அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கை இங்கு முழுமையாக பதிவு செய்யபடுகின்றது:
ஊடக அறிக்கை: அண்மைக் காலமாக நாட்டின் அனேகமான பகுதிகளில் மர்ம மனித நடமாட்டம் பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில ஊர்களில் அவ்வாறு சந்தேகத்திற்கிடமான சிலர் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் சிலர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இச்செய்திகள் வதந்திகள் எனவும், சில பைத்தியக்காரர்களது செயலெனவும் அரசியல் இலாபம் கொண்டன எனவும் பேசப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் அமைதியை நிலைநாட்டும் கடமையை காவல்துறையினர் கையாளும் போது, பொதுமக்கள் சட்டத்தை தம்கையிலெடுக்கலாகாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் காவல்துறையோடு மோதலில் ஈடுபடுவதும் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள அரச, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் சாணக்கியமான செயலல்ல. இப்பீதி நிலைமையை இல்லாதொழிக்கும் விடயத்தில் காவல்துறையினரோடு ஒத்துழைக்கலாம், சந்தேகத்திற்கிடமானவர்களைப் பிடித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
அதேநேரம் அரசும் காவல்துறையினரும் பீதியற்ற நிலைமையையும் சகஜ வாழ்வையும் ஏற்படுத்தும் விடயத்தில் கூடிய கரிசனை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறது. இந்நாட்டுப்பிரஜைகள் எவரும் நிம்மதியற்று வாழ்வதை எவரும் அங்கீகரிக்கமாட்டார்கள். எந்தச் சமூகத்தவரகளாயினும் நிம்மதியோடு வாழவே விரும்புவர்.
இந்நிலையில் அதற்கு குந்தகமான நிகழ்வுகள் மக்களை ஆக்குரோஷம் செய்யவே தூண்டிவிடும். எனவே இம்மர்ம மனிதர்களின் உண்மை நிலையை அறிந்து நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடப்பாடு அரசுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் உரியதாகும் என்பதை அ.இ.ஜ.உ வலியுறுத்திக் கூறுகிறது.
அதேநேரம் நாங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது. அல்லாஹ்வின் உதவியை நம்பி நிற்கும் நாம் துஆ ஓதும் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக நோன்பில் ஓதப்படும் குனூத்திலும் துஆக்கேட்குமாறு அ.இ.ஜ.உ முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறது.
‘ஹிஸ்னுல் முஸ்லிம்” ‘அல் அத்கார்” போன்ற நூல்களில் உள்ள ‘துஆவுல் கர்ப்” போன்றவையும் ‘அல்லாஹும்மஸ்துர் அவ்ராதினா வஆமின் ரவ்ஆதினா” என்றுள்ள துஆவையும் அதிகமாக ஓதும்படி ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கிறது.
இவ்வண்ணம்
இவ்வண்ணம்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment