ரிசானாவின் உயிரைக் காக்கக் கோரிக்கை
ஒக்டோபர் 27, 2010 சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக்குக்கு மன்னிப்பு வழங்கக் கோரும் மனுவொன்றில் கையொப்பங்கள் பெறும் செயற்றிட்டமொன்று இன்று கண்டியில் நடைபெறவுள்ளது.
கண்டி நகரத்திலுள்ள பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடம் ரிஸானாவை விடுதலை செய்வதற்கான மனுவில் கையொப்பங்கள் பெறப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிரமசக்தி அமைப்பின் தலைவியுமான சாந்தினி கோங்காகே குறிப்பிட்டுள்ளார்.
இன்று மஹியாவைக் கிராமத்தில் அவரின் விடுதலை வேண்டி மத வழிபாடொன்றும் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ரிசானாவினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடம் அவரின் உயிரைக் காப்பாற்றுமாறு மஹியாவை மக்கள் இன மத வேறுபாடின்றி வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப் பெண்ணான ரிஸானாவுக்கான தண்டனை தொடர்பில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடித மூலம் கோரியுள்ளார்.
இக்கடிதத்தை நேற்றுக் காலை சவூதி அரேபிய மன்னர்அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஷுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என அரச தகவல் திணைக்களம் கூறுகிறது.
2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவூதி சென்ற மூதூரைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் தனது எஜமானரின் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் போது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.
குழந்தையை ரிஸானா கொலை செய்துவிட்டதாகச் சம்பந்தப்பட்ட எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரணை செய்த சவூதியிலுள்ள தவாமி மேல் நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
இதனை ரியாத் உயர்நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது.
இந்தத் தீர்ப்புத் தொடர்பாக ரிசானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன் முறையீட்டு மனு சவூதி உயர் நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சட்டரீதியாக ரிசானா சார்பில் மேலும் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ளன.
இந்நிலையிலேயே ரிஸானா விடயத்தில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னரிடம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
Thanks :http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=4031:2010-10-27-05-51-21&catid=85:news-item-1
No comments:
Post a Comment