Search This Blog

Jan 4, 2011

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை ஒழிக்க புலனாய்வுக் குழு



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளும், வெளி இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பகிடிவதையை ஒழிப்பதற்கு விசேட
 புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பொலிஸாரின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார். 

புதிய கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 
மீது சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு
 வெளியே, பல்வேறு இடங்களில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து 
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார். 

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பகிடிவதை முற்றாக
 ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மாணவர்களை
 வரவேற்பதாகக் கூறி அவர்களை பாடசாலைகள், பொதுஇடங்கள்,
 விழா மண்டபங்கள் போன்ற இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள்
 ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விடங்களிலும் மற்றும் பஸ்தரிப்பு
 நிலையங்கள், பஸ் வண்டிகள் போன்ற இடங்களிலும்
 பகிடிவதையில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், வெளியிடங்களில் எங்காவது பகிடிவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிந்தால் பல்கலைக்கழக சமூகமும், 
பெற்றோரும், சமூக நலன் விரும்பிகளும் உடன் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுள்ளனர். 

இதேவேளை, ஒருசில தினங்களுக்கு முன்னர் கல்முனை
 பிரதேசத்தில் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த 
தகவலையடுத்து,பொலிஸாருடன் பல்கலைக்கழக 
கண்காணிப்புக் குழுவினர் சென்றதன் பயனாக தடுக்கப்பட்டதாக 
உபவேந்தர் சுட்டிக்காட்டினார். 

பகிடிவதையில் ஈடுபடுவதாக நிரூபிக்கப் பட்டால் 
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கமைய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதோடு, மாணவ அங்கத்துவமும் பறிக்கப்படலாம். பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி 
செயற்படுத்தவுமே பகிடிவதை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உபவேந்தர் இஸ்மாயில் 
மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة