Search This Blog

May 19, 2011

ஐந்து நேரம் தொழலாம்; ஜும்ஆவுக்குச் செல்ல முடியாது – மேஜர் ஜெனரல் பீரிஸ் (EXCLUSIVE)


வியாழக்கிழமை, 19 மே 2011 

இவ் வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டாய வதிவிட தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று அது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


இப் பயிற்சி நெறியில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தத்தமது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு எந்தவித தடைகளும் இல்லை. ஆனால் அதற்காக அவர்களை வெளியில் அனுப்புவதற்கு எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை – அமைச்சர் எஸ்.பி
இதேவேளை இப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பல முஸ்லிம் மாணவர்களும் பெற்றோரும் இப் பயிற்சி நெறி தொடர்பில் தம்மிடம் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையுமே வெளிப்படுத்தியுள்ளதாகவும் எவரும் இதனை எதிர்மறையாக நோக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற போதிலும் திட்டமிட்ட படி இப் பயிற்சி நெறி நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இராணுவ முகாம்களில் நடத்தப்படுகிறது என்பதற்காக இது ஒருபோதும் இராணுவப் பயிற்சியாக அமையமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் காலையில் 5 மணிக்கு தூக்கத்தை விட்டு எழும்ப வேண்டும் எனவும் இரவு 10.45 மணிக்கு தூக்கத்திற்குச் செல்ல வேண்டும் எனவும் அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில் அவர்களுக்கு நேர முகாமைத்துவம், ஒழுக்க விழுமியங்கள், மற்றவர்களை அணுகும் முறை, தங்குமிடத்தை ஒழுங்குபடுத்துதல், உடங்பயிந்சி, ஆடை அணியும் முறை, தலைமைத்துவக் கட்டுப்பாடு உள்ளிட்ட வாழ்க்கைக்கு அத்தியவசியமான விடயங்கள் கற்பிக்கப்படவிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துடன் இப் பயிற்சி நெறிக்காக கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அப் பொருட்கள் அனைத்தையும் ஒருவர் புதிதாக கொள்வனவு செய்ய வேண்டுமானால் சுமார் 15000 ரூபா தேவைப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாவனைப் பொருட்களையே கொண்டு வருமாறு கூறியுள்ளதாகவும் புதிதாக பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

சட்டத்துக்கு முரணானது – ஐ.தே.க

இதற்கிடையில் இன்றைய தினம் கொழும்பில் இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது.
இங்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. தேசிய இளைஞர் முன்னணியின் கல்விக் குழுத் தலைவர் தம்மிக விக்ரம ஆராச்சி, இக் கட்டாய பயிற்சி நெறியானது பல்கலைக்கழக சட்டவிதிமுறைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார்.

இது ஒரு இராணுவப் பயிற்சி அல்ல எனும் அமைச்சரின் கருத்தை மறுத்துரைத்த அவர், அப்படியானால் ஏன் ரீ சேட்களையும் அiரைக் காற்சட்டைகளையும் கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

வழக்குத் தாக்கல் செய்வோம்- அ.ப.மா.ஒன்றியம்

இதேவேளை இப் பயிற்சி நெறிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர் கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் கடிதம் சிங்கள மொழியில் உள்ளதால் தமிழ் மொழி மூல மாணவர்கள் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة