Search This Blog

Apr 6, 2011

வளைகுடா நாடுகள்-ஈரான் இடையேயான மோதல் முற்றுகிறது


AL HIDHAYA MEDIA WORLD: அபுதாபி: வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையேயான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.

அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் திரைமறைவில் வளைகுடா நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவும்,தங்களது விருப்பங்களை நிலைநாட்டவும் ஈரான் மேற்கொண்டுவரும் முயற்சிகள்தாம் இம்மோதல் முற்றுவதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு உதவி புரிந்த ஈரான், குவைத்தில் உளவு வேலையில் ஈடுபட்டது. மேலும், பஹ்ரைனுக்கு உதவியாக படைகளை அனுப்பிய சவூதி அரேபியாவை கடுமையான முறையில் விமர்சனம் செய்து அறிக்கையை வெளியிட்டது.இதனால் ஜி.சி.சி நாடுகள் மற்றும் ஈரானுக்குமிடையேயான உறவு மேலும் சீர்குலைந்துள்ளது.
அரபு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சூழலின் பின்னணியில் ஜி.சி.சி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரியாதில் அவசரக் கூட்டத்தை நடத்தினர்.

வளைகுடா நாடுகளில் சமீபத்தில் உருவான சில பிரச்சனைகள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பஹ்ரைனில் நடந்த போராட்டம் இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதர அரபு நாடுகளில் மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடிய வேளையில், பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை பஹ்ரைன் மன்னர் அங்கீகரித்து, தேசிய விவாதத்திற்கு இளவரசர் அழைப்பு விடுத்த பிறகுதான் ஷியா முஸ்லிம்களின் போராட்டத்தில் மோதல் வலுத்தது. ஷியா முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்களை ஜி.சி.சி படை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போராட்டத்தின் பின்னணியில் ஈரானின் தலையீடு தெளிவான நிலையில் அதற்குரிய ஆதாரங்களை பஹ்ரைன் திரட்டியது.மேலும் ஐ.நா சபையில் ஈரானின் மீது புகார் அளித்தது.
பிரச்சனை பூரணமாக கைநழுவி,வெளிநாட்டினர் மீது தாக்குதல் துவங்கிய வேளையில் ஜி.சி.சி தீர்மானத்தின்படி ராணுவ உதவி பஹ்ரைனுக்கு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் ஜி.சி.சியின்  ‘பெனின்சுலா ஷீல்ட்’ என்ற படையினர் பஹ்ரைனுக்கு சென்றனர்.
ஜி.சி.சி நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ராணுவமும்,பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன. இதனடிப்படையில் பஹ்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க சவூதி அரேபியா, யு.ஏ.இ, குவைத் ஆகிய நாடுகள் முன்வந்தன. ஆனால், இதனை சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்போடு ஒப்பிட்ட ஈரான், நேற்று முன்தினம் சவூதி அரேபியாவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை தூதரக மரியாதைகளை மீறியதாக அமைந்திருந்தது.
சவூதி அரேபியா, ‘தீக்கனலால் தலையை சொறிவதாக’ தெரிவித்த ஈரான், பஹ்ரைனில் ராணுவத்தை வாபஸ்பெற வேண்டுமென அழுத்தமாக தெரிவித்தது. இந்த அறிக்கையை சவூதி அரேபியா மறுத்ததோடு, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதுமட்டுமல்ல, பஹ்ரைனில் தலையிடுவதை ஈரான் கைவிட வேண்டுமென கோரியுள்ளது.
யு.ஏ.இயின் மூன்று தீவுகளை கைவசம் வைத்திருக்கும் ஈரான் இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு கூட தயாராகவில்லை.பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டுமென சர்வதேச அரங்குகள் உட்பட பல தடவை யு.ஏ.இ வலியுறுத்திய பொழுதும் ஈரான் செவிசாய்க்கவில்லை.
ஜி.சி.சி-ஈரான் இடையேயான உறவு மேலும் சீர்குலைவதற்கு காரணம், அண்மையில் குவைத் நாட்டில் ஈரான் உளவு வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குவைத் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களைக் குறித்து அறிய ரகசியமாக செயல்பட்ட ஈரான் உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேருக்கு மரணத் தண்டனையை விதித்தது குவைத் நீதிமன்றம்.இருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ஈரான் நாட்டைச் சார்ந்தவரின் மகளை நீதிமன்றம் விடுதலைச் செய்தது. உளவு பார்த்த வழக்கில் குவைத்தில் ஈரானின் முன்னாள் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது வெளியானதைத் தொடர்ந்து குவைத் ஈரானில் தனது தூதரை திரும்ப அழைத்தது.
வளைகுடா நாடுகளில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஈரானின் தலையீடுகள் பிரச்சனைகளை உருவாக்கி அமைதியான சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துகிறது என மதிப்பீடு செய்யப்படுகிறது. ஈரானுடனான உறவை முறிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஜி.சி.சி நாடுகளில் எழுந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜி.சி.சி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி தலைநகர் ரியாதில் நடத்திய அவசரக் கூட்டத்தில் வளைகுடா நாடுகளிலும், அரபு நாடுகளிலும் நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்தனர். பஹ்ரைன் போராட்டம், குவைத்தில் உளவு வேலை ஆகியவற்றைக் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
யு.ஏ.இயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஸாயித் அல் நஹ்யான் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஜி.சி.சியின் புதிய பொதுச் செயலாளர் அப்துல் லத்தீஃப் அல் ஸயானி மற்றும் ஜி.சி.சி உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானுக்கிடையேயான மோதல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். முஸ்லிம் நாடுகளை மோதவிட்டு வேடிக்கை பார்த்து பின்னர் உள்ளே நுழைந்து தனது சதித்திட்டங்களை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றன முஸ்லிம் விரோத சக்திகள். இந்நிலையில் ஈரானும், வளைகுடா நாடுகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மோதல் போக்கையும், பிறநாடுகளில் தலையிடும் போக்கையும் கைவிடுமா? என்பதுதான் அனைவரது உள்ளங்களில் எழும் கேள்வியாகும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة