Search This Blog

Feb 25, 2011

லிபியா கலவரம்: 2 முக்கிய நகரங்களை போராட்டக்காரர்கள் பிடித்தனர். குண்டுவீச விமானப்படை மறுப்பு



லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. தலைநகரம் திரிபோலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு நின்று போராடி வருகின்றனர். அவர்கள் மீது அதிபர் கடாபி ராணுவத்தை ஏவிவிட்டு உள்ளார். ஆனாலும் பொது மக்கள் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.



இதை தவிர முக்கிய நகரமான மிஸ்ரதா, சப்ரதா, பென்காசி ஆகிய நகரங்களிலும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் மிஸ்ரதா நகரை போராட்டக்காரர்கள் தங்கள் பிடியில் கொண்டு வந்து உள்ளனர். அங்கிருந்த அரசு படைகள், மற்றும் போலீசார் வெளியேறி விட்டனர். அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொது மக்கள் கட்டுப் பாட்டில் உள்ளது.

இதே போல இன்னொரு முக்கிய நகரமான பென்காசியையும் பொது மக்கள் பிடித்தனர். அவர்கள் மீது ராணுவம் விமானத்தில் பறந்தபடி குண்டுகளை வீசி வருகிறது. பதவி விலக மறுக்கும் அதிபர் கடாபி ராணுவ அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார்.

எனவே சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் அவர்களை ராணுவம் மூலம் கொன்று குவித்து வருகிறார். இதனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் இப்போது பல இடங்களில் பொது மக்ககள் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். விமானப் படையினரும் குண்டு வீச மறுக்கின்றனர்.

பென்காசி நகரில் போராட்டக்காரர்கள் மீது குண்டு வீசுவதற்கு 2 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமானத்தை ஓட்டிய 2 பைலட்டுகளும் குண்டு வீச மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் இருவரும் நடுவானில் பறந்த போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்துவிட்டு விமானத்தை கீழே விழ செய்தனர். இதில் 2 விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கின.

அந்த பைலட்டுகளில் ஒருவர் பெயர் அலி ஏமர் கடாபி. இவர் அதிபர் கடாபியின் பழங்குடியின ஜாதியை சேர்ந்தவர். ஆனாலும் கூட அவர் கடாபிக்கு எதிராக நடந்து கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. ராணுவத்திலும் கடாபிக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கடாபி அரசு வீழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா பொது மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதிபர் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி கடாபி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் இருப்பதால் உயிருக்கு பயந்த மக்கள் பக்கத்து நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். 3 லட்சம் பேர் இத்தாலிக்கு செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலிக்கு அகதிகள் வந்தால் அந்த நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இத்தாலி வெளியுறவு மந்திரி பிராத்தினி கூறியுள்ளார்

No comments:

Post a Comment

المشاركات الشائعة