அதிகமான மக்கள் செறிந்து வாழும் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு வெளியே உள்ள பெரும் வர்த்தகர்களே என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார் .
அரசாங்கத்தினால் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதனால் கற்பிட்டி பகுதியில் ஹோட்டல்களை அமைப்பதற்கு பல வர்த்தகர்கள் முண்டியடிக்கிறார்கள். அந்தந்தப்பகுதிகளிலுள்ள காணிகளை எவ்வளவு விலை கொடுத்தாவது பெறுவதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள இனங்காணப்பட்ட அரச காணிகள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள் வர்த்தகர்களுக்கு விற்கப்படுகிறது.
கற்பிட்டியில் மாத்திரமின்றி புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல குடும்பங்கள் வீடொன்றை கட்டுவதற்குக் கூட காணியொன்று இல்லாமல் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே இவ்வாறு இனங்காணப்பட்ட அரச காணிகளை சுற்றுலா வலயம் என்ற போர்வையில் வெளியேயுள்ளவர்களுக்கு கொடுப்பதனை தடுத்து நிறுத்தி அதனை ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
அது மட்டுமன்றி “ஸ்பெஷல் பீப்பிள் ஒப் கற்பிட்டிய’ என்ற விசேட குழுவொன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக் குழுவிலுள்ள அனைவரும் புத்தளத்திற்கு வெளியே இருக்கின்றவர்களே. ஒருவரேனும் புத்தளத்தையோ அல்லது கற்பிட்டியையோ சேர்ந்தவர்கள் அல்ல.
எனவே இவ்வாறு புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள் எமது வளங்களைச் சுரண்டிச் செல்வதற்கு இடமளிக்காது எமது வளங்களை நாமே ஆள வேண்டும் என்ற சிந்தனையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளையும் பொது மக்களின் வளங்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் சகல பேதங்களையும் மறந்து முன்வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment