை ஐந்து விதமான தொழுகை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். இது உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் ஐந்துவித தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள ஐந்துப் பெயர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.
இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.
இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும், குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.
தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை. மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
”நபி(ஸல்) இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று யாருக்காவது சந்தேகம் வரலாம்.
‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.
‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.
உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.
எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – வித்ருத் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.
எண்ணிக்கைகள்.
13 ரக்அத்கள்
நபி(ஸல்) பதிமூன்று ரக்அத் வித்ரு தொழுவார்கள். அவர்கள் முதுமையடைந்ததும் ஏழு ரக்அத் வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆய்ஷா – உம்மு ஸலமா (ரலி -ம்) நஸயி – திர்மிதி 420)
நபி (ஸல்) அதிகப்படியாக பதிமூன்று ரக்அத்களும், குறைவாக ஒரே சலாமில் ஏழு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள். இதைவிட எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ இல்லை.
நபி(ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள் ஐந்து ரக்அத்களை ஒற்றைப்படையில் (வித்ராக) தொழுவார்கள். அவ்வாறு தொழும் போது கடைசி இருப்பைத் தவிர மற்ற ரக்அத்களில் உட்கார மாட்டார்கள். (அதாவது நான்கு ரக்அத்களை தொடர்சியாக தொழுது – நடுவில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதாமல் – ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஓதி முடிப்பார்கள்) (ஆய்ஷா – அபூ அய்யூப் (ரலி – ம்) முஸ்லிம் – திர்மிதி 421 அபூதாவூத்)
11 ரக்அத்கள்.
ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே… பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் தஹஜ்ஜத் ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது
நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)
எனது சிறிய தாயார் மைமுனா அவர்கள் வீட்டில் நான் ஒரு நாள் தங்கினேன் நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபியவர்களும் அவர்களின் மனைவியும் தலையணையின் சீள வாக்கில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை நபியவர்கள் தூங்கினார்கள் பின்னர் விழித்து தங்கள் கையால் முகத்தை தடவி தூக்க கலக்கத்தை போக்கிவிட்டு ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களை ஓதி விட்டு எழந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து தண்ணீர் சாய்த்து ஒளு செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக நின்றார்கள் நானும் அவர்களின் இடது புறம் போய் நின்றேன் எனது காதைப் பிடித்து இழுத்து வலது பக்கம் நிறுத்தினார்கள்.
இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மேலும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
இன்னும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மீண்டும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மறுபடியும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
பின்பு ஒற்றப்படையில் (வித்ரு) தொழுதார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 992, 1198)
9 ரக்அத்துகள்
நபி(ஸல்) ஒன்பது ரக்அத்துகளாக ஒற்றைப்படையில் (வித்ரு) தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். (இப்னு உமர்(ரலி) முஸ்லிம் நஸயி அஹ்மத்)
7 ரக்அத்கள்.
நபி(ஸல்) ஏழு ரக்அத் வித்ரு (ஒற்றைப்படையில்)தொழுதால் ஆறாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதாவூத் – நஸயி – அஹ்மத்)
5 ரக்அத்கள்.
நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். ஐந்து ரக்அத்தை ஒற்றைப்படையில்(வித்ராக) தொழுவார்கள் (அப்படி தொழும்போது) ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி – முஸ்லிம் – திர்மிதி 421)
3 ரக்அத்கள்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம், நஸயி, அஹ்மத், பைஹகி)
கிராஅத்
நபி(ஸல்) ஒற்றப்படைத் தொழுகையின்(வித்ரின்) மூன்று ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ என்ற சூராவையும், இரண்டாம் ரக்அத்தில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’ என்ற அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் ‘குல்ஹீவல்லாஹூ அஹத்’ என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என உபை பின் கஃபு(ரலி) அறிவிக்கிறார்கள். திர்மிதி 424, அஹ்மத், நஸயி, இப்னுமாஜா)
நபி(ஸல்) மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் மூன்று அத்தியாயங்கள் விதம் ஒன்பது அத்தியாயங்களை ஓதுவார்கள் கடைசி அத்தியாயாத்தில் குல்ஹூவல்லாஹூ அஹத் சூராவை ஓதுவார்கள் என்று திர்மிதியில் ஒரு செய்தி வருகிறது அலி(ரலி) அறிவிப்பதாக வரும் இச்செய்தி பலவீனமானதாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் அல் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பொய்யராவார் அதனால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.
யார் ஐந்து ரக்அத் தொழு விரும்புகிறாரோ அவர் ஐந்து தொழலாம், யார் மூன்று ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் மூன்று தொழலாம், யார் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் ஒன்று தொழலாம் என்பது நபிமொழி (அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா)
வித்ரும் மஃரிபும் வித்தியாசப்பட வேண்டும்
மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் மஃரிபைப் போன்று வித்ரை ஆக்கி விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) ஹாக்கிம், தாரகுத்னி, இப்னுஹிப்பான்)
மூன்று ரக்அத் வித்ரு தொழும் போது எவ்வாறு தொழுவது? மஃரிபைப் போன்று வித்ரை ஆக்காதீர்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதால் வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும். முதலில் இரண்டு தொழுது ஸலாம் கொடுத்து பின்னர் ஒன்று தொழுது சிலர் வித்தியாசப்படுத்துகிறார்கள். இப்னு உமர்(ரலி) இவ்வாறு தொழுதுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்னு உமர் அவர்கள் இவ்வாறு தொழுதது உண்மைதான் (புகாரி991) ஆனால் அவர்கள் தொழுத மூன்று ரக்அத்தையும் சேர்த்து அவர்கள் வித்ரு என்று சொல்லவில்லை. இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து பிரித்ததன் மூலம் அது மூன்றாம் ரக்அத்துடன் சேராது என்பதை விளங்கலாம். பின்னர் தொழுத ஒரு ரக்அத் மட்டுமே (ஒற்றையாக இருப்பதால்) வித்ரு தொழுகையாகும்.
ஹனபி மத்ஹப் காரர்கள் போன்று தொழுவதற்கும் ஆதாரம் எதுவுமில்லை. இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதுவதன் மூலம் அவர்கள் வித்ரை மஃரிபு போன்றே ஆக்கி விடுகிறார்கள். மூன்றாம் ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு கைகளை உயர்த்துவதால் மட்டும் அது மஃரிபிலிருந்து வித்தியாசப்பட்டு விடாது.
மூன்று ரக்அத் தொழும் போது நபி(ஸல்) எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறு தொழுவதே சரியாகும்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத்தில் தான் உட்காருவார்கள் ஸலாம் கொடுப்பார்கள் என ஆய்ஷா – உபை பின் கஃபு (ரலி-ம்) அறிவிக்கிறார்கள். (நஸயி)
இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து பிரிக்காமல், அத்தஹிய்யாத்து ஓதாமல் நேராக எழுந்து மூன்றாம் ரக்அத்தையும் தொழுது இறுதியில் ஸலாம் கொடுப்பது தான் நபிவழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வித்ரு தொழுகை மஃரிபு தொழுகையிலிருந்து வித்தியாசப்பட்டு விடுகிறது.
1 ரக்அத்.
இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் நபி(ஸல்) தொழுதுள்ளார்கள் என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் இல்லை.
13 ரக்அத்களை விட அதிகமாக தொழவேக் கூடாதா…?
தொழலாம் தடையில்லை ஆனால் நபி(ஸல்) அவ்வாறு தான் தொழுதுள்ளார்கள் என்று (பொய்) கூறி அந்த கூடுதல் ரக்அத்களை சுன்னத்தாக்கக் கூடாது.
இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டிரண்டு ரக்அத்களாக தொழு. சுப்ஹ் வந்து விட்டால் ஒரு ரக்அத் தொழுது முடித்துக் கொள்’ என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி)
எண்ணிக்கையை வரையறுக்காமல் இரண்டிரண்டாக தொழு என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் அவரவர் விரும்பும் அளவிற்கு சுப்ஹ்வரை எத்துனை ரக்அத்களும் தொழலாம். 13 ரக்அத்களை தாண்டி சிலருக்கு 30 ரக்அத்கள் தொழ விருப்பம் இருந்தால் தொழலாம். சிலருக்கு அதிகப்படியாக வெறும் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழ விருப்பம் இருந்தால் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நாற்பது – ஐம்பது என்று சுப்ஹ்வரை தொழ ஒருவர் விரும்பினால் கூட அவர் தொழலாம். அதற்கு இந்த ஹதீஸ் அனுமதியளிக்கிறது. ஆனால் பதினோரு ரக்அத்களை தாண்டி இத்துனை ரக்அத்கள் தான் தொழ வேண்டும் இருபது ரக்அத்கள் தான் தொழ வேண்டும் என்று ரக்அத்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை அவற்றை சுன்னத்தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதிகப்படியாக தொழும் தொழுகை அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததாகும்.
ஜமாஅத்தாக தொழுவது.
ரமளானில் ஏழுநாட்கள் எஞ்சியிருக்கும் வரை(அதாவது 23 நாட்கள்) நபி(ஸல்) எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. 24ம் இரவில் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் அடுத்த நாள் தொழுகை நடத்தவில்லை 26ம் இரவில் பாதி இரவு கழியும் வரை தொழுகை நடத்தினார்கள். அடுத்த நாள் தொழுகை நடத்தாமல் 28ம் நாள் தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு குடும்பத்தினரையும் – மனைவிகளையும் அழைத்தார்கள். ஸஹர் செய்தல் தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு தொழுகையை நீட்டினார்கள். (அடுத்தடுத்த நாள் தொழவில்லை) என்று ஜூபைர் பின் நுமைர் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 734)
இதே செய்தி ஆய்ஷா(ரலி) வழியாக புகாரியில் வருகிறது. மக்கள் திரண்டு தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்த போது வெளியில் வராத நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகைக்கு வந்து ”நீங்கள் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு தெரியும் ஆர்வத்தின் காரணமாக அல்லாஹ் இந்த தொழுகையை கடமையாக்கி விடுவானோ.. என்று அஞ்சி தான் நான் வரவில்லை” என்று சொன்ன செய்தி கிடைக்கிறது. (புகாரி 1129)
நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான்.
வித்ரில் குனூத்.
வித்ரில் ஓதுவதற்காக எனக்கு நபி(ஸல்) துஆவை கற்றுக் கொடுத்தார்கள் என ஹஸன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

اللهّم اهد ني فيمن هديت وعافني فيمن عافيت وتولّني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شرَّ ما قضيت فإنّك تقضي ولا يقضى عليك وإنه لا يذلُّ من واليت تباركت ربنا وتعاليت

அல்லாஹூம்மஹ்தினீ ஃபிமன் ஹதைத்த, வ ஆஃபினி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனி ஃபீமன் தவல்லைத்த, வபாரிக்லி ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ர மா க்கலைத்த, வஇன்னக்க தக்ளீ வலா யுக்ளா அலைக்க, வஇன்னஹூ லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
பொருள்: இறைவா நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும் துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன் மகத்துவம் மேலானது. (திர்மிதி 429)
இந்த துஆவை இரவுத் தொழுகையின் ஒற்றைப்படை(வித்ரு) கடைசி ரக்அத்தில் ருகூஃவிற்கு முன்போ – பின்போ அவரவர் விருப்பப்படி ஓதிக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும் நபி(ஸல்) குனூத் ஓதியதற்கு ஆதாரம் கிடைக்கின்றன. (ஹஸன் – உபை பின் கஃபு(ரலி-ம்) வழியாக ஹாக்கிம் அபூதாவூத் நஸயி)
நபி(ஸல்) குனூத் ஓதும் சந்தர்பங்களில் கைகளை உயர்த்தியதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று குனூத்திற்கு ஆமீன் சொல்வதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. மக்கா மதீனா போன்ற இடங்களில் கைகளை உயர்த்தி குனூத் ஓதினாலும் பிறர் அதற்கு ஆமீன் சொன்னாலும் நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த சந்தர்பங்களில் நாம் அமைதியாக நின்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியாகப்படுகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
Courtesy: http://tamilmuslim.com/nonbu/taraweeh%20prayer.htm

எலபெடகமவிலும் மார்க்கப் பிரச்சினை ; ஒருவர் கொலை




குருநாகல் மாவட்டத்திலுள்ள எலபெடகம எனும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ள இச் சம்பவத்திற்கு மார்க்க ரீதியான முரண்பாடே காரணம் எனவும் 
தௌஹீத்இயக்கம் ஒன்றின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேபோன்றே கடந்த செவ்வாய்க்கிழமை அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ-ஹோராபொல எனுமிடத்தில் முஸ்லிம் சகோதரர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மார்க்க ரீதியான முரண்பாடுகள் காரணமாக இவ்வாறு வன்முறைகளும் கொலைகளும் அதிகரித்துச் செல்வது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாசகர்கள் அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்கள்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்


தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.


மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.
News Link: http://www.smartlinkx.com/latest-news/wayne-parnell-south-african-fast-bowler-has-converted-to-islam/


المشاركات الشائعة