கத்தோலிக்க பாதிரிமாரால் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களை தடுப்பதற்கு புதிய நெறிமுறைகளை உருவாக்குவதற்காக ரோமில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள மூன்று நாள் மாநாட்டுக்காக உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க ஆயர்மார் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரோமிலுள்ள ஜெய்சுயிட் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரோமுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, மாநாட்டில் பங்குகொள்ளவுள்ள ஆயர்மார் அனைவரும், தத்தமது பிரதேசங்களில், கூட்டங்களை நடத்தி உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களுடனான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டுமென வத்திக்கான் கூறுகிறது .
குறிப்பாக கத்தோலிக்க வட்டாரங்களில், தாம் சிறுவர்களாக இருந்த போது கத்தோலிக்க மதகுருமாரால் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டுவோருடன் சந்திப்புகளை ஆயர்கள் நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அயர்லாந்து திருச்சபை வட்டாரங்களில் நடந்துள்ளதாகக் கூறப்படும் சிறுவர் துஷ்பிரோக சர்ச்சைகளில், வத்திக்கானின் ஆணைப்படி விசாரணைகளை நடத்திவரும் பிரிட்டனிலுள்ள புகழ்பெற்ற உளவியல் நிபுணர் பேராசிரியர் ஷெய்லா ஹொலின்ஸும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேச இருக்கின்றார்.
மதகுருமாரால், சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களை இல்லாதொழிப்பதையே கத்தோலிக்கப் ஆயர்கள் தலையாய கடமையாக கொள்ள வேண்டுமென இரண்டு மாதங்களுக்கு முன்னர் வத்திக்கான் தலைமையகம் அறிவித்திருந்தது.
திருச்சபைச் சட்டத்தின் கீழ், துஷ்பிரயோக மதகுருமாருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளைக் கொண்டுவரும் வத்திக்கான் அதிகாரி, மொன்சிங்னோர் சார்ல்ஸ் சிக்லுனா, முன்னைய ஆயர் மாநாடுகள் இந்த விவகாரத்தில் புதிய வழிகாட்டு நெறிகளை வரைவதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லையென்பதை ஒப்புக்கொள்கின்றார்.
அயர்லாந்து பாதிரிமாரின் விவகாரங்கள் தொடர்பில் தான் நடத்திய விசாரணைகள் பற்றிய அறிக்கையை அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிடுவதாக வத்திக்கான் கூறியுள்ளது. கடந்த காலங்களில் திருச்சபை வட்டாரங்களால் புரியப்பட்ட சிறார் துஷ்பிரயோக சம்பவங்களின் போது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள கத்தோலிக்க தலைமைபீடங்கள் அவற்றை கையாண்ட வழிமுறைகள் மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகவே வத்திக்கான் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-தகவல் BBC
No comments:
Post a Comment