“திருக்குர்ஆனின் போதனைகளையும் பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் மறந்து மனம்போன போக்கில் வாழ்வதன் காரணமாக இன்று முஸ்லிம் சமூகம் சீரழிந்து வருவதுடன், அரபு நாடுகளின் இன்றைய நிலைக்கும் இதுவே காரணம்’ என வடமேல் மாகாண முஸ்லிம் பிரிவு கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.எல்.அன்வர்தீன் தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவையைச் சேர்ந்த தௌம்புகல்லை முஸ்லிம் வித்தியாலயத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அஹதிய்யாப் பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு வித்தியாலய அதிபர் ஏ.எம்.சனூன் தலைமையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் விரிவாக
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வெளி உலகுக்கு நாம் பக்தி வான்களாகக் காட்டிக் கொண்டாலும் எமது உள்ளம் மாசுபட்டுள்ளது.
அசுத்தமடைந்த உள்ளத்திலுள்ள உயிர் ஒருபோதும் சுவர்க்கம் செல்ல முடியாது. எமது வீடுகளில் இன்று குர்ஆன் ஓதப்படுவதில்லை. மாறாக தம் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்வையிடும் பெற்றோர்களைத் தான் நாம் காண்கிறோம்.
சிறு வயதிலிருந்து திருந்தாவிட்டால் சிறு வயதிலிருந்தே சன்மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் எமது வாழ்வு வெற்றியளிக்காது. மாணவர்களுக்கு இளம் வயதிலிருந்தே சன்மார்க்கத்தைச் சரியாகக் கற்றுக்கொடுத்து அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச் செய்வதில் அஹதிய்யாப் பாடசாலைகள் பெரும் சேவையாற்றி வருகின்றன. எனவே, எமது பிள்ளைகளை அஹதிய்யாப் பாடசாலைகளுக்கு அனுப்புவது ஒவ்வொரு பெற்றோருடைய கட்டாயக் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் உப தலைவரும் குருநாகல் மாவட்ட அஹதிய்யாப் பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவருமான கலாநிதி பி.எம்.பாரூக் உட்பட அதிதிகள் பலரும் இதன்போது உரையாற்றினர்.
No comments:
Post a Comment