நீங்கள் புகைப்பவரா? அப்படியானால் தினமும் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்
அவர்கள் அடிக்கடி கோபப்படு வார்கள், அவர்களின் முகம் அவலட்சணமாக இருக்கும், உதடுகள் கறுத்திருக்கும், கன்னங்கள் சுருங்கி , கண்கள் மஞ்சள் நிறமாகி கலங்கிச் சிவந்து , பற்களில் கறைபடிந்து, இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தில் இருப்பார்கள். அவர்களை நெருங்க முடியாதளவு அவர்களது வாயில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். எந்த நேரமும் பதற்றத்தோடு இருக்கும் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் இருப்பர்.
இத்தகையவர்களின் வாழ்நாட்கள் துரிதமாக எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் கொல்லப்படுபவர்களின் மரணப் பட்டியலில் இருக்கிறார்கள். மிகச் சீக்கிரத்திலோ அல்லது சற்றுப் பிந்தியோ இவர்களின் மரணத்தை அவர்களே வலிந்து தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் கம்பனிகள் தங்களின் இந்தப் பொருளை விற்பனை செய்யும் விளம்பரங்களுக்காக சிகரட் புகைக்காத கவர்ச்சியான கட்டிளமையானவர்களையே பயன்படுத்துகின்றன என்பதை இவர்கள் அறிந்திருப்பதில்லை.
எதைப்பற்றி யாரைப்பற்றிச் சொல்கிறோம் என்பதை வாசகர்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள்.
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் நேற்று முன்தினம் (மே 31) அனுஷ்டிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் இந்நாளை 1987 ம் ஆண்டில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அறிவித்தது. உலகில் மனித படுகொலைகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இந்த விஷேட நாளின் அறிவிப்பு மூலம் ஆண்டு தோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 35 மில்லியன் இறப்புக்களைக் குறைக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
இந்த வருட புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நூறு வீதம் புகையில்லா சூழலை உருவாக்கி பெண்கள் சிறுவர்கள் மற்றும் வேலையிடத்தில் உள்ள அனைவரையும் இந்தத் தீமையிலிருந்து காப்பதற்கே புகையிலை மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
அந்தவகையில் புகையிலையை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதனைத் தவிர்ப்பதால் நோய்களிலிருந்து மீள்தல் பற்றியும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.
இலங்கையில் சிகரட் புகைப்பதனால் மட்டும் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் ஒருவர் என்ற அடிப்படையில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 72 பேர் தமது பணத்தைக் கொடுத்து பரிதாபகரமாக மரணத்தை விலைக்கு வாங்குகின்றனர்.
இவர்கள் இப்படி உயிரிழந்தாலும் இறப்பதற்கு காரணியாக இருந்த போதைவஸ்துக்கள் மூலமாகக் கிடைக்கும் கொழுத்த இலாபத்தை வைத்து அமெரிக்க பிரிட்டிஷ் கம்பனிகள் சொகுசாக வாழ்கின்றன.
இலங்கையரைப் புகைக்க வைத்து அவர்களைக் கொல்வதன் மூலம் இலங்கையிலிருந்து ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாவை பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனிகள் நிகர இலாபமாகச் சம்பாதிக்கின்றன.
புகையிலை மற்றும் மதுபானம் உட்பட போதைப் பொருட்களினால் ஏற்படக்கூடிய நோய்களினால் இலங்கையில் ஒரு நாளைக்கு ஏறத்தாள 350 பேர் இறப்பதாக கடந்த வருடம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
200 குடும்பங்கள் வசிக்கும் கிராமமொன்றில் சிகரெட்டின் மாதாந்தச் செலவு ஐந்து இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாவாகும். அரசாங்கம் சமுர்த்திக் கொடுப்பனவு பெறுபவர்களுக்கு 840 கோடி ரூபாவை செலவளிக்கும் அதேநேரத்தில் சமுர்த்திக் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள் சிகரட் புகைத்தலுக்கு மட்டும் 1825 கோடி ரூபாவை செலவளிக்கின்றனர். சிகரட் புகைப்பதுதான் எமது நாட்டில் வறுமையை உருவாக்கும் காரணிகளில் பிரதானமானதாகும் என்பதை முன்னாள் சமுர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
அதிகமான பிள்ளைகளின் அவல நிலைக்குக் காரணம் சிகரட் கம்பனிகளாகும். ஏனென்றால் பெற்றோர்களில் அதிகமானோர் சிகரட் புகைப்பதனால் இளம் வயதில் இறக்க நேரிடுகின்றது. அதனாலேயே அதிகமான சிறுவர்கள் பெற்றோரை இழக்கின்றனர்.
இலங்கையின் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக அமைவது `சம்பாதிக்கும் பணம் சிகரட் கம்பனிகளினூடாக அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகும்.’
புகையிலைக் கம்பனிகளின் பங்குகளில் 92 வீதமானவை நேரடியாக பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனிகளுக்கு போய்ச் சேர்கிறது. இது நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் வியாபாரம் அல்ல, மாறாக எமது நாட்டிலுள்ள பணத்தை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இழுத்தெடுக்கும் தந்திரோபாய வியாபாரமாகும்.
எமது நாட்டிலிருந்து சுரண்டும் பணத்தில் வரி என்ற பெயரில் ஒரு சிறு தொகையை அவர்கள் அரசுக்கு வழங்கினாலும் கூட, இலங்கையரின் அந்த வரிப்பணம் புகைத்தலினால் பாதிக்கப்படுபவர்களுக்கு செலவளிப்பதற்கு அரசுக்கு போதுமானதாக இல்லை. நோயுற்றவர்களின் மருத்துவச் சிகிச்சைக்குக் கூடப் போதுமானதாக இல்லை.
