ஓமனில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தினை ஒடுக்குவதற்காக பொலிசார் நடாத்தியத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைக் கண்டித்து ஆயிரம் எதிர்ப்பாளர்கள் கடலோர நகரமான சோகரில் முற்றுகையிட்டனர். ஓமனில் ஆட்சி மாற்றம், வேலை வாய்ப்புகள் மற்றும் நல்ல சம்பளம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் நகர பொலிஸ் நிலையத்தையும், 2 அரசு அலுவலகங்களையும் எரித்தனர். ஓமனின் முக்கிய தொழில் துறை மையமான சோகரில் பதட்ட நிலை நீடிக்கிறது. ஜனநாயகப் போராட்டம் அரபு உலகத்தில் எழுச்சிக் கொண்டுள்ள நிலையில் ஓமனிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சோகர் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. சோகர் நகர் முழுவதும் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தன.
சோகர் துறைமுகச் சாலையில் டிரக்குகள் நிறுத்தப்பட்ட போதும் துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என துறைமுகச் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த பதட்டத்தை தணிக்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment