இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள், அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என அமைந்த இயற்கை எழில்கள் விழிகளுக்கு விருந்தாகும். மண் சேர்ந்து மலையானது மட்டுமல்லாது, அதனிடையிடையே பச்சைப் பசேலென வளர்ந்து விரிந்த பாரிய மரங்கள் பார்வைக்கு பக்குவமாய் திகழும். முழு நிலவில் பலரும் இங்கு தங்கள் பொழுதை இனிதாகக் களித்துவிட கூடிடுவார்கள். பௌர்ணமி நாளில் மண்மலையின் உச்சியிலிருந்து கடலை பார்க்கும் போது, நிலவின் விம்பம் கடல் நீர்ப்பரப்பில் தெரியும் காட்சி இருக்கின்றதே, அக்காட்சியின் அழகை வர்ணிக்க சொற்களே இல்லை. குளிர் காற்று சில்லென்று வீசுகையில் நிலவினை மேகம் மறைத்து பின்னர் அதனைத் தாண்டிச் செல்லுகையில் மண்மலையில் ஒளி மாற்றங்கள் கொண்ட விழாக் காட்சி போல் இரம்மியமான பொழுதுகள் மாறி மாறி வரும்
மண்மலையின் தெற்காக ஜலால்தீன் சதுக்க பிரதேசமும், கிழக்காக கடற்கரையும், மேற்காக மதுரஞ்சேனை பிரதேசமும், வடக்காக சின்னப்புதுக்குடியிருப்பு பிரதேசமும். எல்லைகளாக அமைந்து காணப்படும். கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மண்மலையானது ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பொத்துவில் மண்மலை எப்போது, எவ்வாறு உருவாகியது? என்பதற்கான தெளிவான பதில்களோ, விளக்கங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் பண்டைய காலத்தில் கடற்கோள் போன்ற ஓர் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதே மண்மலை உருவாகியிருக்கக்கூடும் என வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் சொல்வார். ஆயினும் பொத்துவில் அறுகம் குடா, மிகவும் முக்கியமான துறைமுகமாகக் திகழ்ந்ததாகவும் அறுகம் குடா என்பது Lithus Magnus எனும் பெயரில் வழங்கப்பட்டதாகவும் கி.பி 140 காலப்பகுதியில் தொலமியினால் வரையப்பட்ட வரைபடமும் குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. அறுகம் குடா சிறந்த துறைமுகமாக திகழ்வதற்கு அவ்விடம் அமைந்திருந்த மண்மலை பெரிதும் காரணமாக அமைந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பாதுகாப்ப வைக்க ஒரு தளமாக மண்மலை அமைந்நதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பழம் பெரும் வரலாற்றினைக் கொண்ட மண்மலை இன்னும் அமைதியாய் ஏன் அடக்கமாய் நிமிர்ந்து நின்று மக்களுக்கு ஓய்வெடுக்கும் களமாக அமைந்துள்ள நிலையை எண்ணுகையில் இயற்கையின் படைப்புகளுக்கு ஏது நிகர் என வினவத் தோன்றுகின்றது
No comments:
Post a Comment