கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்
இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.
News: தினகரன்
News: தினகரன்
No comments:
Post a Comment