Search This Blog

Jul 11, 2011

தொழிற்துறை கல்வியின் அவசியமும், முஸ்லிம் சமூகமும்

முஹம்மத் ஜான்ஸின்

இலங்கையில் இன்று 10390 அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன. 5 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட அனைவருக்கும் பாடசாலைக் கல்வி அத்தியவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எழுத்தறிவு 97 விழுக்காடாக உள்ளது. நாடு முழுவதும் 15 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றது. க.பொ.த. உயர்தரப்பரீட்சையெழுதும் மாணவர்களில் 6 முதல் 8 விழுக்காடு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. 
இந்நிலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத 94 விழுக்காடு மாணவர்களின் எதிர்காலமென்ன? க.பொ.த. சாதாரண தரத்தின் பின்னர் கல்வியை கைவிடும் 250000 இற்கு மேற்பட்டவர்களின் நிலையென்ன போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றதல்லவா?அவ்வாறான கேள்விகளுக்கான விடைகள் காணப்பட்டு தீர்வுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சமுதாய தலைவர்களால் அவை முன்னெடுக்கப்படவேண்டும். காலம் தாழ்த்திய திட்டங்கள் தீட்டாமல்  பாடசாலை மட்டத்திலிருந்து திட்டங்கள் வரையப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்பட்டால் நாளைய இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான தொழில்வல்லுனர்களாக மாற்றியமைக்க முடியும்.இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகள் அரசாங்க பாடத்திட்டங்களுக்கு அமைவாக செயற்படுகின்றன. அதேவேளை சர்வதேச பாடத்திட்டங்களை கற்பிக்கும் தனியார்துறை சார்ந்த முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கையும் வருடாவருடம் அதிகரித்துச் செல்லுகின்றது. அரச பாடசாலைகளின் பாடத்திட்டங்கள் காலத்துக்கு காலம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு உலக மாற்றங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றது என்பது மீளாய்வு செய்யப்படவேண்டிய ஒரு விடயமாகவுள்ளது. 

அதேவேளை பெரும்பாலான தனியார்துறை கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியூடான தமது கற்கைநெறிகளை திட்டமிடுகின்றனவே தவிற மாணவர்களின் அறிவு திறமைகளுக்கேற்ப வர்த்தக உலகின் தேவைக்கேற்ப மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதா என்பதும் மீளாய்வுசெய்யப்பட வேண்டியுள்ளது.

உலகம் பூராகவும் தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டு நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபே என்ற உவமைக்கு அமைய சர்வதேச சந்தைகளில் தினமொரு பொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பொருட்களை உருவாக்குபவர்கள் யார் என்று பார்த்தால் தொழில் நுட்பத்துறைகளில் கல்வி கற்று அத்துறைகளில் ஆராய்ச்சிகளைச் செய்து  தமது காலத்தை அத்துறைகளிலேயே செலவழிப்பவர்கள் தான் அவ்வாறான நவீன கருவிகளை உருவாக்குகின்றனர். கணக்காளர்களாளோ என்ஜினியர்களாளோ வைத்தியர்களாளோ புதிய கண்டபிடிப்புக்களைச் செய்யமுடிவதில்லை.
இலங்கையைப் பொருத்த மட்டில் பாடசாலைப் பாடத்திட்டங்கள் எல்லாமே ஒரு வைத்தியரையோ கணக்காளரையோ என்ஜினியரையோ கணனி இயக்குநரையோ அல்லது ஒரு ஆசிரியரையோ உருவாக்கும் நோக்கம் கொண்டது. க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின் பின்னர்   வைத்தியரையோ கணக்காளரையோ என்ஜினியரையோ சட்டத்தரணியையோ உருவாக்குவதற்கான கற்கை நெறிகளையே உயர்தரம் கொண்டுள்ளது. இவ்வாறான பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வு செய்யப்படவேண்டும்.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு வருடாந்தம் தோற்றும் 525000இக்கு மேற்பட்ட மாணவர்களில் 51விழுக்காடு மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாமல் போகின்றனர். கிட்டத்தட்ட 255000 மாணவர்கள் தான் சித்தியடைந்து உயர்தரக் கல்வி கற்பதற்கு தகுதி பெறுகின்றனர்.அவர்களில் பலர் குடும்ப நிலைமைகள் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில்லை என்பது கவலையான விடயம். ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவர்கள் தோற்றும் உயர்தரப் பரீட்சையில் 39 விழுக்காடு மாணவர்களே சித்தியடைகின்றனர். அவர்களில் 10000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 10000 பேர் பல்கலைக்கழகம் செல்ல இன்னொரு 10000 பேர் தனியார்துறை பாடநெறிகளை கற்கின்றனர். 

தனியார்துறை கல்விகளில் மாணவர்கள் கம்பியுட்டர் கணக்காளர் சந்தைப்படுத்துனர் மற்றும் பல  டிப்ளோமா  கற்கைநெறிகளை கற்கின்றனர். தனியார்துறை சார்ந்த கல்விகளை கற்கும் வாய்ப்பு அதிகமாக நகர்ப்புறங்களை சார்ந்த மாணவர்களுக்கே கிடைக்கின்றது. பணமுள்ளவர்கள் மட்டுமெ தனியார்துறைக் கல்விகளை பெறக்கூடிய நிலமையுள்ளது. தூரப்பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தனியார்துறை கல்வி வாய்ப்புகள் அறிதாகவே கிடைக்கின்றன என்பது நோக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு 5 இலட்சம் பேருக்கு பல்கலைக்கழக உயர்கல்வி வாய்ப்போ அல்லது தனியார்துறை கல்வி வாய்ப்போ கிடைக்காமல்;   போகின்றது. தூரப்பிரதேசங்களிலும்  பின்தங்கிய மாவட்டங்களிலும் ஏறக்குறைய 90 விழுக்காடு மாணவர்கள் கல்வி சம்பந்தமற்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ற உதிரித் தொழில்களைச் செய்கின்றனர். விவசாயம் கூலி வேலை வியாபாரம் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர் போன்ற தொழில்களை அதிகமானவாகள் செய்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுச்செல்வோரும் மேற்படி உதிரித் தொழில்களையே செய்கின்றனர். தொழில்நுட்பத் தொழில்களைச் செய்வோர் உள்நாட்டில் அறிதாகவுள்ளனர். அதே போன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அத்துறையில் பெற்றுச் செல்வோர் அறிதாகவே உள்ளனர். அதிலும் முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால் மேற்படி உதிரித் தொழில்களை செய்வோரின் எண்ணிக்கை ஏனைய சமூகத்தவரை விட அதிகமாகவுள்ளது. தொழில்நுட்ப கல்விகளை கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.

இலங்கையில் தொழில்நுட்ப கல்விகளாக கம்பியூட்டர் (சொப்ட்வெயார் ஹார்ட்வெயார் நெட்வேர்க்)   தட்டச்சு மின்இனைப்பு வேலை (எலக்ரீஸியன்) நீர் இனைப்பு வேலை (பிளம்பர்) போன்ற பல்வேறு கற்கைநெறிகளுள்ளன.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது.  ஆனால் இத்துறைகளில் கல்விகற்றோர் மிக அரிதாகவேயுள்ளனர். வட மாகாணம்  கிழக்கு மாகாணம் மத்திய மாகாணம் தென்மாகாணம் ஊவா மாகாணம் சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்களில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் பின்னர் அதிகமான மாணவர்கள் கல்வியை கைவிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எதிர்நோக்கப்படும் சில சவால்கள் மற்றும் புதிதாக உருவாகும் பொருளாதார சவால்கள் போன்றவற்றால் மாற்றுக்கல்விகள் பற்றி அதிகமானோர் சிந்திப்பது கிடையாது. 

க.பொ.த கல்வியின் பின்னர் 90 விழுக்காடு முஸ்லிம் இளைஞர்கள் தொழில்துறைகளையே நாடிச்செல்கின்றனர். இவர்களுக்கு தொழில்நுட்பத்துறைகளில் வளர்த்தெடுக்க வேண்டுமாயின் க.பொ.த. வுக்கு முற்பட்ட இரண்டாம்நிலைக் கல்வியின் போது தொழில் நுட்பக்கற்கை நெறிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மேற்கத்தைய நாடுகளில்  இரண்டாம்நிலைக் கல்வியின் போது மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்கள் பிரிக்கப்பட்டு பெற்றோரின் அனுமதியுடன் குறிப்பிட்;ட தொழில் நுட்பக்கற்கை நெறிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் க.பொ.த. சாதாரணதரக் கல்விகற்கும் காலத்தில் தமது எதிர்கால தொழில் சம்பந்தமான கல்வித்தகைமைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். திறமையுள்ளவர்கள் வைத்தியர் கணக்காளர் என்ஜினியர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் கல்வி கற்கின்றனர். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் தொழில்நுட்ப கல்விகளைக் கற்று அந்தந்த தொழில்களுக்கு கல்வி ரீதியாகவும் அனுபவரீதியாகவும் தகைமை பெறுகின்றனர்.

இன்று இலங்கை முஸ்லிம்களில் சிலரிடத்தில் கல்வி அபிவிருத்தி அல்லது சமூக அபிவிருத்தி என்பது பாடசாலைகளுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொளவதனூடாக பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்ப சிந்தனையுள்ளது. கட்டிடங்களை கட்டி கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது. கட்டிடங்கள் தேவைக்கேற்பவே அமைக்கப்பட வேண்டும். ஏனைய நிதி கல்வியை மேம்படுத்த அதாவது தொழில்நுட்ப கல்வித்துறைகளை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யப்படவேண்டும்.

1990இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது புத்தளம் மாவட்டத்திலுள்ள 22இக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் மாலைநேர பாடசாலை இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக நடாத்தப்பட்டது. குறுகிய நேரக்கல்வியும் நேரந்தவறிய கல்வியும் மாணவர்களின் கல்வியை மலுங்கடித்துவிடும் எனப்பலர் கருதினர். இதனை அப்போதைய புனர்வாழ்வு அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கு நேராக மகஜர் மூலமாகவும்  அகதி இதழினூடாகவும்  நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். இது சம்பந்தமாக நானும் முன்னாள் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.மன்சூர் அவர்களும் அமைச்சர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களைச் சந்தித்தோம். அவருடைய செயலாளரை அறிக்கையை வாசிக்கும்படி அமைச்சர் வேண்டவே அவர் எந்த எந்த பாடசாலைகளுக்கு கட்டிடம் கட்டவேண்டும் என்று பட்டியலிட்டு 22 பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டுமென்றும் அதற்கான பட்ஜட்டையும் சொன்னார். எங்கள் முன்னிலையிலேயே கட்டிடப்பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பணித்தார். அதனால் புத்தளம் மாவட்டத்தில் 22 முஸ்லிம் பாடசாலைகளுக்கு மேலதிக கட்டிடங்கள் கிடைத்தன. அத்துடன் பின்னேரப் பாடசாலைக் கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஆனால் இந்த கட்டிட அமைப்பு பணி மாலைநேர பாடசாலைகளை காலைநேரப்பாடசாலையாக மாற்றியதை மட்டுமே செய்தது. மாணவர்களின் கல்வியில் அபிவிருத்தி நினைத்தது போல் நடக்கவில்லை.
அண்மையில் எனது நன்பனும் மாணவனுமாகிய அ.இப்ரீன் அவர்களை ஒரு திருமண விழாவில் சந்தித்த போது அவர்கூட யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் தேவையில்லை. இருக்கின்ற 600 மாணவர்களுக்கும் ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் போதுமானது. அபிவிருத்தி என்பது கட்டிடங்களை கட்டுவதிலல்ல மாற்றமாக கல்வியில் வளர்ச்சி வேண்டும் போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்னார். அவர் கூறியது உண்மை தான். கட்டிடங்கள் அதிகரிப்பதால் பாடசாலையில் மாணவர்கள் ஒரு போதும் கூடுவது கிடையாது. ஆனால் ஒரு பாடசாலை கல்வித்துறையில் சிறந்து விளங்கி பரீட்சைகளில் அப்பாடசாலை நல்ல பெறுபேறுகளைப் பெறும் போது இயற்கையாகவே அப்பாடசாலையை தேடி மாணவர்கள் வருவார்கள்.

