எஸ்.எம்.எம்.பஷீர்
“தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்..” -நன்னெறி- இலண்டனில் சுமார் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து தான் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் ஆளுமை செலுத்திய தமிழ் நாடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மறக்கப்பட்டுப் போன ஒரு மனிதர் பற்றிய நினைவு என்னை அவர் பற்றி எழுதத் தூண்டியது.
அந்த வகையில் நான் கேள்வியுற்ற ஓரிரு தடவைகள் 1994ல் நேரடியாக சந்திக்க கிடைத்த ஒரு நல்ல மனிதர்தான் ஜமால் மொஹிடீன். இவர் ஒரு பிரபல வர்த்தக குடும்பத்தில் மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். இவர் அன்றைய பர்மாவின், இன்றைய மியன்மாரின் தலைநகரான இரங்கூனில் உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையுடன் சென்று வாழ்ந்து அங்கு நீ மின் பர்மிய ஆட்சி அதிகாரத்தை 1962ல் கைப்பற்றியவுடன் ஏற்படுத்தப்பட்ட அயல்நாட்டு மக்களுக் கெதிரான கலவரங்கள் அங்கு அதிகளவில் வாழ்ந்த பர்மிய இந்திய மக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சுமார் மூன்று இலட்சம் இந்த பர்மிய இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது, மேலும் 1964 லில் அதிகளவில் வணிக உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியர்களின் சொத்துக்கள் யாவும் தனியார் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியர்தான் ஜமால் மொஹிடீன் குடும்பத்தினர். அங்கிருத்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு தமது கோடிக்கணக்கான சொத்துக்கள் யாவற்றையும் இழந்து சென்றாலும் , அங்கிருந்து1966ல் இலண்டனுக்கு வந்து தனது வியாபார அனுபவத்தை கொண்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை செய்து கொண்டு சில ஆண்டுகள் ஆரம்பத்தில் செயற்பட்டபோதும் பின்னர் தனது வியாபாரங்கள் துரதிஷ்டவசமாக நஷ்டமடைய நேரிட்டபோது , 1985 ல் ஒரு சமூகப் பணியாக , அதிக வியாபார ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு , இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட தமிழ் மொழிமூல இஸ்லாமிய மதம் சம்பந்தமான புத்தகங்களை தருவித்தும மேலும் ஆங்கில இஸ்லாமிய நூல்களை பிற நாடுகளிலிருந்து தருவித்தும் மதராஸ் புத்தக நிலையம் எனும் சிறு வியாபார நிலையமொன்றை பின்ஸ்பரி பார்க் (Finsbury Park) எனும் இடத்தில் நிறுவி வியாபாரத்துடன் மக்களுடனான தொடர்பாடல்களையும் அதிகரித்து கொண்டார். இவரின் நூலக வியாபாரத்துக்கு இவரின் ட்ரினிடாட் நண்பரான மொஹம்மத் ஹனிப் என்பவர் காலவறையரையற்ற கடனனாக முப்பத்தி இரண்டாயிரம் பவுண்ஸ்களை ஜமால் மொஹிடீனுக்கு கடனாக வழங்கினார்.
அவரின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஜான் பட்டேன் (John Pattern) என்பவரை இவர் ஆதரித்து பிரச்சாரமும் தன்னை சந்திப்போர்களிடம் செய்ததுடன் ஜான் பட்டேன் தேர்தலில் வெற்றியீட்டியது மட்டுமல்ல கல்வி அமைச்சராகவும் பதவியேற்றபோது ஜமால் மொஹிடீன் பிரித்தானியாவில் முஸ்லிம் பாடசாலைகள் நிறுவப்படவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். உண்மையில் முஸ்லிம் பாடசாலைகளை பிரித்தானியாவில் நிறுவும் சிந்தனை முகிழ்த்தவர்களில் இவரும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.
ப்ரிக்ஸ்டன் க்ரைஸ்ட் தேவாலய மதகுரு; ரேவேரன்ட் வில்லியம் லம்ப்டே , செயின்ட் தாமஸ் வீதி , செயின்ட் தாமஸ் தேவாலய மதகுரு ஸ்டீபன் கோல ;, பின்ஷ்பரி பார்க் எவன்ஜலிகள் தேவாலய மதகுரு ஆகியோர் இவரின் நண்பர்கள் மட்டுமல்ல இவரின் புத்தக கடைக்கு சென்று மாதங்கள் பற்றி அடிக்கடி சென்று ஜமால் மொஹிடீனுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்பவர்களில் சில குறிப்பிடத்தக்கவர்கள் என்பது ஜமால் மொஹிடீனின் பரந்து பட்ட சமூக தொடர்பாடல்களை தொட்டுக்காட்டும் பண்பாக மிளிர்ந்தது. இவர் எப்போதும் அனாதரவானவர்களுக்கு தனது வீட்டில் ஆதரவளித்து உதவிகள் புரிவதையும் பல ஆதரவற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஆலோசனை வழங்கி தனக்கு தெரிந்தவர்களிடம் அவர்களுக்கு வேலைகளுக்கு சிபாரிசு செய்வது, தனது புத்தக நிலையத்தில் வேலை வழங்குவது என்று தன்னால் முடிந்தளவு உதவி புரிவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
தனது வயோதிப காலத்தில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு சென்று அவர் ஓய்வு பெற்று அங்கே பல வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார் என்று தெரியவந்தபோது அவர் என்னிடம் காட்டிய அன்பும் கரிசனையும் என்னை அவரை நினைவு கூரச்செய்தது. இலண்டனிலும் வந்து தமிழ் மூல நூல்களை விற்று தமிழ் மட்டுமே வாசிக்க கூடிய சிலருக்கு தனது சமூகத்தை சமயத்தை கற்றுக்கொள்ள செய்த அவரின் ஞாபகம் நிச்சயம் வரும். இன்று பல வருடங்கள் உருண்டோடி விட்டாலும் இவர் போல யாரென்று வாழ்ந்தவர்களை நினைப்பது என்பது மக்களில் வாழ்பவர்கள் யார் என்பதை நமக்கு நினைவுறுத்தும்.
-lankamuslim-
mr. jamal mohideen native is melapalayam,tirunelveli, tamilnadu.not mettupalayam.pls correct it.if need any information about him pls connact by email. my email id is khajamd41@gmail.com.
ReplyDelete