Search This Blog

Jun 18, 2011

ஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் – ஒரு நினைவோட்டம்


எஸ்.எம்.எம்.பஷீர்
“இற்றைநாள் வரையிலும் அறமிலா மறவர் குற்றமே தமது மகுடமாக கொண்டோர்” சுப்ரமணிய பாரதி – தமிழ் ஆயுதப் போராட்டம் தொடங்கி புலிகள் ஆதிக்கம் பெற்று அழிந்து போகும் வரை ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிப் போன முஸ்லிம் அரச நிர்வாகிகளின் கொலை முதலில் புலிகளால் மூதூர் உப அரச அதிபர் ஹபீப் முகம்மது எனும் இளைஞரை சுட்டுக் கொன்றதுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹபீப் முகம்மது அனுராதபுரத்தை சேர்ந்த இளைஞர் முதன் முதலில் நிர்வாக சேவையில் தெரிவு செய்யப்பட்டு பல எதிர்கால கனவுகளுடன் மூதூருக்கு உப அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டவர்.
தனது நேர்மைக் குனத்தினால் மத ஈடுபாட்டினால் மக்களால் பெரிதும் விரும்பபப்படும் வகையில் எவ்வித பந்தாவு மில்லாமல் மக்களோடு மிக நெருக்கமாக இணைந்து சேவையாற்றியவர்:
எவ்வித அரசியல் அணியையும் சாராத கடமையே கண்ணாக கொண்டு செயற்பட்டவர்.இவர் மூன்றாம் திகதி செப்டம்பர் மாதம் எண்பத்தி ஏழாம் ஆண்டு (03.09.1987) புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரின் குருதி தேய்ந்த உடலமும் , கபனிட்ட ( அடக்கம் செய்யப்பட அணியப்படும் ஆடை) உடலையும் கொண்ட படங்கள் முஸ்லிம்களை முழு இலங்கையிலும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த கொலை மூதூர் மக்களையும் குறிப்பாக சிவில் சமூகத்தையும் மீளாத் துயரில் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் தம்மை விட்டு மரணித்துவிட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியது. குறிப்பாக மூதூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் பலர் இதனை முதன் முதலில் புலிகளின் கீழ் முஸ்லிம் கல்வி சமூகம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை எடுத்துக் காட்ட , குறிப்பாக மூதூர் சரிப்தீன் ஹாஜியார், அக்பர் போன்றோர் ஹபீப் முகமதின் கொலையை ஆவணப் படுத்தி வெளியிட்டனர் என்பது எனது ஞாபகத்தில் உள்ள குறிப்பு.
இந்த சம்பவம் முழு கிழக்கிலங்கை முழுவதும் ஏற்படுத்திய அச்ச , அனுதாப அதிர்வலைகள் புலிகளுக்கு எதிரான முஸ்லிம் நிலைப்பாட்டினை தோற்றுவித்ததையும் சில மனித உரிமை செயற்பட்டுள்ளார்கள் சுட்டிக் காட்ட தவறவில்லை.
இன விகிதாசார அடிப்படையில் நோக்கும் பொது மிக சிறியளவிலான முஸ்லிம்களே நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்குள் அரச உயர் பதிவிகளை , குறிப்பாக அரச நிர்வாக சேவையில் அதி உயர் கல்வி பெற்றோராக இருந்த காலகட்டங்களில் , அதிலும் குறிப்பாக வட கிழக்கில் அரச நிர்வாக சேவையில் துணிச்சலாகவும் நேர்மையாகவும் கடமையாற்றியவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர்.
கிழக்கிலே ஹபீப் முகமதுவை கொன்று சுமார் நான்கு மாதங்களின் பின்னர் புலிகள் மன்னார் வட மேற்கு அரச அதிபரான ஜனாப் எம்.எம்.மக்பூல் என்பவரை கொன்றனர். அவரை கொன்றது பற்றி நான் முன்னர் எழுதியுள்ள பகுதிகளை இங்கு விரிவாக தெரிந்து கொள்ள பதிவிலிடுகிறேன்.
இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகையின் பின்னர் அரச நிர்வாகங்களை நடத்த விடாமல் புலிகள் பல தடைகளை அரச நிர்வாகிகளுக்கு வித்தித்தனர். அந்த வகையில் குடியியல் நிர்வாகத்தை நடத்தக் கூடாது என எச்சரிக்கை சுவரொட்டிகளையும் வடக்கு கிழக்கில் ஒட்டியுமிருன்தனர். புலிகளின் கட்டளையை மீறியமைக்காக அரச நிர்வாகியாக தனது கடமையை சரியாக செய்தமைக்காகவே மக்பூல் புலிகளால் ஈவிரக்கமின்றி அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
“ வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்” ஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு
“ஜனாப். மர்கூம் மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம், கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் அவர்களின் பின்னர் இவர் தெரிவாகி இருந்தார் . மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில் பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் (DRO-–Divisional Revenue Officer) எனும் பதவிவகித்தபோது அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு , மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது “தமிழ பேசும் மக்களின்” கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின் கட்சி பத்திரிகையான “சுதந்திரன்” தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி ” தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா” என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின் பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட போது, எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விவுரையாளரும் பின்னாளில் இலண்டனிலுள்ள “தீபம்” தொலைக்காட்சி நிறுவனத்தின் செயதி தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய வித்தியானந்தன் “முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள்” என்றும் இதற்கான பதிலை அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதி” அமிர்தலிங்கம் வழங்குவார் என்று எதிர்பார்த்து கூற , அமிர்தலிங்கம் அலட்சியம் செய்து இது பற்றி மூச்சு விடாமல் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார்” மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 13
பின்னர் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையை விட்டு சென்ற பின்னர் இருபத்தி ஆறாம் திகதி டிசம்பர் மாதம் தொன்னூற்றி இரண்டாம் ஆண்டு (26/12/1992) ஓட்டமாவடியின் முதல் பட்டதாரியும் எழுத்தாளனும் கல்விமானுமான வை. அகமத் புலிகளின் கிளைமோர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். ஐவரும் மூதூரில் அதிபராக முன்பு பனி புரிந்தவராகும். அவ்வாறே குச்சுவெளி உப அரச அதிபர் இப்ராகிம் என்பவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முஸ்லிம் சமூகத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தமது நாடு என்ற நிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணியில் தடையாகவிருந்த முஸ்லிம்களையும் தமக்கு கீழ்படியாத தமிழ் அரச நிர்வாகிகளையும் கூட புலிகள் விட்டு வைக்கவில்லை. முஸ்லிம்களை பொறுத்தவரை நிர்வாக ஆளுமையிலிருந்து ஒரு சமூகத்தை அநாதையாக்கும் கைங்கரியத்தை மிக குரூரமாக புலிகள் செயற்படுத்தினர். நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டு கடமையே கண்ணென நின்று தம்மையே பலிகொடுத்த அந்த வீர அரச நிர்வாகிகள் எமது நினைவுகளில் நிறைந்திருப்பார்கள். -17/06/2011
Thanks:Lankamuslim /Bazeer Lanka
            

No comments:

Post a Comment

المشاركات الشائعة