ஒஸ்மானியாவுக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகள் எனது ஆய்வுக்கட்டுரைகளை சமுதாய நலன் என்ற கருத்துடன் நோக்கி நல்ல திட்டங்களை முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கி எமது சமுதாயத்தை தொழில்துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்பது என அவாவாகும்.1982 ஆம் ஆண்டு இலங்கை கல்வித்திணைக்களம் பாடசாலைகள் தோறும் தொழில்துறை சார்ந்த கல்வித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அப்போது ஒஸ்மானியா பாடசாலை அதிபராக இருந்த எம்.ஏ.ஆர்.ஏ. றஹீம் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்த எண்ணி மரவேலை (கார்பன்றி வேர்க்ஸ்) தட்டச்சு (டைப்பிங்) மற்றும் விவசாயம் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தினார். அதற்கான ஆசிரியர்கனும் அவருடைய காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான வசதிகளையும் பிரத்தியேக வகுப்பறைகளையும் ஒஸ்மானியா 1990 வரை கொண்டிருந்தது. 
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்பதற்கேற்ப சிலர் எனது கருத்தை எதிர்க்கலாம். அவர்கள் பாடசாலையில் கல்விகற்பவர்களில் 10 விழுக்காடு மாணவர்களையே கருத்தில் கொள்கின்றனர். உயர்கல்வி வாய்ப்பும் தனியார்துறை கல்வி வாய்ப்புமின்றி கைவிடப்படப்போகும் 90 விழுக்காடு மாணவர்களை பற்றி யோசிப்பதில்லை. இஸ்லாம் தொழில்துறை சார்ந்த கல்வியை கற்கவேண்டாமென கூறவில்லை. எந்த ஆகுமான துறையாக இருந்தாலும் அத்துறையில் சீரிய கல்வியை பயிலுமாறே கூறுகின்றது.

எனவே இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலெல்லாம் கம்பியூட்டர் கல்விகள் மரவேலை மின்சார இனைப்பு வேலைகள் குழாயினைப்பு வேலைகள் வெல்டிங் வேலைகள் போன்ற கல்விகள் அறிமுகப்படுத்த வேண்டும். ஆண்டு 6இக்குப் பிறகு விருப்பமான துறைகளில் மாணவர்களுக்கு கல்வியும் அனுபவமும் வழங்கப்பட வேண்டும். இதற்காக தினமும் இரண்டுபாடவேளைகள் (நேரம்) மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். நேரம் போதாதவிடத்து பிற்பகலில் தொழில்துறை கல்வியை போதிக்க வசதியேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். 

மேலும் முஸ்லிம் பாடசாலைகளில் இன்று மறக்கப்பட்ட விடயமாக அறபுக்கல்வியுள்ளது. இதன் அவசியம் இன்று மீண்டும் உணரப்பட்டு வருகின்றது.  அரபுலகில் வேலைவாய்ப்பு செல்லும் முஸ்லிம்கள் அறபியை பேசவும் வாசிக்கவும் எழுதவும் கற்றிருந்தால் அவர்கள் பன்மடங்கு சம்பளத்தை மத்திய கிழக்கு நாடுகளில்  பெற முடியும். இதைக்கூட சிலர் உள்நாட்டில் கற்ற கல்வியை வெளிநாட்டில் விற்பதா என விதண்டாவாதம் செய்வர். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூட சிரியாவுடன் வியாபாரத் தொடர்புகளை கொண்டிருந்தார்கள். இஸ்லாம் உழைப்பில் ஹராம் ஹலால் பார்க்கிறதே தவிற அதை எந்த நாட்டில் உழைத்தாய் என்பதை பார்ப்பதில்லை என்பதை அவர்கள் அறியவேண்டும்.வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுத பின்னர் உலகில் உங்களுக்காக அளிக்கப்பட்டதை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம் நமக்கு கூறுகின்றது. இதை இன்னொரு விதத்தில் திறை கடலோடியும் திரவியம் தேடு என்பதாக கூறலாம்.

அறிவு என்பது காலத்துக்கும் தேவைக்கும் பொருத்தமாக பிரயோகிக்கப்படும் போது தான் அது சிறந்ததாக விளங்குகின்றது. கம்பியூட்டர் கல்வி ஆரம்பிக்க போதுமான பணத்தை யாராவது மைதானத்திலுள்ள  புல்லை பாதுகாக்க சுவர் கட்டச் செலவழித்தால் அதை அறிவு என்று சொல்ல முடியாது. சமுதாயத் திட்டங்கள் எப்போதும் நீண்டகால தேவைகள் அபிவிருத்தி சனத்தொகைப் பெருக்கம் என்பவற்றை மையமாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும். சமுதாயத் தேவைகள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்;படுத்தப்படவேண்டும். அவசரமும் அத்தியாவசியமும் நிறைந்தது எதுவோ அத்தேவைக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் 1982இல்  அறிமுகப்படுத்திய தொழில்துறை சார்ந்த கல்வித் திட்டங்களை இன்று பல முஸ்லிம் பாடசாலைகள் கைவிட்டுள்ளன. சில பாடசாலைகளில் விவசாயம் மட்டும் கற்பிக்கப்படுகிறது.

நவீன உலகம் தொழில்நுட்பத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. கணணித் துறைகளில் கல்வி கற்றவர்கள் எங்கும் தேவைப்படுகிறார்கள். செல்லிடத் தொலைபேசி திருத்தங்கள் ஒன்றினைத்தல் போன்ற துறைகள் எதிர் காலத்தில் மேலும் பெருகும் வாய்ப்புண்டு. எலக்ரீஸியன்களும் பிளம்பர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இத்துறைகளில் கல்வி பாடசாலை மட்டத்திலிருந்து போதிக்கப்பட்டால் க.பொ.த. படித்த பின்னர் மாணவர்கள் இளைஞர்களாக மாறி குடும்பச் சுமைகளை சுமக்கும் காலம் வரும்போது அவர்கள் எந்த தொழிலைச் செய்வதென்ற தீர்மானத்தை பாடசாலைக் காலத்திலேயே எடுக்கக்கூடியதாக இருக்கும். இஸ்லாமும் மனிதனது மரணம் எவ்வேளையிலும் ஏற்படலாம் என்று கூறும் அதேவேளை எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்து செயற்படுவதை வலியுறுத்துகின்றது என்பதை நாம் நோக்க வேண்டும்.

எனவே இலங்கையில் எந்த முஸ்லிம் பாடசாலைகளில் தொழில் துறை சார்ந்த கல்விகள் இல்லையோ அவர்கள் அத்துறை சார்ந்த கல்விகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றப் பாடசாலைகள் நவீன யுகத்துக்கு ஏற்ப புதிய தொழில்துறை கல்விகளையும் அறிமுகப்படுத்தி மாணவர்களின் எதிர்கால தொழிலுக்கான அடித்தளத்தை பாடசாலைக் காலத்திலேயே அமைத்துக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة