இலங்கையில் தமிழ் மொழி இணையத்தளங்களில் முஸ்லிம்களின் குரல் மிகவும் அரிதாகவே ஒலித்து வருகின்றது என்ற நிலைதான் இன்றும் தொடர்ந்தாலும் அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களில் மத்தியில் இணையத்தள பயன்பாடு சற்று முன்னேற்றம் கண்டுவருகின்றது குறித்த சில முஸ்லிம் பிரதேசங்களில் அந்த பிரதேச செய்திகளை தாங்கியதாக இணையத்தளங்கள் தோன்றியுள்ளன இவை பாராட்டுக்குரியவை.
Lankamuslim.org, lankamuslim.com, OurUmmah.org, Lankamuslim.info ஆகிய எனது இணையத்தளங்கள் இலங்கை முஸ்லிம்களின் தேசிய செய்திகள் , பிராந்திய செய்திகள் ,செய்தி கட்டுரைகள் , விமர்சன கட்டுரைகள் அரசியல் ஆய்வுகள், சர்வதேச செய்திகள், ஆய்வு கட்டுரைகள்,மொழி மாற்று கட்டுரைகள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடராக முன்வைத்து வரும்போது பிராந்திய இணையதளங்கள் தமது பிரதேச நடப்புகளை செய்திகளாக பதிவு செய்து முஸ்லிம் சமூகத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது இந்த வகையில் http://puttalamonline.com/ என்ற பிரதேச இணையத்தளம் தனது ஆசிரியர் கருத்தாக பதிவு செய்துள்ள இஸ்லாத்தின் குரலை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது .
அல்லாஹ்வின் திருநாமத்தால்…
இஸ்லாமியத்தை அத்திபாரமாகக் கொண்டெழுகின்ற சமூக மாற்றம் என்ற சிந்தனைக்கு புத்தளத்துள் புதிய அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தனிப்பட்ட, குடும்ப, சமூக மேம்பாடு என்பது இஸ்லாமியத்தைத் தவிர்த்துக் கொண்டு உருவாக முடியாது என்ற பற்றுறுதி வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் ஒரு வகையான சுற்றி வளைப்புக்குள் புத்தளம் மெல்ல மெல்ல வந்துள்ளது. பள்ளிவாயலை மதத் தலமாக மட்டும் கருதுகின்ற மனப் பதிவு நீங்கிச் சென்று அதனை சமூகப் புனரமைப்பின் கேந்திர நிலையமாக புத்தளம் ஏற்று அங்கீகரித்துள்ளது. இந்நிலை முதிர்ச்சியடைந்து கனிந்து பலன் தர வேண்டும் என்று இறைவனிடம் இரு கரம் ஏந்திய நிலையில்….
“ஒரு சமூகத்தின் தராதரம் வெறும் பௌதிக வளங்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யப்படுவதில்லை. அதனது சிந்தனா சக்தியைக் கொண்டுதான் யதார்த்தமாக மதிப்பிடப்படுகிறது” என்பது அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபியின் கூற்றாகும்.
இவ்வகையில் புத்தளம் தனது சிந்தனாத் தரத்தை இமயம் காணச் செய்ய வேண்டும். இதனது தொடக்க நிலை ஆரோக்கியமான சமூக மாற்றம் குறித்த பேசுபொருளாக அமைய வேண்டும். சமூக மாற்றம் பற்றி தற்போது நிலவுகின்ற தரக்குறைவான கருத்துக்கள் மாற்றம் காண வேண்டும். வெடிப்பு ஏற்பட்டால் ஒட்டு வேலை (patch-work) பார்த்து பூசி மெழுகி அலங்காரம் செய்து வைத்தல் என்பதே மாற்றம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தினால், சாண் ஏறி முழம் சறுக்கிய நிலையிலேயே நாம் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். அறிவுபூர்வமாக ஆழமாக விஞ்ஞான ரீதியாக சிந்திக்கின்ற பான்மை எமது வழக்காறாக மாற வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் செயற்படும் சமூகம் எதையோ சாதித்திருக்கும்; எனினும் சாதிக்க வேண்டியதை சாதித்திருக்க மாட்டாது.
புத்தளம் பௌதிக வளங்களும், மனித வளங்களும் நிரம்பப் பெற்ற ஒரு நகர். இத்தகைய வளங்கள் இறைவனின் பேரருளாகும். இவற்றின் ஆழ அகலங்களை பின்னர் தரவுகளுடன் ஆய்வு செய்வோம். இந்த அருட் கொடைகளுக்கு எமது நன்றிக் கடன் எவ்வாறு அமையப் போகின்றது? மனிதனது சுபிட்சமான வாழ்வுக்கு இத்தகைய அருட்கொடைகள் பேருதவி செய்ய வேண்டும். சௌஜன்யமான வாழ்வுக்காக இத்தகைய பேரருளைப் பிரயோகித்து சமூக மாற்றம் காணாத சமூகம் இறைவனுக்கு நன்றி செலுத்தாத சமூகமே!
புத்தளம் மார்க்கப் பற்றுள்ள நகர். இது முழு இலங்கைக்கும் மார்க்க அறிவை வழங்கிய பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எப்போதும் அரசியல் மற்றும் சன்மார்க்கத் தளத்தில் புத்தளம் இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சமான சமநிலைத் தன்மையோடு கூடிய நடுநிலைமைப் பண்பையே ஆதரித்து வந்திருக்கிறது. தீவிரவாதச் சிந்தனையை மேலதிகச் சுமையாகக் கருதி புறக்கணித்திருக்கிறது. பல்வேறு சிந்தனா முகாம்களினது சுயாதீனமான தொழிற்பாட்டுக்கு புத்தளம் அங்கீகாரம் வழங்கியிருப்பது வரலாற்றுத் தவறு என்று குறிக்க முடியாது. மாறாக இஸ்லாமிய சிந்தனையின் வியாபகமான வளர்ச்சிக்கு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான குறியீடாகும். சடங்கு சம்பிரதாயங்களின் கூட்டுக்கலவையினால் சுற்றிவளைக்கப்பட்டு இறுக்கமான கட்டுக் கோப்புக்குள் தொடர்ந்து இருந்து வரும் நகரங்களோடு அல்லது கிராமங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது புத்தளத்தின் பண்பு சார் நிலையை இது தொடர்பில் தனித்துவப்படுத்தி விளங்கிக் கொள்ள முடியும்.
புத்தளம் தகுதி காண் உலமாக்களை கொண்டுள்ள நகர். உலமாக்களை மதித்து, அவர்களது கண்ணியம் காத்து அவர்களது கருத்துக்களுக்கு உரிய இடம் வழங்குகின்ற ஊர் புத்தளம். அரசியல் வாதிகளும், அறிஞர் பெருமக்களும், துறைசார் நிபுணர்களும், சிவில் நிர்வாகிகளும், உலமாப் பெருமக்களும் ஒரே அணியாக நின்று சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண கருத்து ரீதியாக ஒன்றுபட்டமைக்கான சான்றாதாரங்ளை இந்த ஊரில் காண முடிகின்றது. இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் பெரும் கருத்து மோதலாக மாறி சிந்தனாச் சிக்கலைத் தோற்றுவித்தது கிடையாது. அப்படியான ஒரு ஆரோக்கியமற்ற நிலை இருந்திருக்குமேயானால் புத்தளம் பெரிய பள்ளிவாயல் இந்த ஊருக்கு ஒரு தலைமையை வழங்கி இருக்க முடியாது. அது பைத்துஸ் ஸகாத் என்னும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தையும் தோற்று வித்திருக்க முடியாது. அவ்வப்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள் ஆன்மீக பண்பாட்டுப் பெறுமானங்கள் மூலம் நிறுக்கப்பட்டு பொது முடிவு எய்தப்பட்டமை புத்தளத்துக்கே உரிய தனிச் சிறப்பம்சமாகும்.
இதை விட மேலாக ஒன்றை இங்கு பத்திவைக்க ஆசைப்படுகின்றோம்.
புத்தளம் வந்தோரை வாழவைத்த பூமி! இனி வரும் காலங்களிலும் அது அவ்வாறான மண்வாசனை கொண்ட பூர்வீகப் பூமியாக இருக்க வேண்டும் என்பது எங்களது வேணவா!! வந்தோருக்கும் இருந்தோருக்கும் இடையிலே ஏற்பட்ட நியாயமான சில கருத்து வேறுபாடுகளும், விகற்பங்களும் ஆழ் மனதில் பதிந்துள்ள இஸ்லாமிய சகோதரத்துவத்தை பெயர்த்துவிடவில்லை என்பதையும் இங்கு பதிக்க விரும்புகிறோம்.
புத்தளம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை தொடர்ந்தும் பாரமரித்து வருகிறது. சர்வ மதங்களுக்கிடையிலான கருத்தாடல்கள், சிநேகபூர்வமான தொடரான சந்திப்புக்கள் மூலம் மதச்சகிப்புத் தன்மை தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது. எனவேதான் 1976 ஆம் ஆண்டு புத்தளம் சந்தித்த துரதிருஷ்டவசமான அசம்பாவிதத்திற்குப் பிறகு வேறொரு அசம்பாவித நிகழ்வை இந்த மண் சந்திக்க வில்லை.
தொடர்ந்தும் புத்தளம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்து அவலத்தைச் சுமந்து வாழ்ந்த காலத்தே உள்ளூராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் அது இழந்து விடுமோ என்ற அச்ச நிலை தொடர்ந்தும் இருந்து வந்தது.
அல்ஹம்துலில்லாஹ்! புத்தளம் மீண்டும் உள்ளூராட்சி மன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துள்ளது. சமூக மாற்றம் என்பது ஒரு சிலர் சமூகத்துக்க வெளியே நின்று ஏதோ ஒன்றை செய்ய அநேகர் கைகட்டிப் பார்த்துக்கொண்டு பார்வையாளர்களாக நிற்பதல்ல! முழுச் சமூகத்தின் சரி அரைவாசிக்கும் அதிகமானோர் மாற வேண்டும் – அதுவே சமூக மாற்றம்!!
நாம் ஏற்கனவே சொன்னதைப் போல் புத்தளம் சமூக மாற்றத்திற்காக ஈந்து கனிந்துள்ளது! இது ஒரு நல்ல சகுணம்!!
ஏன் அரசியல் தலைமையும் சன்மார்க்கத் தலைமையும் சமூகமாற்றத்திற்காக இஸ்லாமியம் என்னும் நேர்கோட்டில் சந்தித்திட, டயலொக் ஒன்றை நடாத்திட முயற்சிக்கக் கூடாது….?!
ஓர் அறிஞனின் கருத்துடன் விடை பெறுகிறோம்;
உயர்ந்த உள்ளம் கருத்துக்களை விமர்சிக்கும்!
சராசரி உள்ளம் நிகழ்வுகளை விமர்சிக்கும்!!
தாழ்ந்த உள்ளம் தனிமனிதர்களை விமர்சிக்கும்!!!
No comments:
Post a Comment