பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு திட்டம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் தொடர்பாக அரசமைப்பிலோ, பல்கலைக்கழக சட்டத்திலோ, சர்வதேச மனித உரிமை பட்டயத்திலோ எதுவும் இல்லை. இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது . இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது .
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாறான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும். மாறாகத் தன் விருப்பின் பேரில் அரசு நினைத்ததை நடத்தி பல்கலை மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்க இடமளிக்க முடியாது. சட்டங்களுக்கு முரணாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை இதன் மூலம் விளங்குகிறது.இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று இந்தப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இன மாணவர்கள் உளரீதியாகப் பாதிப்படைவார்கள். அத்துடன், இராணுவப் பயிற்சி தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கும், மக்களுக்கும் எவ்வித அறிவித்தலையும் அரசு விடுக்கவில்லை.
பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதன் ஊடாக அவர்கள் மத்தியில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என்று ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒரு வேடிக்கையான கதையாகும். ஏனென்றால் இன்று நாட்டில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒழுக்கம் உள்ளதா? அவர்களுக்கு ஒழுக்கம் என்ற ஒன்று இருக்குமானால் நிச்சயமாக நாட்டு மக்களும், மாணவர்களும் ஒழுக்கமாக செயற்படுவார்கள். மாறாக, ஆட்சியாளர்களுக்கு ஒழுக்கம் இல்லாமல் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைத் திணிப்பது எப்படி?
இலங்கையில் அரச தீவிர வாதம் நடைமுறையில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறு இருக்க, பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தால் சர்வதேசம் கூறும் விடயம் உண்மையாகிவிடும்.இப்படி அவர் கூறியுள்ளார் .
No comments:
Post a Comment