Search This Blog

Apr 11, 2011

கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்



-M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)-
நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.
நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது.
இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக உள்ளது. மனிதன் வாழ்கின்ற சூழலில் அவன் எதிர்நோக்கின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தேவையான சட்டதிட்டங்களை அதில் காணலாம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதனை எப்போதும் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இஸ்லாம், எல்லா சட்டதிட்டங்களுக்கும் அடிப்படையாக காரணங்களை வகுத்துள்ளது. அத்தகைய காரணங்கள் எவ்விடயத்தை கையாளும் போதும் கவனிக்கப்பட வேண்டும். அவை நபியவர்கள் காலத்தில் இல்லாத கழியுகத்தில் காணப்படக்கூடிய எச்சாதனத்துடனாவது சம்பந்தப்பட்டிருந்தால், குறித்த அச்சாதனத்தின் உபயோகத்தின் போது அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இன்று கையடக்கத் தொலைபேசி எனும் சாதனம் சமுகத்தில் பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. எத்தனை பேர் அவற்றை உபயோகித்தாலும் அவை உரிய முறையில் உபயோகிக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. நிச்சயமாக இல்லை, கையடக்கத்தொலைபேசிகளில் உண்டான பல மோசமான விளைவுகள் இதற்குச் சாட்சியாக உள்ளன. இறை நிராகரிப்பாளர்களை ஒரு புறம் விடுங்கள், நாங்கள் மறுமைக்காக வாழ்கின்றவர்கள். நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வது எமது கடமை. இதனை கருத்தில் கொண்டு நான் கூற இருக்கின்ற சில ஆலோசளைகளை சற்று கூர்ந்து கவனியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்குத் தேவையான உபதேசங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் தங்கள் நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய நூட்களில் அறபு மொழியைக் கற்றறிந்தவர்களுக்கு வாசிக்கத்தக்க சிறந்த நூலாக, பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்களினால் எழுதப்பட்ட அதபுல் ஹாதிப் என்ற நூலை சிபாரிசு செய்கிறேன்.
கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்கான சில உபதேசங்கள்
  • கையடக்கத்தொலைபேசிகளில் நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக நாம் அது விடயத்தில் அல்லாஹ்விடத்தில் பொறுப்புதாரிகளாக உள்ளோம். நாம் எமது பொறுப்புக்களைப்பற்றி விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை என்றும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் பேசக்கூடிய எவ்வகையான வார்த்தையாக இருந்தாலும் அவ்வார்த்தைகளை எழுதுவதற்குத் தயாராக உள்ள வானவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதனை மனத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும், நாம் உலகில் வாழும் காலங்களில் இத்தகைய சாதனங்களின் மூலம் ஒருவருடைய சொத்து, உயிர், மானம் போன்றவை பறிபோவதற்குக் காரணமாக இருப்போம் என்றால், நிச்சயமாக மறுமை நாளில் எமக்கு ஈடேற்றம் கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
  • அது மாத்திரமின்றி, இத்தகைய சாதனங்களைத் தவறான வழிகளில் உபயோகிப்பது, இஸ்லாத்தின் அறநெறிகளைப் பாழ்படுத்திய குற்றத்திக்கு உள்ளாக்கிவிடும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • கையடக்கத்தொலைபேசிகள் மூலம் யாருக்கும் இடையூறு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடாது. யாருடனாவது தொடர்பினை ஏற்படுத்த நாடினால் முதலில் அவருடன் கதைப்பதற்கு உகந்த நேரத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அதன் போது, குறித்த அந்நபரின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றும் வேளை, மற்றும் வழமையாகப் புரியும் பணிகள் போன்றன கவனிக்கப்பட வேண்டும்.
  • மேலும், நீங்கள் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர் அதற்கு பதிலளிக்காது போனால் அல்லது வழமைக்கு மாற்றமாக தனது பேச்சை சுருக்கிக் கொண்டால், உடனே அவர் மீது தப்பெண்ணம் கொண்டுவிடாது அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்கான நியாயமான காரணங்களைத்தேட வேண்டும்.
  • இன்னும், யாருடன் பேசுவதாக இருந்தாலும் ஒழுக்கமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பிறர் மனம் நோகும் விதத்தில் நடந்து கோள்ளக்கூடாது.
  • யாருடனாவது பேச முற்படும் போது அது அவருடைய தொலைபேசி இலக்கம்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வாறான வழிமுறை பேணப்படாததின் காரணமாக தகாத உறவுகள் உண்டாகி குடும்பங்களுக்கு மத்தியில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
  • நீங்கள் யாருடனாவது கதைக்க முற்படும் போது அல்லது அழைப்புக்கு பதிலளிக்க முற்படும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் ஸலாத்தைக் கொண்டு எம் பேச்சிக்களை ஆரம்பிக்க வேண்டும்.
  • உங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தியர் சலிப்படையும் அளவுக்கு பேச்சை நீட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு நடந்து கொள்வது ஒருவிதத்தில் உங்களுடன் அழைப்பில் இருப்பவருக்கு இடையூறாகவும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு அது வீண்விரயமாகவும் அமையும். அப்படி அவசியமான ஒரு விடயத்தை நேரம் எடுத்து கதைக்கவேண்டி ஏற்பட்டால் அழைப்பில் இருப்பவரிடம் அனுமதி எடுத்த பின்பே பேச்சைத் தொடர வேண்டும்.
  • ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் யாருடன் கதைக்கின்றீர்களோ அவரின் அனுமதியின்றி அவரது பேச்சை பதிவு செய்யவோ அல்லது அதனை பிறர் முன்னிலையில் சத்தமாகக் கேட்க வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
  • பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஒருவரின் பேச்சை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது அமானித மோசடியாகும். இத்தகைய செயல்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவது அவனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு தொலைபேசியில் பேசப்படும் விடயம் மார்க்கத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ அல்லது உலகத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ இருக்கலாம்.’ (அதபுல் ஹாதிப் : 28)
  • மற்றோர் இடத்தில்; கூறும் போது, ‘ஒருவரின் அனுமதியின்றி அவரின் பேச்சைப் பதிவு செய்வது ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமுமாகும். மேலும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பேச்சை பிறருக்கு அனுப்புவது மென்மேலும் மோசடியை அதிகரிக்கச் செய்யும். அத்தோடு அதனில் கூட்டுதல் குறைத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட பேச்சின் ஒழுங்கில் மாற்றம் செய்வது மிகப் பாரதூரமான குற்றமாகும்.’ (அதபுல் ஹாதிப்: 29,30)
  • பிறருடைய தொலைபேசியை அவரது அனுமதியின்றி எடுப்பதையும், அதனுள் உட்சென்று அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  • நவீன கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படுகின்ற விஷேட அம்சங்களான கேமரா, வீடியோ, புலூதூத், ரெகோடர் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் பாவிக்காதிருத்தல். இத்தகைய சாதனங்கள் சரிவரப் பயன்படுத்தப்படாததின் காரணத்தினால் இன்று வீடுகள், பாடசாலைகள், கடைத்தெருக்கள், பொது இடங்கள் அனைத்தும் சீர்கெட்டு இருக்கின்றன.
  • பள்ளிவாசலினுள் பிரவேசிக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து விட்டு அல்லது சைலன்டில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். மாற்றமாக அதுவிடயத்தில் கரிசனைகாட்டாமல் தொழுகையில் நுழைந்ததின் பிற்பாடு தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது தக்வாவைப்பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை. மேலும், இத்தகைய செயல்கள் தொழுகையாளிகளின் சிந்தனைகளைத் திசைதிருப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.
  • ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தும் போது அழைப்பில் இருப்பவர் உங்களை யார் என்று இனங்காணத்தவறும் பட்சத்தில் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தாது தன்னைப்பற்றிய விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை ஜாபிர் (ரழி) அவர்கள் நபியவர்களின் வீடு நோக்கி வந்து அவரை அழைத்த போது, நபியவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டு யார்? என வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள், நான் என் பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள் எனது பதிலை வெறுத்தவர்களாக ‘நான், நான்’ என்று கூறிக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
  • முடியுமான அளவு இசையுடன் தொடர்புடைய சமிக்ஞைகளை ரிங்டொன்னின் (Ringtone) போது உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆலோசனை சபைகள், மார்க்க உபன்யாசம் நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய கூட்டங்களின் போது கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்காதிருத்தல்.
  • கண்ட கண்ட இடங்களில் தொலைபேசியை வைக்காதிருத்தல்.
  • தொலைபேசிகளின் மூலம் குறுந்தகவல்களைப் பரிமாறும் போது ஒழுக்கமான நடைமுறைகளைக் கையாளல்.
  • குறுந்தகவல்களின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை உறுதி செய்து கொள்ளல்.
  • உங்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய மோசமான குறுந்தவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்துவிட வேண்டும். மேலும், அப்படியான தகவல்களை உங்களுக்குத் தந்தவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.
  • தொலைபேசியில் நேரத்தை வீணடிக்காதிருத்தல். அவற்றில் பதிவு செய்யப்பட்ட விடயங்களைப் பார்வையிடுவதினாலும் அதில் காணப்படக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுவதினாலும் பிரயோசனமின்றி நேரம் கழிகின்றது. இது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.
  • தாவுத் அத்தாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘உன்னுடைய இரட்சகனின் சிந்தனையை விட்டும் உன்னைத் திசைதிருப்பக்கூடிய அனைத்தும் கெட்ட விளைவை ஏற்படுத்தக் கூடியன’ என்கிறார்.
  • நாம் உபயோகிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டு பெருமை பாராட்டாதிருத்தல். மேலும், பிறரது தொலைபேசிகளைக் கொண்டு மக்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்தாதிருத்தல்.
  • இசை, பாடல், திரைப்படம், புகைப்படங்கள் போன்றவற்றை கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்வதும், அவற்றை நண்பர்களுக்கு மத்தியில் பரிமாறுவதும் இஸ்லாம் தடை செய்யும் அம்சங்களாகும்.
  • ஒவ்வொரு பொறுப்புதாரரும் தனக்குக் கீழால் உள்ளவர்கள் எப்படியான வழிகளில் தம் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். தன் பொறுப்பில் இருப்பவர்களில் எவர்களுக்கு கையடக்கத்தெலைபேசிகளை உபயோகிப்பதற்கு தகுதியிருக்கின்றது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
  • இப்படி கையடக்கத்தொலைபேசியின் உபயோகத்துடன் தொடர்புடைய பல ஒழுக்க விழுமியங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து நாம் உபயோகிக்கின்ற கையடக்கத் தொலைபேசிகளை அல்லாஹ் விரும்பக்கூடிய வழிகளில் பயன்படுத்தி, அவற்றில் அமானித்தைப் பேணக்கூடியர்களாக நானும் நீங்களும் மாறுவோமாக!
நன்றி – இஸ்லாம் கல்வி

No comments:

Post a Comment

المشاركات الشائعة