Search This Blog

Sep 5, 2012

ரொஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றக் கோரி மியன்மாரில் துறவிகள் ஊர்வலம்

protest against Muslims in Myanmar


ரொஹிங்கியா முஸ்லிம்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் மியன்மார் ஜனாதிபதி செயினின் திட்டத்திற்கு ஆதரவளித்து நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மன்டலெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பிரமாண்ட ஊர்வலம் இடம்பெற்றது. இதன் மூலம் மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் அந்நாட்டு பெளத்தர்களுக்கு இடையிலான இன முறுகல் மேலும் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுனில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற பெளத்த துறவிகள், ‘ஜனாதிபதிக்கு ஆதரவளித்து எமது தாய் நாட்டை பாதுகாருங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய விரது என்ற பெளத்த துறவி ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு கூறும் போது, ‘இந்த ஊர்வலத்தின் மூலம் ரொஹிங்கிக்கள் மியன்மார் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்’ என்றார். மேற்படி பெளத்த துறவி இஸ்லாமிய எதிர்ப்பு பிரசுரங்களை விநியோகித்ததற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு 25 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்.
எனினும் கடந்த ஜனவரியில் அவர் பொதுமன்னிப்பு பெற்று விடுதலையானார். இந்த ஊர்வலம் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடத்தப்படும் என்றும் அதில் பல மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் என மியன்மார் அரசு கூறி வருகிறது. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதுதான் தீர்வு என மியன்மார் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், பங்களாதேஷ¤ம் அவர்களை ஏற்க மறுக்கிறது.
உலகில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இனமாக ரொஹிங்கியா முஸ்லிம்களை ஐ.நா. சபை அடையாளப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة