Search This Blog

Jun 1, 2011

தீர்வுப் பேச்சுக்களில் தனித்தரப்பாக இருக்கும் தகைமை முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு


இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தனித்தரப்பாகப் பேசுவதற்குரிய தகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே பெற்றிருப்பதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பேணுவதற்காக முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தோற்றம் பெற்ற கட்சிகளெல்லாம் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து “முஸ்லிம்’என்ற அடையாளத்தையே  நீக்கி பேரினவாத சக்திகளின் அரவணைப்பில் தங்கியும் தொங்கியும் தமது சுயநல அரசியலை நடத்திவரும் இன்றைய காலக்கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே தனது சமூகத்தின் பெயர் நாமத்தை இன்றுவரை இலங்கையின் அரசியல் வரலாற்றில் தக்கவைத்துக் கொண்டிருப்பதை முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றது’எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீ.ல.மு.கா.தனித்து பங்குபற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை மறுதலித்து கிழக்கு மாகாணத்திலுள்ள சில அரசியல்வாதிகள் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்டிருந்தது தொடர்பாக விளக்கமளித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்குள் இருந்தும் அதன் வளர்ச்சிப் பாதையை முடக்கும் நோக்கத்துடன் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முஸ்லிம் சமூகத்தின் பெயரையும் சேர்த்துக்கொண்டு கட்சிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சிகளால் தமது சமூக மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் போக்கும் நோக்கும் தீவிரமடைந்தபோது தாக்குப்பிடிக்க முடியாமல் அல்லது பேரினவாதம் அபிவிருத்தி எனும் பெயரில் வழங்கும் மிச்ச சொச்சங்களைப் பெருப்பிப்பதற்காக இவர்கள் தங்கள் கட்சிகளின் பெயர்களில் இருந்த முஸ்லிம் என்ற பெயரைக்கூட அகற்றிக்கொண்டனர்.
முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக என்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தோற்றம் பெற்ற இக்கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்த்துக்கொண்டு தங்களின் அரசியல் இருப்புக்கும் தமது எஜமான்களான பேரினவாத சக்திகளின் விருப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றமை நம் எல்லோராலும் மிகத் தெளிவாகப்புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றுவரை தனது கட்சியின் பெயரிலிருந்தும் தனது கட்சியின் அடிப்படைக் கொள்கையிலிருந்தும் இந்நாட்டில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகச் சிதறி வாழும் முஸ்லிம் சமூகத்தைக் கைகழுவித் தூக்கி எறிந்து விடாமல் கௌரவமாக ஸ்திரப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது.அதனால்தான் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்டும் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் சார்ந்துள்ள முஸ்லிம் சமூகத்தின் சார்பாக தனித்தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோரி வருகின்றது.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அல்லது இதனை ஜீரணித்துக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் சில அரசியல்வாதிகள் தங்களது விவரமில்லாத அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும் மீண்டும் எதிரும் புதிருமான நிலைக்குள்ளாக்கி அதனூடாக தங்களது கீழ்த்தரமான சுயநல அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் அல்லது அதில் குளிர்காய்ந்து தங்களது சௌகரியங்களை மேலும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் முனைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்தரப்பு என்னும் அதன் நியாயமான சமூகம் சார்ந்த கோரிக்கையை தமிழ் மக்களின் பேச்சுவார்த்தைக்கு உலை வைக்கும் முயற்சியாக தற்போது அவர்கள் சித்திரித்துக்காட்டி சிறுபான்மை மக்களுக்குப் பூச்சாண்டி காட்டப்புறப்பட்டிருப்பது.அவர்களின் கையாலாகாத்தனத்தையே பட்டவர்த்தனமாக்கியுள்ளது. இவர்களின் இந்தப் பூச்சாண்டிக்கு தமிழ் பேசும் மக்களோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸோ அல்லது முஸ்லிம் சமூகமோ ஒருபோதும் பலியாகிவிடமாட்டார்கள் என்பதை நாம் இத்தருணத்தில் மிகத்தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
- தினக்குரல்

No comments:

Post a Comment

المشاركات الشائعة