சிறைக்கைதிகளை சித்திரவதை செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் சாதாரண போராளிகள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏறத்தாழ 759 கேபிள் ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இரகசிய ஆவணங்கள் கசிந்தது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த பெண்டகன் தீவிரவாதத்திற்கு எதிரான முயற்சிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை சித்திரவதை செய்யும் முறைகளைக் குறித்தும், விசாரணை நடத்தும் வழிமுறைகளைக் குறித்தும் சிறிய விபரங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன குவாண்டனாமோவில் நிரபராதிகளை அமெரிக்கா மிக மோசமாக சித்திரவதை செய்கிறது என குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன.
ஆனால், முதன் முதலாக இந்த சித்திரவதைகள் குறித்து, நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் அமெரிக்காவிற்கு நன்றாக தெரியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவாண்டனாமோ சிறையில் தற்பொழுது 172 பேர்கள் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 100 பேர் அளவில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா. 33 பேர் வோர் கிரிமினல் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகிறார்கள். 48பேர் எந்தவித விசாரணைகள் ஏதுமின்றி நிரந்தரமாகவே குவாண்டனாமோ சிறையில் தங்கவைக்கப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment