Search This Blog

Jul 9, 2011

சௌகரியத்திற்காக மறக்கப்பட்ட யாழ் முஸ்லிம் மக்கள். : ரி கொன்ஸ்ரன்ரைன்

அண்மையில் (ஏப்ரல் 2011) நான் யாழ்ப்பானம் சென்றிருந்தபோது ஒன்றரை நாளை யாழ் முஸ்லிம் சுற்றுவட்டாரத்தினுள் செலவிட சந்தர்ப்பம் கிடைத்தது. போர் முடிவுற்ற 18 மே 2009 ம் நாளிலிருந்து செட்டிக்குளத்தில் உள்ள அகதிகள் முகாம் தொடக்கம் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பேபுச பனாங்கொட உட்பட பல அகதி முகாம்களுக்கும் தடை முகாம்களுக்கும் பல தடவைகள் சென்று வந்திருக்கிறேன்.
முகாம்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் பெரும்தொகையான மக்கள் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்ட போதும் மிகுந்த நெருக்கடிகள் இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக நிலைமைகள் ஓரளவு சீராக்கப்பட்டது. அங்கெல்லாம் மக்கள் தமது சொந்த வீடுகளில் வாழ்கின்ற மனநிலையுடனும் சௌகரியங்களுடனும் வாழவில்லை. ஆனால் புலம்பெயர் நாடுகளில் எழுதப்பட்டு வருகின்ற கற்பனைக் கொடூரங்களை நான் அந்த முகாம்களில் காணவில்லை. தற்போது முகாம்களில் தங்கியுள்ள பலர் தங்கள் சொந்த விருப்பிலேயே அங்குள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அடிக்கும் இராணுவம் நிலைகொண்டிருந்தாலும் அங்கே நிலைமைகள் கண்காணிக்க முழுமையான தமிழர்களைக் கொண்ட சிவில் நிர்வாகம் அகதி முகாம்களுக்குள் இருந்தன. இதற்கும் மேலாக UN, UNHCR, RedCross, WHO என்ற கொடிகளை தாங்கியபடி பல வாகனங்கள் ஒடிக்கொண்டிருந்தன. அவற்றினுள் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டவர்கள். இந்த முகாம்களில் நேரத்திற்கு நேரம் ஏதோ ஒரு சமைத்த உணவு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. அகதி முகாம்கள் உள்ளேயும் பாடசாலையும் வங்கிகளும் வைத்திய பராமரிப்பு நிலையங்களும் இயங்கிக் கொண்டிருந்தன.
ஏன் அவ்வளவு துரம் போவான்? மத்திய உணவிற்கும் இராப் போசனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சகலருக்கும் தேநீரும் பிஸ்கற்றும் கொடுக்க வேண்டும் என ஆனந்தசங்கரி ஜயா ஜனாதிபதியின் அன்றைய ஆலோசகர் பசில் ராஜபச்சவிற்கு ஆலோசனை கூறியதை மறந்து விடலாமோ?
ஏன் இந்த கரிசைனையும் நேசக்கரமும் யாழ் முஸ்லிம்களை நோக்கி செலுத்தப்படுவதில்லை என்பது எனக்கு ஏதோ புரியாத புதிராக உள்ளது. யாழ் முஸ்லீம்கள் என்ன சவுதிஅரேபியாவின் பூர்விகத்தைக் கொண்டவர்களா? அல்லது, யாழ்ப்பாண புதிய சோனகத் தெருவில் ஏதும் எண்ணை கிணறுகளை ஒழித்து வைத்திருக்கிறார்களா யாழ்பாண முஸ்லிம்கள்?
முன்னர் பொம்மைவெளி என்று அழைக்கப்பட்ட புதிய சோனகர் தெரு, அராலி வீதியில் 140 முஸ்லிம் குடும்பங்கள் குடியேறி வசித்து வருகின்றனர். 1990ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட தமது வீடுகளின் அத்திவாரத்தின் மேல் உரைப்பைகளைக் கூரையாக போட்டுவிட்டு மூன்று பரம்பரைகள் ஒரே கூரையின் கீழ் வசித்து வருகின்றார்கள்.
இந்த 140 குடும்பங்களில் 30 ற்கும் அதிகமான பாலர்கள் பாலர் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் இருக்கிறார்கள். இப்பிரதேசத்தில் ஒரு பாலர் பாடசாலையும் இல்லை. இவர்கள் வாழும் பிரதேசம் மிகவும் பள்ளமான சதுப்புநிலம் மழை இல்லாத நேரத்தில்கூட சில இடங்களில் நீர் தேங்கி கிடக்கின்றது. அருகே பிள்ளைகள் விளையாடுகின்றார்கள்.
வீடுகளுக்கு நன்நீர் இல்லை. இரண்டு பொதுக்கிணறும் 4 பொது நீர் குழாயும் உள்ளது. இப்பொது நீர் குழாயில் காலையில் ஒரு மணிநேரம் (7;.30 – 8.30) மாலையில் ஒன்றரை மணி நேரம் (4.00 – 5.30) வரை மட்டுமே நன்நீர் வருகின்றது. மக்கள் இழுபறிப்படாமல் ஒற்றுமையாக வரிசையில் நின்று நன்நீர் பாவனைக்காக எடுத்துச் செல்கின்றார்கள்.
பெண்களுக்கு குளிப்பதிலும் மலசல கூடங்கள் பாவிப்பதும் பெரிய மனச்சங்கட சிக்கல்கள். இவற்றை வெளியில் கூட விபரிக்க முடியாது. மேலும் இப்பகுதியில் பாம்பின் நடமாட்டங்களும் அதிகமாக உள்ளது.
நவுசாத் என்ற 40 வயதுடைய ஒருவர் தச்சு வேலைசெய்து கொண்டிருந்தார். தான் 1984ம் ஆண்டு வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுரியில் கைத்தொழில் பயிற்சி பெற்று தேர்வு அடைந்ததாகவும் பின்னர் குடிபெயர்ந்து புத்தளம் சென்றதாகவும் கூறினார் தனக்கு தச்சு வேலை முழுவதும் தெரியும் எனவும் தகுந்த வேலை இல்லை எனவும் தெரிவித்தார்.
இன்னெரு வயோதிபரை சந்திக்கும் வாய்பு கிடைத்தது. 70 வயதுடைய பதூர்தீன், தனது நான்கு மகள்மார் பேரப்பிள்ளைகள் மனைவியுடன் புத்தளத்திற்குச் சென்று தனது சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ளதாகப் பெருமையாகச் சொன்னார். தனது மூத்தமகள் விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் இருப்பதாகவும் இரண்டாவது மருமகன் விபத்தில் இறந்ததையும் சிரிப்புடன் விபரித்தார். தனது மனம் மரத்துப் போய்விட்டதாகக் கூறினார். தனது தொழிலை நாடோடி என விபரிக்கும் பதூர்தீன், தன் சிறு வயது தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று இருப்பு சேகரித்து விற்பதை தொழிலாகப் புரிவதாகக் கூறினார்.
பதூர்தீனின் மனைவி முத்துமா சுபைர் தமது குடும்பம் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை விபரித்தார். தம்மைவிட உயரமான துப்பாக்கியுடன் வந்த சின்னப் பையன்கள்! ‘அம்மா கரிகாலன் குறூப் காலையில் வந்து அட்டகாசம் செய்யப் போறாங்கள், வீட்டுத் திறப்புக்களை எங்களிட்ட தந்திட்டு வெளிக்கிடுங்கோ. நாங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருப்போம்’ என்று தம்மை விரட்டிய அபலத்தை விபரித்தார். சின்னப் பையன்களுக்கு பயந்து எங்கட வீட்டை, சொந்த நிலத்தை விட்டு வெளிக்கிட்தை நினைத்து தான் இன்னும் வெட்கப்படுவதாக முத்துமா சுபைர் குரல் தடுதடுக்கக் கூறினார்.
தமிழ் மக்களுக்கும் தமக்கும் இடையில் ஒருபோதும் பிரச்சனைகள் இருக்கவில்லை எனவும் அன்றும் இன்றும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தம்முடன் அன்புடனேயே இருப்பதாகவும் பதூர்தீனும் அவரின் மனைவியும் கூறினார்கள். புத்தளத்தில் தாம் சக முஸ்லிம்களால் பட்ட அவமானத்தை என்றும் மறக்க போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். தமது பேச்சு புத்தளத்தில் உள்ள முஸ்லீம்கள் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டு இருப்பதால் தம்மை ‘பனங்கொட்டை’ என்று அழைப்பதாக பதூர்தீன் சொன்னார். ‘நாம் பட்ட வேதனைகள் போதும். நான் பிறந்த மண்ணில் என்னை சாகவிட்டால் போதும்” என பதூர்தீன் சர்வசாதரணமாகவே சொன்னார். “நான் பட்டினியில் இறந்தாலும் பரவாயில்லை. இனி தமது குடும்பம் யாழ்ப்பாணத்தை விட்டு ஒரு அடிகூட நகரமாட்டோம்” என்றார் பதூர்தீன்.
“எம்மை எமது வீடுகளில் இருந்து புலிகளைச் சேர்த்த சிறுவர்கள் கலைக்க, ஜந்து முச்சந்தியில் புலிகளின் இன்னொரு பிரிவு நின்று தாம் எடுத்துச் சென்ற நகைகளைப் பறித்தனர். நாம் புத்தளம் சென்றபோது அங்குள்ள சக முஸ்லீம்கள் மிஞ்சியிருந்த எங்கள் தன்மானத்தையும் பறித்தார்கள்” என்கிறார் பதூர்தீன்.
ஒஸ்மானியா கல்லூரிக்குச் சென்று அதன் அதிபர் திரு M.S.A.M முபாரக் அவர்களையும் சந்தித்தேன். 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் மூடப்பட்ட ஒஸ்மானிய முஸ்லீம் கல்லூரி 2003ம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அண்மைக் காலம்வரை 200 மாணவர்களைக் கொண்ட ஒஸ்மேனியாவில் இன்று 350 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இதில் 150 பிள்ளைகள் கடந்த சில மாதங்களில் புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து குடியேறி உள்ளனர்.
இக்கல்லூரியின் அதிபர் திரு முபாரக் யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர் என்றும் அவரின் மனைவி வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி என்றும் பெருமையாகக் கூறிக்கொண்டனர். அதிபர் முபாரக் தனது குடும்பமும் புத்தளத்துக்கு குடிபெயர்ந்து செனறு பின்னர் மீண்டும் யாழ் மண்ணிற்கு வந்துள்ளதாகக் கூறினார்.

ஒஸ்மேனியா கல்லூரிக்கு Little Aid ஸ்தாபனம் 600 பாடப் புத்தங்களை அன்பளிப்பு செய்தது. இக்கல்லூரிக்கு நூல் நிலையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பையும் Little Aid நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
நன்றி : தேசம்நெற், ரி கொன்ஸ்ரன்ரைன், Little Aid.




No comments:

Post a Comment

المشاركات الشائعة