Search This Blog

Jun 14, 2011

‘பதியுத்தீனை வரவேற்கச் சென்றவர்களுக்கு யாழ் பொலிஸார் தடியடி’


முஹம்மத் ஜான்ஸின்


-"மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம்" 
இல்லாதபோதே நிகழ்ந்துள்ள போலீஸ் அராஜகம் - வடபுலத்தில் பயங்கரவாதிகள் செய்த பலவந்த வெளியேற்றத்தின் ஆராத ரணங்கள் ஏராளமானவை. இனிப்பும் கசப்பும் கலந்த எத்தனையோ அனுபவங்கள் மறக்கப்பட்டுவிட்டன. வரலாற்றில் நிகழ்ந்த ஆனால் பதியப்படாத எத்தனையோ சம்பவங்கள் வீணாகி விழலாகிப் போய்விட்டன. அனுபவங்களுக்குள் முக்குளித்த பலர் உலகுக்கே விடைகொடுத்துச் சென்றுவிட்டனர்.
இது போன்ற ஒரு யூன் மாதத்தில் சமுதாயச் சிற்பியாக விளங்கிய முன்னால் கல்வி அமைச்சர் முஸ்லிம் -அரசியல் பிரதிநிதி – கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் 16 யூன் 1997 அன்று தனது 93வது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கி தனது மறுவுலகப்பயணத்தை தொடர்ந்தார். யூன் 23 1904 இல் வெலிகமவில் (வலி காமம்) முஹம்மத் நைனா மரைக்கார் மத்தியச்சம் அவர்களுக்கும் பாத்திமா நாச்சியா செய்யது முஸ்தபா அவர்களுக்கும் மகனாக பிறந்தார்.
இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளில் சமூகத்திற்கு அரசியல் ரீதியான பல உரிமைகளையும் பலன்களையும் பெற்றுக்கொடுத்தவர்களில் முதலிடம் அவருக்கே உரித்தாகும். அந்த வகையில் வடக்கு முஸ்லிம்களின் மனதில் இடம்பிடித்தவர்கள் முன்னால் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் அவர்களும் தான் . வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணங்களில் ஒன்றாக முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமும் அதன் கருத்துக்களும் அமைந்திருந்தன. அஸ்ரபுக்கு பிறகு தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் அகதிமுகாம்களுக்கு ஒரு பிடி மண் தானும் அள்ளிப்போடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கான ஒரு கட்சியாக பரிணமிக்கும் போது பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் முழு இலங்கையர் நெஞ்சிலும் இடம்பிடித்து முஸ்லிம்களின் ஒரு தேசிய சொத்தாக பரிணமித்தார். ஆட்சியிலிருந்த போது மட்டுமன்றி எதிர்க்கட்சியிலிருந்த போதும் அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதும் முஸ்லிம்களுக்காக சவால்மிக்க பல காரியங்களை செய்து கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததுடன் விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றையும் நிறுவிக்கொடுத்ததுடன் அப்பாடசாலைக்கு ஆய்வுகூடத்துக்கு தேவையான சகல பொருட்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
காலத்துக்கு காலம் தேவையான ஆய்வுகூட பொருட்களுக்கும் இவர் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் பெண்களுக்காக ஹதீஜா கல்லூரியை கட்டுவித்ததிலும் இவரது பங்களிப்புண்டு. அன்னார் இறந்து 14 வருடங்களாகின்ற இம்மாதத்தில் அவர் பற்றிய சில செய்திகளை வாசகர்களுகக்கு வழங்குவது சாலப்பொருத்தமானதாகும். இந்த மகான் பற்றிய ஒரு செய்தியை எனது ஆசிரியர் ஏ.சி. நஜூமுத்தீன் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர் கூறிய மறக்கமுடியாத செய்தியொன்றினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அக்காலத்தில் முஸ்லிம்கள் எப்போதும் ஐ.தே.கட்சிக்கு உரித்தானவர்கள் எனும்போக்கு காணப்பட்டதால் ஐ.தே.கட்சியும் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் சேவைகளை ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. கலாநிதி பதியுத்தீன் அவர்கள் எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் தனிப்பட்ட நன்பராக விளங்கிய காரணத்தால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக விளங்கியதுடன் கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கினார்.
தனது பதவிகளைப் பயன்படுத்தி சமுதாய முன்னேற்றத்துக்கு வழிகோலினார். பதியின் சிந்தனைகளில் ஒன்று அரசியலில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாராது இரு பெரும் கட்சிகளிலும் சார்ந்திருப்பதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கு உழைக்கவேண்டும் என்பதாகும். அதேவேளை ஐ.தே. கட்சியிலுள்ள முஸ்லிம்களை இழுத்தெடுக்க அவர் முயற்சிக்கவில்லை.
1965ஆம் ஆண்டு திரு. டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கூட்டரசாகப் பதவியேற்றது. அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏழு கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைத்தன. திரு. .பி.பி. சில்வா உருவாக்கிய சிறிலங்கா சோசலிசக் கட்சி தமிழரசுக்கட்சி தமிழ் காங்கிரஸ் ஜாதிக விமுக்தி பெரமுன மக்கள் ஐக்கிய முன்னனி பிரஜா தந்திரவாத கட்சி என்பன ஒன்றினைந்து ஆட்சியமைத்தன.
1960 களில் சிறிமா அம்மையாரின் காலத்தில் கல்வியமைச்சராக இருந்த பதியுத்தீன் முஸ்லிம் சமூகத்துக்கு பல சேவைகளை ஆற்றியிருந்தார். பல முஸ்லிம் பாடசாலைகள் புதிதாக உருவாக்ப்பட்டன. சில முஸ்லிம் பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்துக் கொடுத்தார். இருந்த போதிலும் 1965இல் முஸ்லிம்களின் வாக்கு ஐ.தே.கட்சிக்கே வழங்கப்பட்டதால் சுதந்திர கட்சி ஆட்சியிழந்தது. 1965இல் ஐ.தே. கட்சிக் கூட்டரசாங்க காலத்தில் இஸ்லாமிய சோசலிஸ முன்னனி என்னும் அமைப்பை உருவாக்கி நாடு பூராகவும் கிளைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். முற்போக்கு சிந்தனையுடையவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பதியின் தலைமையில் ஒன்று திரண்டனர். யாழ்ப்பாணத்திலும் பெருமளவான மக்கள் பதியின் அணியில் இணைந்தனர்.
1967 ஆம் ஆண்டு மார்ச்சு 10ஆம் திகதி யாழ் நகரத்தில் முஸ்லிம்கள் வாழும் சோனகரிஸ்தான் பகுதி பதியுத்தீனை வரவேற்க விழாக்கோலம் பூண்டது. ஜின்னா மைதானத்தில் அலங்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. பதியும் பரிவாலங்களும் காலையில் வரும் மெயில் ரயிலில் வர ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முதல் நாட்களிலேயே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மூதூர் எம்.பி. அப்துல் மஜீட் உட்பட பல பிரமுகர்களும் ஆதரவாளர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். அதேவேளை தழிழரசுக்கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வரவேற்பை குழப்ப சதித்திட்டம் தீட்டியிருந்தனர். இதையறியாத யாழ் முஸ்லிம்கள் பதியுத்தீன் குழுவினரை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கில் யாழ் ரயில் நிலையத்தில் அதிபாலை 5 மணிக்கு ஒன்று கூடியிருந்தனர்.
புதியை வரவேற்பதற்காக தெளிவான தமிழில் எழுதப்பட்ட பதாகைகள் முஸ்லிம்களிடம் காணப்பட்டது. ஆல்லாஹூ அக்பர் என்ற தக்பீரையும் முஸ்லிம்கள் முழங்கினர். முஸ்லிம்கள் அங்குவந்து சேரும் முன்னரே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் அநாவசியமாக அங்கு நடமாடியதுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துக் கொண்டிருந்தனர். முஸ்லிம்களைக் கண்டதும் அவர்களுடைய முகங்கள் ஆச்சரியமும் பொறாமையும் நிறைந்ததாக காணப்பட்டது. அவர்கள் எதற்காக தொலைபேசியில் பேசினார்கள் என்பதையும் வரப்போகும் ஆபத்தையும் வஞ்சகமற்ற முஸ்லிம்கள் அறிந்திருக்கவில்லை.
முஸ்லிம்கள் சந்தோசமாக ஒன்று கூடியிருந்த வேளையில் திடீரென்று பூகம்பம் வெடித்தது. முன்னால் ஏ.எஸ்.பி. தவராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் ட்ரக் வண்டிகளில் குண்டாந்தடிகளுடன் வந்திறங்கி முஸ்லிம் மக்கள் மீது பாய்ந்தனர். குண்மூடித்தனமாக குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர். பலரை அடித்து கால்களால் உதைத்தனர். சைக்கிள்களில் வந்தவர்களையும் தாக்கி சைக்கிளுடன் ட்ரக் வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். அரை இருட்டில் பலரும் பல பக்கங்களில் சிதறியோடி ஒழிந்து கொண்டனர்.எல்லோரும் ஓடிவிட்டதால் காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்ட பொலிஸாரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
எஞ்சிய முஸ்லிம்கள் மீண்டும் அவ்விடத்தில் ஒன்று கூடி பதியுத்தீனையும் அவருடன் வந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் சோசலிஸ முன்னனி குழுவினரையும் வரவேற்றனர். நாரே தக்பீர் என்ற கோஸம் முழங்கியது. சேனடா; ஏ. ஆர்.எம். ஹாமீம் புரக்டர் கலீல் மர்லீன் பத்தாஹ் ஹாஜியார் எஸ்.எல.எம். மஸ்கூர் ,எம்.சி.அஹ்மத் முன்னால் மந்திரிசபைப் பணிப்பாளர் புரக்டர் ஆலிப் (யாழ்வாசி) இப்படியான பிரமுகர்கள் ஏராளமாக நின்றிருந்தனர். பதி வந்து இறங்கியதும் முக்கியஸ்தர்கள் அவருக்கு மாலைகளை அணிவித்து வரவேற்றனர். ஏவ்வாறாயினும் வரவேற்க வந்தவர்கள் மத்தியில் காணப்பட்ட பீதியை உணர்ந்த பதியுத்தீன் தமிழர் கட்சிகளின் தூண்டுதலினால் பொலிஸார் முஸ்லிம்களை தாக்கியதை அறிந்து ஆத்திரமடைந்தார்.
பதியும் பரவாரங்களும் மோட்டார் பவனியில் சோனகரிஸ்தானுக்கு அழைத்துவரப்பட்டனர். காலை உணவுக்கு பின் கண்டனத் தந்திச் செய்தியொன்று பதியுத்தீன் கூறக்கூற புரொக்டர் கலீல் மூலமாக எழுதப்பட்டு அப்போது கொழும்பிலிருந்த யாழ் எஸ்.பி. சுந்தரலிங்கத்துக்கு அனுப்பப்பட்டது. சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமைபீடம் மற்றும் பத்திரிகைகளுக்கும் செய்தியனுப்பப்பட்டது.
அன்று பிற்பகல் யாழ் சோசலிஸ முஸ்லிம் முன்னனி தலைவர் ஜனாப். அப்துல் மஜீத் (அப்துல் காக்கா) தலைமையில் ஜின்னாமைதானத்தில் இடம்பெற்றது. கூட்டம் ஆரம்பித்த வேளையில் மீண்டும் பொலிஸார் ட்ரக்குகளில் வந்திறங்கி மைதான வாயில்களை முற்றுகையிட்டு நின்றனர். இக்கூட்டத்தில் பேசிய தெஹியோவிட்ட எம்.பி. திரு. தனபால வீரசேகரஇ செனடர், ஹாமீம் அப்துல் மஜீட் எம்.பி. என்போர் பொலிஸாரையும் கூட்டரசாங்கத்தையும் தாக்கிப் பேசினர். இறுதியாக கண்னைப்பறிக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையிலிருந்து பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் தனக்கேயுரித்தான கம்பீரமான குரலில் ஆணித்தரமாக கொள்கை விளக்க உரையாற்றினார்.
யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் நடைபெறவிருந்த இந்நிகழ்வு பொலிஸாரின் அடாவடித்தனத்த்தால் நாடு முழுவதும் பேசப்பட்ட ஒரு விடயமாக மாறியது. கொழும்பு பத்திரிகைகள் அனைத்தும் முதன்மைச் செய்தியாக இச்சம்பவத்தை பிரசுரித்தன. ‘பதியுத்தீனை வரவேற்கச் சென்றவர்களுக்கு யாழ் பொலிஸார் தடியடி’ என்று அப்போது வெளிவந்த தினபதி தலையங்கம் வெளியிட்டிருந்தது.
இமெயில்: mohdsharief@yahoo.com

thanks:Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة