Search This Blog

Nov 14, 2010

முஸ்லிம்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள தேசப் பிரேமிகள்


ஹஜ் பெருநாள் கொண்டாடுவதில் முஸ்லிம்கள் அச்சம்.


நாட்டில் இனக் கலவரங்களைத் தூண்டுவதற்கு சிங்கள தேசப் பிரேமி என்ற இயக்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதாகவும், பசுவதை எதிர்ப்பு என்ற போர்வையிலேயே இந்தப் பிரேமிகள் இனக் கலவரங்களை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இணையத்தளம் இதுதொடர்பாக வெளியிட்ட மேலதிக செய்தியில்:
“எதிர்வரும் புதன்கிழமை முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர். இந்தத் தினத்தில் அவர்கள் குர்பான் கொடுப்பது வழக்கம். தங்களது வசதிக்கு ஏற்ற வகையில் மாடுகளையோ ஆடுகளையோ அறுத்து முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பர். இது அவர்களின் மத அனுஷ்டானங்களில் ஒன்றாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ள சிங்கள தேசப் பிரேமிகள் தற்போது முஸ்லிம்களுக்கும் பசுவதைக்கும் எதிராக துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளதுடன் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் இதனைச் சுவரொட்டிகளாகவும் ஒட்டியுள்ளனர்.
இதேவேளை, மிருக வதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக முஸ்லிம்கள் தமது ஹஜ் பெருநாளை இஸ்லாமிய சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடுவதில் அச்சமடைந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, சில மாதங்களுக்கு முன்னர் சிலாபம் முன்னேஸ்வரம் காலி கோவிலில் இந்துக்கள் மாடுகளைப் பலி கொடுக்க முயன்றபோதும் இதே சிங்கள தேசப் பிரேமிகள் அதனைத் தடுக்க முயன்றமை தெரிந்ததே.
இதன் மூலம் இந்தச் சிங்கள தேசப் பிரேமி என்ற இயக்கம், முஸ்லிம், இந்து கத்தோலிக்க மதங்களுக்கு எதிராகச் செயற்படுவது தெரிய வந்துள்ளது.
சிங்கள தேசப் பிரேமிகளால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பையும் கீழே காணலாம்.”

No comments:

Post a Comment

المشاركات الشائعة