சிகரட் மற்றும் மதுபானத்தின் மூலம் அரசுக்கு 12 வீத வரி கிடைக்கின்றது. ஆனால் நோயுற்றவர்களுக்காக அரசாங்கம் 22 வீத வரியினை செலவுக்காக ஒதுக்க வேண்டியுள்ளது.
வருடாந்த மருத்துவச் செலவுகளுக்காக 75 ஆயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்படுவதுடன் அதில் மூவாயிரத்து ஐநூறு இலட்ச ரூபா செலவிடப்படுவது சிறுநீரக நோயாளர்களுக்கேயாகும். சிறுநீரக நோய்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிகரட் மற்றும் மதுபானப் பாவனைதான் காரணமாக அமைந்து விடுகிறது.
மதுபானத்தினாலும் சிகரட்டினாலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியசாலைக் கட்டில்களில் 34 வீதமானவை ஒதுக்கப்படுகின்றன. 90 வீதமானவர்களுக்கு தொற்றாத நோய் ஏற்படுவதற்கான காரணம் மதுபானப் பாவனையாகும். நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வருடாந்தம் செலவளிக்கும் 8000 கோடிக்கும் அதிகமானவை மதுபானம் அருந்தியதன் காரணமாக நோயுற்றவர்களுக்கே செலவளிக்கப்படுகிறது.
இலங்கை என்ற பெயரில் தன்னை இனங்காட்டிக்கொள்ளும் இந்த பிரித்தானிய அமெரிக்கக் கம்பனிகளின் இலக்கு 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துச் சிறுவர்களையும் சிகரட் புகைக்கப் பழக்கத்திற்கு அடிமையாக்குவதேயாகும். (1995 Terrence Sullivan புகையிலைக் கம்பனியின் விற்பனை முகவர்)
சிகரட் வியாபாரம்தான் எமது நாட்டிலுள்ள பணத்தை உறிஞ்சி எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பும் தந்திரோபாய வியாபாரமாகும்.
சிகரட் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன சர்வதேச ரீதியாக இடம்பெறுவதற்கான காரணம் சர்வதேச அரசியல் மற்றும் பல்தேசிய சிகரட் கம்பனியின் பணபலம், ஏமாற்று வித்தை என்பனவாகும்.
பிள்ளைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை இலக்கு வைத்து சிகரட் புகைக்க வைக்கும் புகையிலைக் கம்பனியின் பணியை பொறுப்பேற்றிருக்கும் புகழ்பெற்ற கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உள்ளனர் என சாட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தங்களின் அபிமான சினிமா நட்சத்திரம் சிகரட் புகைக்கும்போது அதைப்பார்க்கும் சிறுவர்களின் உள்ளம் புகைத்தலுக்குக் கவரப்படுவதானது, அவ்வாறான காட்சிகளைப் பார்க்காத பிள்ளைகளைக் காட்டிலும் 16 மடங்கு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (ADIC Media Sharp)
2002ம் ஆண்டின் ஜனவரியில் இருந்து மார்ச் வரை இலங்கையிலுள்ள மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம்பெற்ற 27 நிகழ்ச்சிகளில் 47 நிமிடங்கள் 11 செக்கன்கள் சிகரட் மற்றும் மதுபானம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமை 270 மணித்தியாலம் மேற்கொண்ட ஆய்வின்போது தெரியவந்துள்ளது. (ADIC)
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் எந்தவொரு அரசாங்கமும் தலையிட்டு புகையிலை சம்பந்தமான கைத்தொழிலை ஊக்குவிக்கக்கூடாது என உலக வங்கி எச்சரிக்கின்றது.
மாசில்லாத காற்றைச் சுவாசிப்பது ஒவ்வொரு மனிதருக்குமுள்ள பிறப்புரிமை. அந்த உரிமையை புகைபிடிக்கும் ஒரு கூட்டத்தினர் பறித்தெடுக்கின்றனர் என்பது வருந்தத்தக்கது.
புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்றே கெடுதலை உண்டாக்கும். எனவே புகைப்பிடிக்கும் கெட்ட பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
குறிப்பாக முஸ்லிம்களில் அதிகமானோர் புகைப்பிடிக்கின்றனர். ஆனாலும் இது பாவ காரியம் என்றோ அல்லது வீண் விரயம் என்றோ எவரும் உணருவதாகத் தெரியவில்லை. பலர் தமது குடும்பத்தவர் முன்னிலையிலேயே புகைக்கின்றனர். இன்னும் பலர் புகைப்பதை பெருமையான விடயமாகக் கூட கருதுகின்றனர்.
ஏனைய சமூகங்கள் மத்தியில் புகைத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தைப் போன்று முஸ்லிம்கள் மத்தியில் அதற்கெதிரான பிரசாரம் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதனை ஒரு பாரதூரமான விடயமாக நாம் கருதாமையே இதற்குக் காரணமாகும்.
எனவேதான் மேற்சொன்ன தரவுகள் மூலமாக புகைத்தலின் பாரதூரத்தை நீங்கள் விளங்கியிருப்பீர்கள். இன்றிலிருந்தாவது நாம் ஒவ்வொருவரும் புகைப்பிடிக்கும் நமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களுக்கு இதன் பாரதூரத்தைப் பற்றி எடுத்தியம்புவோம். புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப நம்மாலான பங்களிப்புகளை வழங்குவோம்.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
(ஏறாவூர் விசேட நிருபர்)
(நன்றி விடிவெள்ளி)
(ஏறாவூர் விசேட நிருபர்)
(நன்றி விடிவெள்ளி)
No comments:
Post a Comment