Search This Blog

Feb 20, 2011

இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா




அமெரிக்கா

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நாட்டவரின் சட்ட விரோதக் குடியேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது.
கடந்த 1967ல் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையில் நடந்த போரில், பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் இஸ்ரேலியர்கள் குடியேறினர்.
காலப் போக்கில் அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், மேற்குக் கரையின் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதி மற்றும் கோலன் பீடபூமிப் பகுதிக் குடியேற்றங்களை இஸ்ரேல் ஆதரித்து வருவதோடு அங்கு குடியேறும்படி இஸ்ரேலியர்களை ஊக்கப்படுத்துகிறது. சர்வதேசச் சட்டப்படி, இந்த குடியேற்றத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சட்ட விரோதம் என்று ஒப்புக் கொண்டன. அதே நேரத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன எல்லையில் உள்ள இஸ்ரேலிய சட்ட விரோதக் குடியேற்றத்தை கண்டிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று ஒரு தீர்மானம் வாக்களிப்புக்கு விடப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால், அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இது குறித்து ஐ.நா.,வுக்கான இந்தியத் துணைத் தூதர் மஞ்சீவ் சிங் புரி கூறுகையில், பாலஸ்தீன எல்லையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றம் சர்வதேச சட்டப்படி சட்ட விரோதம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது என்றார்.
"வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம், இஸ்ரேலியக் குடியேற்றம் சரியே என, அமெரிக்கா ஆதரவளித்தாக கருத வேண்டாம். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை தீர ஒரே வழி. இது போன்ற தீர்மானங்கள் பிரச்னையைத் தீர்க்காது' என்று ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة