Search This Blog

Jun 30, 2011

வாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு?

றிசாத் இப்னு ஆதம்
காத்தான்குடி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற குறைந்த நிலப்பரப்பில் அதிக சனத்தொகையை கொண்ட ஒரு சிறிய அழகிய நகரம். இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருப்பதாலும், இங்கு காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் மார்க்க ரீதியிலான தலைமைத்துவ வழிகாட்டலின் விளைவாலும் இந்த நகரம் ஏனைய நகரங்களை விடவும் ஒரு தனித்துவ நகராக மிளிர்ந்து காணப்படுகின்றது.
வர்த்தக ரீதியில் கிழக்கிலங்கையின் முக்கிய நகராகவும், தலை சிறந்த வர்த்தகர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும் தன்னகத்தே கொண்டு அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது விரிவாக
அதே வேளையில் நமது நாட்டில் அவ்வப்போது ஏற்படுகின்ற பல்வேறுபட்ட அனர்த்த சூழ்நிலைகளில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நின்று பொருளாதார ரீதியிலும் மற்றும் இன்னோரன்ன வழிகளிலும் பாரிய உதவிகளை செய்து வருகின்ற கட்டமைப்பை கொண்ட ஒரு நகரம் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் காத்தான்குடி தொடர்பாகவும் அண்மைக்காலத்தில் அங்கு இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்களும், குறிப்பாக ஒரு சில குறுகிய மனப்பான்மையுடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாலர்களும் சர்வேதேசரீதியில் காத்தான்குடிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை திரிபுபடுத்த முனைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இதற்காக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களை இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றார்கள்.
கடந்த 20 ம் திகதி காத்தான்குடியில் இரண்டு பள்ளிமாணவிகள் குறிப்பிட்ட சில இளைஞர்களால் கலாச்சாரத்தை மீறியது தொடர்பில் விசாரிக்கப்பட்ட சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக BBC தமிழ் சேவையானது இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதுடன் சம்பவத்துடன் சம்பந்தமில்லாத ஒரு சில விடயங்களை இணைத்து செய்தியை திசைதிருப்ப எத்தனித்திருந்தது.
இந்த செய்தி குறிப்புகளை தொகுத்து வழங்கியிருந்த ஊடகவியலாளர் N.உதயகுமார், வெறுமனே ஒரு சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளின் விளைவாக இடம்பெற்ற கலாச்சார பின்னணி பொருந்திய இந்நிகழ்வை ஒரு பெரிய சம்பவமாக காட்டியதோடு மாத்திரமல்லாமல் இது ஒரு மத அடிப்படைவாதம் எனும் போக்கில் செய்தியை தனது விருப்பத்திற்கேற்ப திரிபுபடுத்த முனைந்துள்ளார். இவர் தனது கருத்திற்கு வலு சேர்ப்பதற்கு இந்த செய்திக்கு தொடர்பில்லாத வேறுபல செய்திகளை இணைத்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே கௌரவ பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணியும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களும், இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையே என்று BBC தமிழோசைக்கு மிகவும் தெளிவாக செவ்வி வழங்கி இருந்தனர்.
இருந்த போதும் ஊடகவியலாளர் உதயகுமார், மத அடிப்படைவாதம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் விதைக்க முனைவதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
ஒரு சமூகம் என்பது பல தனிமனிதர்களின் கூட்டு. அதில் பல்வேறுபட்ட வித்தியாசமான குணாதிசயங்களைகொண்ட மனிதர்கள் காணப்படுவார்கள். ஒரு சிலரின் நடத்தையால் மொத்த சமூகமும் வேருபாதை நோக்கி நகர்வதாக கூறமுடியாது. அந்த வகையில், இந்த சம்பவத்தில் சம்பத்தப்படும் ஒற்றை இலக்கத்தில் உள்ள சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளை 60,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் காத்தான்குடியின் மொத்த மக்களின் உணர்வாக கருத முடியாது.
ஆனால் உதயகுமார், சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கையை மத அடிப்படைவாத சந்தேகத்தை ஏற்படுத்தி மொத்த காத்தான்குடியே மத அடிப்படைவாதத்தோடு இணைக்க முற்படுகின்றார். அனாமேதயமாக சில மட்டங்களில் அடிப்படைவாதம் தலைதூக்குகிறதா என்ற அச்சம் நிலவுகிறது என்று செய்தி புனையப்பட்டுள்ளது.
காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்ட வகையில் சர்வதேசரீதியில் சேறுபூசும் இந்த நடவடிக்கையானது, இவர் காத்தான்குடி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டுள்ளாரா அல்லது வேறு யாரினதும் விருப்பத்தின்பால் செயற்படுகின்றாரா என்று என்ன தோன்றுகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சர்வதேச வலையமைப்பான BBC தமிழோசையினை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
கடந்த 28 ம் திகதி இவர் BBC தமிழ் சேவையில் காத்தான்குடி தொடர்பாக தொகுத்து வழங்கிய குறிப்பில் தான் சொல்ல வந்த விடயத்திற்கு எந்தவித சம்பந்தமும் அற்ற வகையில் காத்தான்குடியில் இருக்கின்ற ஏற்கனவே பல தடவைகளில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்ட அரபு மொழியிலான பெயர்ப்பலகை விடயத்தை சுட்டிக்காட்டி இருந்தமையானது இவர் காத்தான்குடி மேல் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட குரோதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காத்தான்குடி மக்களால் பார்க்கப்படுகின்றது.
மாத்திரமின்றி, பள்ளிமாணவிகள் விசாரிக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியின் தாய் நிறுவனமும், அனைத்து காத்தான்குடி மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவத்தை வழங்குகின்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இந்த செய்தி தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை விளக்கும் உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், உதயகுமார் உட்பட எந்தத் தமிழ் ஊடகவியலாளரும் அங்கு வருகை தராமல் அதை புறக்கணித்திருந்தமையும் இவர்களது அநாகரீக ஊடக செயற்பாட்டுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
இது தவிர இவர் கடந்த காலங்களிலும் தனது செய்திகளின் ஊடாக காத்தான்குடி நகர் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதாக திரிவுபடுத்த முனைந்துள்ளர். இதற்காக BBC தமிழ் சேவையினை பயன்படுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக காத்தான்குடி பிரதான வீதியில் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாவின் அபிவிருத்தி வழிகாட்டலில் பேரீச்சம் மரங்கள் நடப்பட்டது தொடர்பிலும், அரபு மொழியை தங்களது புனித மொழியாக நேசித்து அதனை 95% க்கு அதிகமான மக்களும் அறிந்து இருக்கின்ற காத்தான்குடி நகரில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவன அனுசரணையில் அரபு மொழி மற்றும் ஏனைய தேசிய மொழிகளிலான வீதி பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டது தொடர்பிலும் இவர் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் மத அடிப்படைவாதத்தை இணைக்க முனைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அபிவிருத்திகள் வெறுமனே கலாச்சாரம், அழகியல் மற்றும் தேவைப்பாடுகள் சார்ந்த அபிவிருத்திகளே அன்றி இதற்கு பின்னால் எந்த வித பின்னணியும் கிடையாது.
ஆயினும் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் சர்வதேரீதியில் காத்தான்குடிக்கு சேறுபூசும் இவரின் இந்த அணுகுமுறை சொந்த குரோத்தத்தின் வெளிப்பாடா என்று என்ன தோன்றுவதோடு, பல்வேறு பட்ட காத்தான்குடி சமூக, சிவில் அமைப்புகளினதும், பொதுமக்களினதும் கண்டனத்திற்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகி இருக்கின்றது.
இது தொடர்பிலான உண்மையை தான் அறிந்து இருந்தும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே காத்தான்குடி மீதான இவரது சொந்த எதிர்ப்பை திரிவு படுத்தப்பட்ட செய்திக்குறிப்புகளினூடாக உலகச் சேவையான BBC ஐ பாவித்து வெளியிட்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அத்தோடு மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கும் இவரது ஒரு சில திரிபு படுத்தப்பட்ட செய்திகள் காரணமாக இருந்தமை தொடர்பில் இவர் பல கண்டனங்களை எதிர்நோக்கி இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தனது காழ்ப்புணர்வை வெளியிட்டு வருகின்ற உதயகுமாரின் குரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, இவ்வாறான இவரது நடவடிக்கைகளுக்கு BBC சேவையானது இடம் கொடுக்கக்கூடாது என்பதும் இவ்வாறானவர்களின் நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருந்து அனைத்து இனங்களின் சுய கலாச்சார மத மற்றும் பண்பாட்டு ரீதியான விடயங்களை செய்வதற்கு சுதந்திரம் உள்ள ஒரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல்லோரும் பாடு பட வேண்டும்.
தகவல் :
www.kattankudi.info

No comments:

Post a Comment

المشاركات الشائعة