Search This Blog

May 14, 2012

இதுவல்ல பௌத்தம் சொல்லும் புனிதத்தன்மை


காமினி வியங்கொட :தமிழில்: அபூ ஷாமில்:

புத்தரின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் பிக்குகள் குழுவினால் அண்மையில் தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளியொன்று சேதமாக்கப்பட்டும் இந்துக் கோவிலொன்று பலாத்காரமாக அகற்றப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தரின் வாரிசுகளில் ஒருவர் தனது காவியுடையை களைந்து, குதித்துக் கூத்தாடி இந்த வன்முறைக்கு மக்களை உசுப்பேற்றினார். அட்டகாசத்தின் முடிவில் பிக்குகள் பிரித் ஓதினார்கள். மக்களும் ‘சாது’ சொன்னார்கள்.
சாதாரண வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும், கெமராவின் முன்னால் நடந்து கொள்ளும்போது காவியுடையை களைவது, கட்புல ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டு விடும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கவே முடியாது.
ஆனாலும், அறிவு ஞானம் படைத்தவர்கள், மதகுருக்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், இனத்திலும், மொழியிலும் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக தம்மை கருதிக் கொள்பவர்கள். புத்தர், புத்தரது போதனைகளை விட தமது பாரம்பரியம் மேலானது எனக் கருதுபவர்கள், கெமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, புத்தரின் திருவிழிகளுக்கு முன்னாலேயே இப்படி நடந்து கொண்டார்கள். ஏனெனில், புத்தர் சிங்களவரல்லவே. ‘உலகிலேயே தூய தேரவாத பௌத்தம்’ என சிலரால் அறியப்படுவது இந்த முரட்டு புத்த தர்மத்தைத்தான்.
இந்தியாவில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற இந்து-முஸ்லிம் மோதல்களில் பல்லாயிரக் கணக்கா னோரை பலியெடுத்த நினைவுகளைத் தான் இந்தக் காட்சிகள் ஞாபகப்படுத்துகின்றன. இலங்கையில் பிக்குகளின் இந்த வழிமுறை இன்னொரு இந்தியாவை நோக்கியோ, தாலிபானை நோக்கியோ எம்மை வெகுவிரைவில் இட்டுச் சென்றாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.
பயங்கரவாதத்தை வேரோடழிப்பது என்ற வர்த்தக விளம்பரத்திற்குப் பின்னாலிருந்து யுத்த வெற்றியென்பது, சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான் என்பது, இந்த நிகழ்வின் மூலம் பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது.
நடந்து முடிந்த மொத்த நிகழ்வையும் முன்னின்று நடத்தியவர் தம்புளு விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர். பொலிஸாருடனும் பிரதேச செயலாளருடனும் இவர் நடந்து கொண்ட விதம், காவியுடை தரித்த மேர்வின் சில்வாவைப் பார்ப்பது போலிருந்தது.
தனது உத்தரவை பிரதேச செயலாளர் மீறினால், அவரை மரத்திலே கட்டி விடுவேன் என்று எச்சரிப்பது போல, அவரது கடும் தோரணை அமைந்திருந்தது. சமாதானப்படுத்த வந்த பொலிஸாரை நோக்கி அவர் சொன்ன வார்த்தை, “இதற்கு (பள்ளியை அகற்றுவதற்கு) நிறைய பணம் தேவைப்படும். நாங்கள் சிரமதானத்தின் மூலம் இதனைச் செய்து அரசுக்கு உதவி செய்யத்தானே வந்திருக்கிறோம். நீங்கள் ஏன் உதவாமல் இருக்கிறீர்கள்?”
தமது சண்டித்தனத்தால் பள்ளியை அல்லது கோவிலை சிரமதானம் மூலம் அழித்துவிடுவதை வீண்விரயத்தைக் குறைக்கின்ற ஒரு செயலாகத்தான் கருதுகின்றார்களா? ஜனநாயக முறைமைகளைவிட மேலானது என்றா இவர் கூறுகிறார்?
“கோவிலை நீங்கள் அப்புறப் படுத்தி விடுங்கள். அல்லது நாங்கள் வந்து உங்களது வீடுகளையும் அப்புறப்படுத்தி விடுவோம். உங்களது கடவுளை விரும்புகிற வேறிடத்துக்கு தூக்கிச் செல்லுங்கள்.” இது இடையில் அகப்பட்ட இந்துப் பெண்ணிடம் சொன்ன ஈவிரக்கமற்ற வார்த்தைகள்.
சாதாரண பௌத்தர் கூட நடந்து கொள்ள முடியாத வெறுக்கத்தக்க விதத்தில் பௌத்த பிக்கு நடந்து கொள்ளக் காரணம், தம்புள்ளை பௌத்தர்களின் புண்ணிய பூமி என்பதாலா அல்லது பௌத்த பூமியில் ஏனைய மதங்களின் மதஸ்தலங்கள் இருக்கக் கூடாது என்று பௌத்தமே சொல்லாத தர்மத்தினாலா?
மதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பௌத்த பிக்குவின் இந்த நடவடிக்கை முற்றிலுமே பௌத்தத்துக்கு விரோதமானது. புத்தரின் வாழ்க்கை வழிமுறை இதற்கு முற்றிலும் மாறுபட்டது.
புத்தர் தங்கியிருந்த ஜேதவனாராமயவுக்கு அடுத்த நிலம், பன்றிகள் கொல்லப்படும் ஒரு பன்றி மடுவம். சுந்தஜூகர என்ற இந்த மடுவத்தின் உரிமையாளர், தமது வாழ்நாளில் ஒருமுறையேனும் புத்த போதனைகளைக் கேட்டதேயில்லை. பன்சலயிற்குப் பக்கத்தில் இருந்தும் உயிர்களைக் கொல்லும் தமது தொழிலை விட்டுவிடவுமில்லை.
அப்படியிருந்தும், தானிருக்கும் புண்ணிய பூமியிலிருந்து இந்தப் பன்றி மடுவத்தை அகற்றுமாறு உரிமையாளரையோ, அன்றைய மன்னர்களையோ புத்தர் கோரவில்லை.
இந்த ஜேதவனாராமயவின் அடுத்த பக்கத்தில் இருந்த துறவிகளின் ஆசிரமத்தில் நடக்கின்ற பூஜைகளின் சத்தத்தினால் தமது நிஷ்டைக்கு களங்கம் ஏற்படுகிறது என சீடர்கள் புத்தரிடம் முறையிட்ட போது, இதனை உரிய நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றுதான் புத்தர் சொன்னாரே தவிர, அவர்களது ஆசிரமத்தை தரைமட்ட மாக்குமாறு தமது சீடர்களை புத்தர் உசுப்பேற்றவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்துச் சூழலில் புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பது போன்ற ஏனைய மதத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதானது, மதங்கள் எப்படிப் போனாலும் நவீன யுகத்தின் மானிடப் பண்புக்கே உசிதமானதல்ல.
ஆனால், தம்புள்ளை பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல. இருந்தும், இது இப்போது ஏன் திடீரென இவர்களது கண்களில் பட்டது. ஏனென்றால், சிங்கள பௌத்தர்களுக்கு உரித்துக் கொண்டாடுபவர்களின் யுத்த வெற்றியினால் வந்த போதைதான் இது.
இந்தப் ‘புனித பூமி’ கோட்பாடு கூட நகைப்புக்கிடமானது. இலங்கையில் உள்ள பெரும்பாலான பௌத்த ஆசாரமல்லாத கேந்திரம் பார்த்தல், சூனியம் மந்திரித்தல், நேர்ச்சை, தேங்காய் உடைத்தல் போன்ற பல விடயங்கள் பௌத்த விகாரைக்குள்ளேயே நடக்கின்றன.
இனாமலுவே சுமங்கல தேரரின் தம்புளு விகாரையிலும் இப்படித் தான். விஷ்ணு, பிள்ளையார் சிலைகள் கொண்ட இந்துக் கோவில் அவரது விகாரைக்குள்ளே இருக்கிறது. இந்துப் பாரம்பரியத்திற்கேற்ப தேங்காய் உடைக்கின்ற இடமும் அங்கு காணப்படுகிறது. தனது விகாரைக்குள்ளேயே இந்துக் கோவிலை வைத்துக் கொண்டு, தம்புள்ளையை புண்ணிய பூமியாக்குவதோடு, விகாரைக்கு வெளியே உள்ள கோவில் அகற்றப்பட வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற இந்த புனிதத் தன்மை என்பது, தற்போதைய அரசியல் மனோபாவம் வேண்டுகின்ற முரட்டுத்தனமேயன்றி, எவ்விதத்திலும் பௌத்தம் சொல்லுகின்ற புனிதத் தன்மையல்ல.
இந்த அரசியல் மனோபாவத்தில் பௌத்தரல்லாத சிங்களவர்களுக்கும் குறிப்பாக, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எஞ்சியிருப்பது நாற்புறமும் நெருக்கடியால் சூழப்பட்ட ஒரு வாழ்க்கையன்றி வேறில்லை.
நன்றி: ராவய
Thanks:Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة