நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.
பல ஆவணங்களை முன்வைத்து தன்னுடைய வாதத்தை வைத்தார் அவர். ஆனால் அவருடைய கோட்பாடு மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் அவர் போன்ற துறைச்சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது.
ஷெங் ஹி என்ற சீன முஸ்லிம் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ இல்லையோ, அவர் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சீன முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை, ஆச்சர்யமூட்டுபவை. தங்களின் வசிப்பிடத்தால், அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு இருந்தாலும், கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக பல தடைகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்திருக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).
சீன முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையை, அவர்களின் தற்போதைய நிலையை ஆராய முற்படுவதே இந்த பதிவுகள். இன்ஷா அல்லாஹ்.
சீன இனங்கள்:
சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள்.
உய்குர் இன மக்கள் (வீகுர் எனவும் உச்சரிக்கப்படுகின்றது) அதிகமாக வாழும் பகுதி சின்ஜிஅங் உய்கூர் தன்னாட்சி பகுதி (Xinjiang Uyghur Autonomous Region) என்று அழைக்கப்படுகின்றது. அது போல, ஹுய் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி நின்க்சியா ஹுய் தன்னாட்சி பகுதி என்றழைக்கப்படுகின்றது (Ningxia Hui Autonomous region).
உய்குர் இன மக்கள்:
சீன முஸ்லிம்கள் குறித்து பேசும் போது பலரும் எதிர்ப்பார்க்கக்கூடிய முதல் தகவல் சின்ஜிஅங் பகுதி குறித்தே இருக்கும். இந்த பகுதி கடந்த சில வருடங்களாக ஊடங்களில் அதிகம் வலம் வருகின்றது. அங்கு நடக்கும் கலவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.
இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% - 7.5%-மாக இருக்கின்றது.
சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.
ஆம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய சின்ஜிஅங் பகுதி, சீனாவின் நிலப்பரப்பில் பதினாறு சதவிதத்தை கொண்டது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், பிரிவினைவாதிகளுக்கு இணங்கி இந்த பகுதிக்கு சீனா சுதந்திரத்தை வழங்கினால் தன் நிலப்பரப்பில் கணிசமான அளவை அது இழக்க வேண்டிவரும்.
இங்குள்ள உய்குர் இனத்தவரின் எண்ணிக்கை 45%. இந்த பகுதியில் உள்ள மற்ற முஸ்லிம் இனத்தவரையும் சேர்த்தால், சின்ஜிஅங் பகுதியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் முஸ்லிம்கள். மீதம் இருப்பவர்கள் ஹன் இன சீன மக்கள்.
தமிழ் பேசுவதால் தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போல, உய்குர் மொழி பேசுவதால் இவர்கள் உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை கையெழுத்து படிவமாக (Script) கொண்ட மொழியாகும்.
உய்குர் இனத்தவரை பொறுத்தவரை, இவர்கள் மதத்தால், கலாச்சாரத்தால், மொழியால் ஹன் இனத்தவரிடமிருந்து (இவர்கள் மாண்டரின் மொழி பேசுபவர்கள்) வேறுபட்டவர்கள். உய்குர் இனத்தவரின் முன்னோர்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்கள்.
எப்படி ரஷ்யாவிற்கு ஒரு செஸ்னியாவோ அது போல தான் சீனாவிற்கு சின்ஜிஅங். எப்படி ரஷ்யாவால் செஸ்னியாவை விட்டு கொடுக்க முடியாதோ அது போல சீனாவினாலும் சின்ஜிஅங்கை விட்டு கொடுக்க முடியாது. எண்ணை, இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இந்த பகுதியில் மிகுந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.
1949-ஆம் ஆண்டுக்கு முன், சின்ஜிஅங்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவின் உதவிக்கொண்டு தங்களை குடியரசாக அறிவித்து கொண்டார்கள் உய்குர் இன மக்கள். அந்த குடியரசின் பெயர் கிழக்கு துர்கெஸ்தான் (East Turkestan). அந்த ஆண்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இந்த பகுதியை மீண்டும் பிடித்தது. இதனை தன்னாட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கிருந்த ஹன் இன மக்களின் எண்ணிக்கை ஆறு சதவிதம் மட்டுமே. உய்குர் இன மக்களோ 80-90% இருந்தனர். இன்றோ ஹன் இனத்தவர் 40% இருக்கின்றார்கள், உய்குர் இனத்தவரோ 45% இருக்கின்றார்கள்.
இது எப்படி சாத்தியம்?
இந்த பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை நீர்த்துப்போக செய்ய அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது சீன அரசு என்பது உய்குர் மக்களின் குற்றச்சாட்டாகும்.
ஆனால் சீன அரசு இதனை மறுக்கின்றது. இயற்கை வளங்கள் அதிகம் வாய்ந்த சின்ஜிஅங்கில், பொருளாதார நடவடிக்கைகள் பெருகும்போது, இயல்பாகவே, மற்ற இடங்களில் வசிக்கும் ஹன் இன சீன மக்கள் அந்த பகுதியை நோக்கி நகர்வது வாடிக்கையானது தான் என்பது சீன அரசின் வாதமாக இருக்கின்றது.
சீன அரசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும் அதே நேரத்தில், நாம் மற்றொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். உய்குர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி சின்ஜிஅங். இவர்கள் அறிந்ததெல்லாம் தங்களுடைய தாய்மொழியும், அரபியும் மட்டுமே. அப்படியிருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மாண்டரின் (சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி) மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
(இதுமட்டுமல்லாமல், 2002-ஆம் ஆண்டு, சின்ஜிஅங் பல்கலைகழகத்தில் உய்குர் மொழி பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்தது அரசு)
இதனால், இயல்பாகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் உய்குர் இன மக்கள். தங்களுடைய பொருளாதார வாய்ப்புகள் ஹன் இனத்தவருக்கு போகின்றன என்பது உய்குர் இனத்தவரின் நீண்ட கால ஆதங்கமாக இருக்கின்றது. சின்ஜிஅங் பகுதியை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாக புரியக்கூடிய விஷயம் இது.
பல ஆண்டுகளாக பனிப்போராக நீடித்து வந்த உய்குர்-ஹன் இனத்தவருக்குள்ளான பிரச்சனையின் வெளிப்பாடே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரமான இனக்கலவரங்கள் (July, 2009). இதில் சுமார் 156 பேர் இறந்தார்கள், 800-ருக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இந்த கலவரத்திற்கு பிரிவினைவாதிகளே காரணமென சீன அரசு குற்றஞ்சாட்டியது. சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1400 பேர் கைது செய்யப்பட, தங்களின் கணவர்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதாக கூறி பெண்கள் போராட்டங்களில் குதிக்க, பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
பிரிவினைவாதம் குறித்து பேசும்போது சில சுவாரசிய செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. சின்ஜிஅங்கில் சுதந்திர கோஷம் கேட்பதென்பது அறுபது ஆண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால், 2001-க்கு பிறகு இதில் முக்கிய திருப்புமுனையாக, இந்த பிரிவினைவாதத்தை பயங்கரவாதத்தோடு (அதிகளவில்) தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்தது சீன அரசு. தன்னுடைய சின்ஜிஅங் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தை காரணம் காட்டி உலகளவில் ஆதரவை தேட ஆரம்பித்தது சீனா.
ஆனால் சீனாவின் இத்தகைய அணுகுமுறையை கடுமையாக கண்டித்தன மனித உரிமை இயக்கங்கள். தீவிரவாதத்தின் மீதான நடவடிக்கை என்று கூறி உய்குர் இனத்தவர் மீதான தங்களது அடக்குமுறையை அதிகரிக்கப்பார்க்கின்றது சீன அரசு என அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை, உய்குர் இன மக்களின் மத நம்பிக்கைகள் மீதான சீன அரசின் அடக்குமுறை. வேலை நாட்களில் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு.
நிச்சயமாக சீன அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வினோதமானவை. ஏனென்றால், கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளது சீன அரசாங்கம் பலவிதத்திலும் முஸ்லிம்களுக்கு உதவியாக இருந்துள்ளது சீன அரசு. அப்படியிருந்தவர்கள் இன்று இப்படி செயல்பட என்ன காரணம்? மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.
தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், "தனி நாடு" கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை.
இப்போது இவர்களுக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், சீன அரசின் நடவடிக்கைகளால் தங்களின் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ என்பது தான்.
பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம்,
உய்குர் மொழியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
அதன் மூலமாக இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது,
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர் இனத்தவர் மீது நடத்தும் அடக்குமுறையை கைவிடுவது,
மத நம்பிக்கைகள் மீதான தன்னுடைய அதிகாரத்தை கைவிடுவது,
உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.
உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.
ஆக, இவை தான் சின்ஜிஅங் பிரச்சனையின் முக்கிய சாரம்சங்கள். அப்பகுதியில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவத்தின் மூலம் நிரந்தர அமைதி திரும்பலாம்.
உய்குர்களுக்கும், ஹன் இனத்தவருக்குமிடையே பல வேறுபாடுகள் என்றால், ஹுய் இனத்தவருக்கும் ஹன் இனத்தவருக்குமிடையே (பெரிய அளவில்) ஒரு வேறுபாடும் கிடையாது.
ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். இவர்களுக்குள்ளான (வெளிப்படையாக தெரியும்) வித்தியாசங்கள் என்றால், அது, ஹுய் இனத்தவர்,
பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள்,
மதுவை விலக்குவார்கள்,
பெண்கள் ஹிஜாப் அணிவார்கள்
என்பன போன்றவை தான்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.
யார் இந்த ஹுய் இனத்தவர்?
இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும்.
சீன முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது நம்மில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம், பலவித இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்கள் மார்க்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் அந்த அர்ப்பணிப்புதான். அல்ஹம்துலில்லாஹ்.
சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் குறித்து பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்க்கவிருக்கின்றோம்.
முன்னரே கூறியது போன்று, சீனாவின் பெரும்பான்மை இனமான ஹன் இனத்தவருக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால், ஹன் இனத்தவருக்கும் ஹுய் இன முஸ்லிம்களுக்கும் அப்படிப்பட்ட பெரிய வேறுபாடுகள் கிடையாது. பார்ப்பதற்கு அப்படியே ஹன் இனத்தவரை ஒத்திருப்பார்கள் ஹுய் முஸ்லிம்கள். இரு இனத்தவரும் பேசுவது மாண்டரின் மொழிதான். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு இனத்தவர், காரணம் இஸ்லாம்.
ஆம், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.
கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் நிகழ்வுகளை இப்படித்தான் விளக்குகின்றன ஊடகங்கள்.
சீனாவில் இஸ்லாம் நுழைந்த வரலாறு:
அரேபிய முஸ்லிம்களின் வரலாறு எவ்வளவு பழமையானதோ (கிட்டத்தட்ட) அதே அளவு பழமையானது சீன முஸ்லிம்களின் வரலாறு என்ற செய்தி.
ஹுய் முஸ்லிம்களின் வரலாற்றை பின்தொடர்ந்து சென்றோமானால் அது நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு (/அருகில்) செல்கின்றது.
651-ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலிபாவான உஸ்மான் (ரலி) அவர்கள், தன்னுடைய தூதுக்குழுவை சீன பேரரசரான யுங் வீய்யிடம் (Yung-Wei) அனுப்பியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த தூதுக்குழுவை தலைமையேற்றி நடத்திச்சென்றது நாயகம் (ஸல்) அவர்களின் உறவினரான சாத் இப்ன் அபி வக்கஸ் (ரலி) அவர்கள். இந்த தூதுக்குழு சீன ஆட்சியாளரை சந்தித்து இஸ்லாமை தழுவுமாறு அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை நிராகரித்துவிட்டாலும், இஸ்லாம் மீதான தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க உத்தரவிட்டார் யுங் வீய். இது 'நினைவுச்சின்ன' பள்ளிவாசல் (Memorial or Huaisheng Mosque) என்றழைக்கப்படுகின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாக இன்றுவரை நீடித்து தன்னுடைய பெருமையை பறைச்சாற்றி கொண்டிருக்கின்றது இந்த பள்ளி.
சீனாவிலுள்ள வரலாற்று ஆவணங்கள் மேற்கூறிய செய்தியை தெரிவித்தாலும், அரேபிய ஆவணங்கள் வேறுவிதமான செய்தியை சொல்கின்றன. அதாவது, நாயகம் (ஸல்) அவர்களது காலத்தின்போதே, நபித்தோழர்கள் மூலமாக இஸ்லாம் சீனாவிற்கு சென்றிருக்கின்றது என்ற செய்திதான் அது. இதனை சில மேற்கத்திய ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர்.
மற்றொரு தகவலும் இருக்கின்றது. சீனர்களுடனான அரேபியர்களின் தொழில்முறை உறவானது இறுதித்தூதர் வருவதற்கு முன்பிருந்தே வலிமையாக இருந்துள்ளது. பஸ்ரா நகரிலிருந்து அரேபியர்கள் மற்றும் பெர்ஷியர்கள் வணிகம் செய்ய சீனாவிற்கு சென்றுள்ளனர். இப்படிச் சென்றவர்களில் சிலர் சீனாவிலேயே நிரந்தரமாக தங்கியும் விட்டனர். பின்னர் இஸ்லாம் பரவியபோது, தங்களது உறவினர்கள் மூலமாக சீனாவில் இருந்த அரேபியர்கள்/பெர்ஷியர்கள் இதனை அறிந்துக்கொண்டு இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என்பது அந்த மற்றொரு தகவல்.
மொத்தத்தில், சீனாவில் இஸ்லாம் நுழைந்த மிகச்சரியான காலக்கட்டம் குறித்து வெவ்வேறான தகவல்கள் இருந்தாலும், அனைத்து ஆய்வாளர்களும் ஆமோதிக்கும் ஒரு தகவல், ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் சீனாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதுதான்.
யார் இந்த ஹுய் முஸ்லிம்கள்?
அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சீனாவுடனான வணிகத் தொடர்புகள், அரசியல்ரீதியான தொடர்புகள் வலுப்பட, அதிக அளவிலான முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்தனர். வந்தவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் சீனர்களை மணந்துக் கொண்டு சீனாவிலேயே குடியேரியும் விட்டனர்.
இப்படி குடியேறியவர்களின் சந்ததியினர்தான் இன்று ஹுய் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஹுய் என்றால் என்ன அர்த்தம்?
சீனாவிற்கு வந்த அக்கால முஸ்லிம்களை சீனர்கள் 'ஹுய்ஹுய்' (HuiHui) என்றழைத்தனர். இந்த வார்த்தைக்கு 'வெளிநாட்டினர்' என்று அர்த்தம். பிறகு இந்த வார்த்தையே ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெயராக நிலைத்துவிட்டது.
ஹுய் முஸ்லிம்கள் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:
ஹுய் இனத்தவரின் இன்றைய பெயர்களின் முதல் எழுத்துக்களை உற்றுநோக்கினால் சில சுவாரசிய தகவல்களை புரிந்துக் கொள்ளலாம். 'ஹ' என்ற முதற்பெயர் 'ஹசன்' என்ற பெயரிலிருந்து வந்தது. அதுபோல, 'ஹு' என்ற முதற்பெயர் 'ஹுசைன்' என்பதிலிருந்து வந்தது. இப்படியாக இவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் அது இவர்களுடைய மூதாதையர்களிடம் போய் நிற்கும்.
கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி (2000 census), ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் ஒரு கோடி. சீன அரசால் பிரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் இனங்களிலேயே அதிக மக்கட்தொகையை கொண்ட இனம் ஹுய் தான். இவர்களுக்கு பிறகு உய்குர் இன முஸ்லிம்கள் வருகின்றனர்.
சீனா முழுக்க ஹுய் இன மக்கள் பரவியிருந்தாலும், ஐந்தில் ஒரு பகுதியினர் நின்க்சியா-ஹுய் தன்னாட்சி பகுதியில் (Ningxia Hui autonomous region) வாழ்கின்றனர்.
2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் உள்ளன.
அரபி மொழி மீதான ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. 2005-ஆம் ஆண்டு, நின்க்சியா பல்கலைகழகம், அரபி மொழிக்கென தனி துறையை தொடங்கி இருக்கின்றது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் அரபி கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கின்றன.
2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில், சுமார் 3000 மாணவர்கள் இமாம்களாக பணியாற்றுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இனி, சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்ப்போம்.
சீன வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம், சீன முஸ்லிம்கள் தங்கள் நாட்டிற்கு செய்த அளப்பரிய பங்களிப்புகள்.
கடல்வழி ஆராய்ச்சி, அரசியல், ராணுவம், கலை என்று பல துறைகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்காற்றியுள்ளனர் முஸ்லிம்கள்.
கொலம்பஸ்சுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்று போற்றப்படும் ஷெங் ஹி முதற்கொண்டு இன்றைய சீனாவின் விவசாயத்துறை துணை அமைச்சரான ஹுய் லியாங்யு வரை சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்த முஸ்லிம்கள் பலர்.
நாம் மேலே பார்த்த ஷெங் ஹி மற்றும் அவரது குழுவினர்தான் மலேசியாவில் இஸ்லாமை பரப்பியவர்கள் என்ற வரலாற்று தகவல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
க்விங் (Qing Dynasty, 1644-1912) அரசப் பரம்பரை ஆட்சியை தவிர்த்து, சீனாவை ஆண்ட மற்ற பரம்பரைகளுடன் இணக்கமான உறவையே முஸ்லிம்கள் கொண்டிருந்தனர். பின்னர் 1912-ஆம் ஆண்டு சீன குடியரசு பிறந்தபோது, அரசுடனான முஸ்லிம்களின் உறவு மேம்பட தொடங்கியது.
மாவோவின் பண்பாட்டுப் புரட்சி:
மாவோ தலைமையில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின்போது (1966-1976), முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன, பூட்டப்பட்டன.
மாவோவின் மரணத்திற்கு பிறகு நிலைமை சீரடையத் தொடங்கியது. பள்ளிவாசல்கள் முஸ்லிம்களிடத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அவை சீர் செய்யப்பட அரசாங்கம் உதவி செய்தது.
நீண்ட காலத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கத்தை வெளிப்படையாக பின்பற்ற வெளியே வந்த முஸ்லிம்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், புரட்சிக்கு முன்பிருந்ததை காட்டிலும் தற்போது முஸ்லிம்கள் அதிக அளவில் பெருகி இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இறைநம்பிக்கையில் சிறந்தவர்களாவும் இருந்தனர். இறைவனின் கிருபையை எண்ணி அகமகிழ்ந்தனர் முஸ்லிம்கள். அன்று தொடங்கிய மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமை சரிவர பின்பற்றும் சீன முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஏசியா டைம்ஸ் இணையதளம் கூறுகின்றது. மார்க்க கல்வி கற்போரும், ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துவிட்டதாக அது மேலும் கூறுகின்றது.
சீன அரசின் அணுகுமுறை:
சீன அரசாங்கத்தை பொருத்தவரை முஸ்லிம்கள் விசயத்தில் (சின்ஜிஅங் பகுதியை தவிர்த்து) சிறிது அனுசரித்து போகவே விரும்புகின்றது. காரணம், முஸ்லிம் நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவு. சீன பொருட்களை நுகரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன மத்திய கிழக்கு நாடுகள். இந்த உறவை எக்காரணத்தை கொண்டும் துண்டித்துக் கொள்ள விரும்பவில்லை சீனா. அரபி மொழி கற்பதை சீன அரசு ஊக்குவிப்பதும் இந்த காரணத்திற்காக தான்.
(நாட்டிற்கு முன்பாக தங்களது மார்க்கத்தை பிரதானப்படுத்த கூடாது. பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மதக் கட்டளைகளை பிறப்பிக்க கூடாது. இமாம்களாக பணியாற்ற விரும்புபவர்கள் அரசாங்க அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை கடைப்பிடிக்கலாம்).
முஸ்லிம்களுடனான சீன அரசின் நல்லுறவுக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 1993-ஆம் ஆண்டு, தங்களை புண்படுத்தும்விதமாக ஒரு புத்தகம் இருக்கின்றது என்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்த, அந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டது சீன அரசு. அதுமட்டுல்லாமல், அந்த நூலை பிரசுரித்த நிறுவத்தின் தலைமை நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.
சீன அரசின் ஒருக் குழந்தை திட்டம் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு பொருந்தாது.
எட்டு வெவ்வேறு அறிஞர்களின் குர்ஆன் (அர்த்தங்களின்) மொழிபெயர்ப்புகள் மாண்டரின் மொழியில் உள்ளன.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 2007-ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை முதல் முறையாக பத்தாயிரத்தை தொட்டது. சென்ற ஆண்டு இதுவே 13,100-ஆக உயர்ந்தது.
சீனாவில் 30,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன (பீஜிங் நகரில் 72 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. சுமார் மூன்று லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்). 40,000-க்கும் மேற்பட்ட அரசாங்க அனுமதிப் பெற்ற இமாம்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகின்றது.
பெண்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள்:
தங்களின் தனித்தன்மையாக சீன முஸ்லிம்கள் கருதும் மற்றொரு விஷயம், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளிவாசல்கள்.
தொழ வைப்பதிலிருந்து, இந்த பள்ளிவாசல்களை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் பெண்களே கவனித்துக் கொள்கின்றனர்.
சீனாவின் Kaifeng நகரில் மட்டும் இதுப்போன்ற சுமார் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் இருநூறு பெண் இமாம்கள் உள்ளனர்.
பெண்களுக்கான பள்ளிவாசல்கள் என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இம்மாதிரியான பள்ளிவாசல்கள் சீனாவில் இருக்கின்றன. பெண்களுக்கான பல்நோக்குகூடங்களாக திகழ்கின்றன இந்த பள்ளிவாசல்கள்.
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் உங்களில் சிலருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். சீன முஸ்லிம்கள் பற்றிய பல அற்புத தகவல்கள் சீன அரசின் கட்டுப்பாடுகளால் உலகளாவிய முஸ்லிம்களின் கவனத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றன.
சுமார் 1400 ஆண்டுகளாக, (முஸ்லிம்கள் என்னும்) தங்களுடைய அடையாளத்தை சுமந்து வந்திருப்பதென்பது நிச்சயமாக சாதாரண விசயமல்ல. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம், தான் சார்ந்த நாட்டின் கலாச்சாரத்தில் மூழ்கி தன்னை தொலைத்துவிடாமல் இருந்தது நிச்சயம் வியப்பளிக்கும் தகவல்.
சீன முஸ்லிம்கள் குறித்த இந்த பதிவுகளில் பகிர்ந்துக் கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிய பகுதி மட்டுமே. சீன முஸ்லிம்கள் என்னும் நம் மார்க்க சகோதரர்கள் நம்மிடமிருந்து தனிமைப்பட்டு நின்றாலும், தங்களின் ஈமானை தக்க வைத்துக் கொண்டதில் நமக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல...அல்ஹம்துலில்லாஹ்.
இளைஞர்கள் அதிகளவில் வீரியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சீன முஸ்லிம் சமூகத்தை பார்க்கும்போது, அவர்களின் எதிர்காலம் பிரகாசமான ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ்.
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்
No comments:
Post a Comment