Search This Blog

Nov 28, 2010

விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் ரகசிய ஆவணங்கள்: மீண்டும் பீதியில் அமெரிக்கா

Wiki Leaks

விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் கொடூரங்களைப் பற்றியும், மனித உரிமை மீறல்களைக் குறித்தும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவிற்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தன. கடந்த அக்டோபரில் வெளியிட்ட ரகசிய ஆவணங்களைவிட ஏழுமடங்கு வலுவான ஆதாரங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுடன் நடத்திய ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகள், தனிப்பட்ட நபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ரகசிய விபரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கிறது.

அமெரிக்கா நடத்திய ரகசிய உரையாடல்களின் விபரங்களை வெளியிடுவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனவும், இது பல்வேறு நபர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் எனவும், தேசிய நலன்களை கெடுக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

அரசுகளுடனும், தனிப்பட்ட நபர்களுடனும் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிடுவதால், உலகமெங்குமுள்ள தங்களுடைய நண்பர்கள், தூதரக பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும்.

தங்களின் சில ரகசிய ஆவணங்கள் விக்கிலீக்ஸிற்கு கிடைத்தது ஏற்கனவே தெரியும் எனவும் க்ரவ்லி தெரிவிக்கிறார். கசியப்போகும் ரகசிய விபரங்களைக் குறித்து அமெரிக்க காங்கிரஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்குமுள்ள அமெரிக்க தூதரகங்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு தகவல் அளித்துள்ளன.

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிடக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், ரகசிய ஆவணங்கள் வெளிவந்தால் அதனை எதிர்கொள்ளும் முன்னேற்பாடுகளை நாங்கள் செய்துவிட்டோம். இவ்வாறு க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

வெளிவரப்போகும் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்டது எனினும், அவை ராணுவ விருப்பங்களுக்கும் கேடாகமாறும் என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவிட் லாபான் கூறுகிறார்.

தாங்கள் பதில்கூற நேரிடும் என்ற அச்சத்தால் இவ்விவகாரத்தை மிகைப்படுத்த பெண்டகன் முயல்வதாக விக்கிலீக்ஸ் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

ஆப்கான் போரைக் குறித்த 77 ஆயிரம் ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலையிலும், ஈராக் போரைக் குறித்த 4 லட்சம் ரகசிய ஆவணங்களை கடந்த அக்டோபரிலும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












No comments:

Post a Comment

المشاركات الشائعة