Search This Blog

May 15, 2012

நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பரங்கியனாக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன் !


ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் முப்பதாண்டு கால பயங்கரவாத போர் முடிவுற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 19ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் Business Today ஆங்கில இதழின் உதேனி அமரசிங்கவுக்கு அளித்த பேட்டியில் ஒருபகுதி
பேட்டி: இன்று குறித்த சிலர் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை தூண்டி விடுகின்றனர் .அத்தகைய நடவடிக்கைகள் அவசியமற்றவை.  நாம் எந்த இனம் ,மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது 30 ஆண்டுகால யுத்தத்தை அனுபவித்திருக்கிறோம் அதேபோன்று ஒன்று மீண்டும் ஏற்பட நாங்கள் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்பதுதான் .
இது மிகவும் முக்கியமானது . மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது. இன்று வதந்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தேவையுள்ளவர்களினால் உருவாக்கப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது மக்கள் அவ்வாறான சந்தர்பங்கள் ஏற்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது .
இந்த நாட்டில் நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பேகராக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன். இதுதான் மிக பிரதான விடயம். நீங்கள் அனாவசியமான பிரச்சினைகளில் ஈடுபடக் கூடாது .இனம் , மதம் அது முக்கியமானது அல்ல .நீ ஒரு இலங்கையன் என்பதுதான் முக்கியமானது .
இன்று நாங்கள் அதற்கான சந்தர்பத்தை பெற்றுள்ளோம் அதற்கான சந்தர்பம் அனைவருக்கும் இருக்கிறது . அது உண்மை இல்லை என்று யாரும் கூறமுடியாது கொழும்பை அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளை எடுத்துப் பாருங்கள் அங்கு அதிகமான முன்னணி தமிழ் வர்த்தகர்களை காணலாம் , அதேபோன்று தமிழ்தொழில்சார் நிபுணர்கள் , மருத்துவர்கள் , பொறியலாளர்கள் ,சட்டத்தரணிகள் , கட்டடநிர்மாணிகள் என்பவர்களை காணலாம். யாருக்காவது சொல்லமுடியுமா அவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்று ? – அவர்களுக்கு காணிகளை எங்குவேண்டுமானாலும் வாங்க முடியும் வாங்குவதற்கு எந்த தடைகளும் இல்லை. அவர்கள் -தமிழர்கள் – நாட்டின் முழு பகுதியிலும் வாழுகிறார்கள் .
முஸ்லிம் சமூகத்தை பார்த்தாலும் அவர்கள் வர்த்தகம் செய்ய சுதந்திரமாக விடப் பட்டுள்ளார்கள் . இந்த நாட்டில் அதிகமான முன்னணி முஸ்லிம் வர்த்தகர்கள் இருகின்றார்கள் என்ற உண்மை. அவர்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதற்கு ஆதாரம் என்று தெரிவித்துள்ளார் .
அந்த பேட்டியின் முழுமையான ஆங்கில வடிவத்தை பார்க்க

கடனால் ஏற்படும் இன்னல்கள்


ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282
இந்த வசனத்தின்படி கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி
வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். நூல்: புகாரி
சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம். வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம். அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும். எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி
மற்றொரு ஹதீதில்
ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி
கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக!
source-readislam

A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..


- குளோபல் இஸ்லாம் பேஸ்புக் பக்கம் - 
சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.
ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள்.
இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது.
தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன.
அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.
காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.
இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும்.
ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களைதிருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம்.
பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை.
ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.
பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள்.
ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!
சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!
நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.
இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும்.
ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.
ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.
எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.
அன்பிற்குரிய ரஹ்மான்!
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள்.
மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லயித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன்.
பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை!!!

May 14, 2012

இதுவல்ல பௌத்தம் சொல்லும் புனிதத்தன்மை


காமினி வியங்கொட :தமிழில்: அபூ ஷாமில்:

புத்தரின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் பிக்குகள் குழுவினால் அண்மையில் தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளியொன்று சேதமாக்கப்பட்டும் இந்துக் கோவிலொன்று பலாத்காரமாக அகற்றப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தரின் வாரிசுகளில் ஒருவர் தனது காவியுடையை களைந்து, குதித்துக் கூத்தாடி இந்த வன்முறைக்கு மக்களை உசுப்பேற்றினார். அட்டகாசத்தின் முடிவில் பிக்குகள் பிரித் ஓதினார்கள். மக்களும் ‘சாது’ சொன்னார்கள்.
சாதாரண வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும், கெமராவின் முன்னால் நடந்து கொள்ளும்போது காவியுடையை களைவது, கட்புல ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டு விடும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கவே முடியாது.
ஆனாலும், அறிவு ஞானம் படைத்தவர்கள், மதகுருக்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், இனத்திலும், மொழியிலும் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக தம்மை கருதிக் கொள்பவர்கள். புத்தர், புத்தரது போதனைகளை விட தமது பாரம்பரியம் மேலானது எனக் கருதுபவர்கள், கெமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, புத்தரின் திருவிழிகளுக்கு முன்னாலேயே இப்படி நடந்து கொண்டார்கள். ஏனெனில், புத்தர் சிங்களவரல்லவே. ‘உலகிலேயே தூய தேரவாத பௌத்தம்’ என சிலரால் அறியப்படுவது இந்த முரட்டு புத்த தர்மத்தைத்தான்.
இந்தியாவில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற இந்து-முஸ்லிம் மோதல்களில் பல்லாயிரக் கணக்கா னோரை பலியெடுத்த நினைவுகளைத் தான் இந்தக் காட்சிகள் ஞாபகப்படுத்துகின்றன. இலங்கையில் பிக்குகளின் இந்த வழிமுறை இன்னொரு இந்தியாவை நோக்கியோ, தாலிபானை நோக்கியோ எம்மை வெகுவிரைவில் இட்டுச் சென்றாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.
பயங்கரவாதத்தை வேரோடழிப்பது என்ற வர்த்தக விளம்பரத்திற்குப் பின்னாலிருந்து யுத்த வெற்றியென்பது, சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான் என்பது, இந்த நிகழ்வின் மூலம் பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது.
நடந்து முடிந்த மொத்த நிகழ்வையும் முன்னின்று நடத்தியவர் தம்புளு விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர். பொலிஸாருடனும் பிரதேச செயலாளருடனும் இவர் நடந்து கொண்ட விதம், காவியுடை தரித்த மேர்வின் சில்வாவைப் பார்ப்பது போலிருந்தது.
தனது உத்தரவை பிரதேச செயலாளர் மீறினால், அவரை மரத்திலே கட்டி விடுவேன் என்று எச்சரிப்பது போல, அவரது கடும் தோரணை அமைந்திருந்தது. சமாதானப்படுத்த வந்த பொலிஸாரை நோக்கி அவர் சொன்ன வார்த்தை, “இதற்கு (பள்ளியை அகற்றுவதற்கு) நிறைய பணம் தேவைப்படும். நாங்கள் சிரமதானத்தின் மூலம் இதனைச் செய்து அரசுக்கு உதவி செய்யத்தானே வந்திருக்கிறோம். நீங்கள் ஏன் உதவாமல் இருக்கிறீர்கள்?”
தமது சண்டித்தனத்தால் பள்ளியை அல்லது கோவிலை சிரமதானம் மூலம் அழித்துவிடுவதை வீண்விரயத்தைக் குறைக்கின்ற ஒரு செயலாகத்தான் கருதுகின்றார்களா? ஜனநாயக முறைமைகளைவிட மேலானது என்றா இவர் கூறுகிறார்?
“கோவிலை நீங்கள் அப்புறப் படுத்தி விடுங்கள். அல்லது நாங்கள் வந்து உங்களது வீடுகளையும் அப்புறப்படுத்தி விடுவோம். உங்களது கடவுளை விரும்புகிற வேறிடத்துக்கு தூக்கிச் செல்லுங்கள்.” இது இடையில் அகப்பட்ட இந்துப் பெண்ணிடம் சொன்ன ஈவிரக்கமற்ற வார்த்தைகள்.
