Search This Blog

Feb 25, 2011

சகோதரி சாரா மாலினி பெரேரா விடுதலை: பஹ்ரைன் சென்றடைந்தார்!




பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சாரா மாலினி பெரேரா கடந்த வாரம் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலுமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள அவர் கடந்த 10 ஆம் திகதி இலங்கையிலிருந்து பஹ்ரைனைச் சென்றடைந்துள்ளதாக 'அல்முஸ்லிமாத்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பௌத்த குடும்பம் ஒன்றில் பிறந்த சாரா மாலினி பெரேரா பல வருடங்களுக்கு முன்னர் புனித இஸ்லாத்தைத் தழுவி பஹ்ரைனில் குடும்ப சகிதம் வசித்து வருகிறார்.


இந் நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 மாத விடுமுறையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் 2010 மார்ச் மாதம் பஹ்ரைன் செல்லத் தயாரான நிலையில் இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினாரால் கைது செய்யப்பட்டார்.

சாரா மாலினி பெரேராவால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட இஸ்லாமிய பிரசார நூல்கள் பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதன் மூலம் இலங்கையில் தீவிரவாத சிந்தனைகளை பரப்ப முற்படுவதாகவும் ஹெல உருமய போன்ற சி;ங்கள கடும்போக்குவாதிகள் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சில வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சாரா மாலினி பெரேரா 2010 ஏப்ரல் மாதம் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் வழக்கு விசாரணைகள் முடியும் வரை பஹ்ரைன் செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீடித்த நிலையிலேயே தற்போது அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் பஹ்ரைன் சென்று குடும்பத்தோடு இணைந்து கொள்ளவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரி சாரா மாலினி பெரேரா வழக்கு விசாரணைகள் காரணமாக இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் கொழும்பிலுள்ள அல்முஸ்லிமாத் நிறுவனத்துடன் இணைந்து பல பணிகளில் பங்கெடுத்திருந்தார். அத்துடன் பல சட்டத்தரணிகளும் சகோதரர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சாரா மாலினி பெரேராவை விடுவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة