அபூ காஸி
எகிப்தில் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி மீண்டும் பிரகாசிக்கிறார் . இவரின் வெற்றி புதிய எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளில் அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , முர்ஸியின் வெற்றி இலங்கை தம்புள்ளை வரையிலும் அதன் தாக்கத்தை கொண்டிருக்கும் என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்றல்ல.அந்த வகையிலும் முர்ஸி பற்றி தெரிந்து கொள்வது இலங்கை அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது .

எகிப்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் எவருக்கும் 50 வீதத்திக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வில்லை. 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி பல முன்னணி சர்வதேச நோக்கர்களின் எதிர்வு கூறல்களை பொய்ப்பித்து வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் . தேர்தலில் முஹம்மது முர்ஸி 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்றார் . இரண்டாவது இடத்தை முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் எவரும் எதிர்பார்க்காத விதமாக 55 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் . அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை 48 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பெற்றுள்ளார் .

இரண்டாம் கட்ட தேர்தலில் 58 லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு சலபிகள் அமைப்பு தமது ஆதரவை தெரிவித்துள்ளது . அதேவேளை 41 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ளது. அதேவேளை அஹ்மத் ஷபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் அந்த அமைப்புக்கள் வர்ணித்துள்ளது .
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள ஆயுள் தண்டனையை அந்த அமைப்புகள் ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்று தெரிவித்துள்ள . முஹம்மது முர்ஸி அதிகாரத்தை கைப்பற்றினால் மீண்டும் ஹுஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ”நீதிமன்ற தீர்ப்பு” வழங்கப் படவேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கோரிவருகிறது . இதற்கு முஹம்மது முர்ஸியும் உடன்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் இடம்பெறவுள்ளது . இது தொடர்பாக நான் கடந்த மாதம் 15 ஆம் திகதி தொகுத்து விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆக்கத்தை lankamuslim.org க்கு சில மாற்றங்களுடன் தருகிறேன் .

கலாநிதி முஹம்மது முர்ஸி , இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவில் முன்னாள் உறுப்பினரான இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவர். கலாநிதி முஹம்மது முர்ஸி 2000-2005 ஆண்டுகால பகுதில் பாராளுமன்ற மக்கள் சட்டமன்றத்தில் இஹ்வான் அணியின் பாராளுமன்ற தலைவராக கடமையாற்றியுள்ளார்.
இவர் எகிப்து சகஜிக் (Zagazig University) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பருப்பொருள் அறிவியல் துறையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் ஆய்வு அறிவியல் துறைக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார் .
முஹம்மத் முர்ஸி ஈஸா அல் இயாத் என்பது அவரது முழுப் பெயர் எகிப்தின் ஷர்க்கிய்யா மாகாணத்தின் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 1978 இல் அதே பல்கலை கழகத்தில் இருந்து உலோக தொழிற்கலை பொறியியல் முதுகலைப்பட்டம் (Master of Engineering degree in Metallurgy) பெற்றார். அவர் மேற்கொண்டு, 1982 இல் அமெரிக்க தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் (PhD) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் பேராசிரியராக கடமையாற்றிய போது அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச மாநாடு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். எகிப்திய சியோனிச திட்டங்களை எதிர்க்கும் அமைப்பின் இஸ்தாபக -உறுப்பினராகவும் விளங்கும் இவர் தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் தனது கடின உழைப்பினால் சிறந்து விளங்கியுள்ளார்.
கலாநிதி முஹம்மது முர்ஸி பல்வேறு அறிவியல் துறைகளில் இருந்து தனது சிறப்பான திறமைகள் மற்றும் திறன்களை நிரூபித்து அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க , தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் (practical production solutions) தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும் .
அவர் ஆரம்ப எண்பதுகளில் விண்கலம் இயந்திரங்கள் மேம்பாட்டியல் அறிவியல் துறையில் நாசாவில் பணியாற்றிய போது “உலோகங்களில்”, “metal surface treatment” என்ற துறையில் அதிகமான ஆய்வுகள் செய்துள்ளார். .
அதேவேளை சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்துள்ளார் .இந்த நிலைப்பாடு காரணமாக, கலாநிதி முஹம்மது முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர், கலாநிதி முஹம்மது முர்ஸி அப்பட்டமான தேர்தல் மோசடி எதிராக சுதந்திரம் கோரிய நீதிபதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வழிநடத்தினார். இதன் விளைவாக, இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க 500 உறுப்பினர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். மத்திய கெய்ரோவின் வட கெய்ரோ நீதிமன்றம் மற்றும் அல் ஜலா கோர்ட் வளாகம் முன் எதிர்ப்பு ஆர்பாட்டயங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஈடுபட்டபோது மே 18, 2006 காலை இவர் கைது செய்யப்பட்டு . சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.

கலாநிதி முஹம்மது முர்ஸி பல வதைகளை அனுபவித்தார். அவர் மட்டுமல்ல. சர்வாதிகார ஆட்சியாளர் ஹுசனி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் , 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்துள்ளார் .
கலாநிதி முஹம்மது முர்ஸி பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்பான அரசியல் சேவையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அவர் இஹ்வான் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவின் உறுப்பினராக அதன் சூரா சபையால் தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 25 புரட்சிக்கு பின்னர், இஹ்வான்களினால் சுதந்திரதற்கும் நீதிக்குமான அரசியல் கட்சி நிறுவப்பட்டது போது அதன் தலைவராக அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் சூரா அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள ,செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். .
கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான்களின் அரசியல் திட்ட முகாமையில் அளப்பெரிய பங்காற்றியுள்ளார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்க மறுசீரமைப்பு பணியில் இவரின் பங்களிப்பு பெரிதும் பேசப்படுகிறது. 2007ஆம் ஆண்டு இஹ்வான்கள் வெளியிட்ட அரசியல் வேலைத்திட்ட அறிக்கையிலும் இவரின் பங்களிப்பு பெரிதும் இருந்துள்ளது.
இன்று மீண்டும் எகிப்தில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் இரு வாரங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் – என்பதுடன் இலங்கை அரசியலிலும் அவரின் வெற்றி தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்.
Thanks: Lankamuslim.
No comments:
Post a Comment