சாதாரண பௌத்தர் கூட நடந்து கொள்ள முடியாத வெறுக்கத்தக்க விதத்தில் பௌத்த பிக்கு நடந்து கொள்ளக் காரணம், தம்புள்ளை பௌத்தர்களின் புண்ணிய பூமி என்பதாலா அல்லது பௌத்த பூமியில் ஏனைய மதங்களின் மதஸ்தலங்கள் இருக்கக் கூடாது என்று பௌத்தமே சொல்லாத தர்மத்தினாலா?
மதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பௌத்த பிக்குவின் இந்த நடவடிக்கை முற்றிலுமே பௌத்தத்துக்கு விரோதமானது. புத்தரின் வாழ்க்கை வழிமுறை இதற்கு முற்றிலும் மாறுபட்டது.
புத்தர் தங்கியிருந்த ஜேதவனாராமயவுக்கு அடுத்த நிலம், பன்றிகள் கொல்லப்படும் ஒரு பன்றி மடுவம். சுந்தஜூகர என்ற இந்த மடுவத்தின் உரிமையாளர், தமது வாழ்நாளில் ஒருமுறையேனும் புத்த போதனைகளைக் கேட்டதேயில்லை. பன்சலயிற்குப் பக்கத்தில் இருந்தும் உயிர்களைக் கொல்லும் தமது தொழிலை விட்டுவிடவுமில்லை.
அப்படியிருந்தும், தானிருக்கும் புண்ணிய பூமியிலிருந்து இந்தப் பன்றி மடுவத்தை அகற்றுமாறு உரிமையாளரையோ, அன்றைய மன்னர்களையோ புத்தர் கோரவில்லை.
இந்த ஜேதவனாராமயவின் அடுத்த பக்கத்தில் இருந்த துறவிகளின் ஆசிரமத்தில் நடக்கின்ற பூஜைகளின் சத்தத்தினால் தமது நிஷ்டைக்கு களங்கம் ஏற்படுகிறது என சீடர்கள் புத்தரிடம் முறையிட்ட போது, இதனை உரிய நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றுதான் புத்தர் சொன்னாரே தவிர, அவர்களது ஆசிரமத்தை தரைமட்ட மாக்குமாறு தமது சீடர்களை புத்தர் உசுப்பேற்றவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்துச் சூழலில் புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பது போன்ற ஏனைய மதத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதானது, மதங்கள் எப்படிப் போனாலும் நவீன யுகத்தின் மானிடப் பண்புக்கே உசிதமானதல்ல.
ஆனால், தம்புள்ளை பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல. இருந்தும், இது இப்போது ஏன் திடீரென இவர்களது கண்களில் பட்டது. ஏனென்றால், சிங்கள பௌத்தர்களுக்கு உரித்துக் கொண்டாடுபவர்களின் யுத்த வெற்றியினால் வந்த போதைதான் இது.
இந்தப் ‘புனித பூமி’ கோட்பாடு கூட நகைப்புக்கிடமானது. இலங்கையில் உள்ள பெரும்பாலான பௌத்த ஆசாரமல்லாத கேந்திரம் பார்த்தல், சூனியம் மந்திரித்தல், நேர்ச்சை, தேங்காய் உடைத்தல் போன்ற பல விடயங்கள் பௌத்த விகாரைக்குள்ளேயே நடக்கின்றன.
இனாமலுவே சுமங்கல தேரரின் தம்புளு விகாரையிலும் இப்படித் தான். விஷ்ணு, பிள்ளையார் சிலைகள் கொண்ட இந்துக் கோவில் அவரது விகாரைக்குள்ளே இருக்கிறது. இந்துப் பாரம்பரியத்திற்கேற்ப தேங்காய் உடைக்கின்ற இடமும் அங்கு காணப்படுகிறது. தனது விகாரைக்குள்ளேயே இந்துக் கோவிலை வைத்துக் கொண்டு, தம்புள்ளையை புண்ணிய பூமியாக்குவதோடு, விகாரைக்கு வெளியே உள்ள கோவில் அகற்றப்பட வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற இந்த புனிதத் தன்மை என்பது, தற்போதைய அரசியல் மனோபாவம் வேண்டுகின்ற முரட்டுத்தனமேயன்றி, எவ்விதத்திலும் பௌத்தம் சொல்லுகின்ற புனிதத் தன்மையல்ல.
இந்த அரசியல் மனோபாவத்தில் பௌத்தரல்லாத சிங்களவர்களுக்கும் குறிப்பாக, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எஞ்சியிருப்பது நாற்புறமும் நெருக்கடியால் சூழப்பட்ட ஒரு வாழ்க்கையன்றி வேறில்லை.
நன்றி: ராவய
Thanks:Lankamuslim

المشاركات الشائعة