Search This Blog

Jun 22, 2011

முஸ்லிம்கள் தாய்மொழியாக தமிழைக் கற்பதில் ஆர்வமூட்டிய அறிஞர் அஸீஸ்


1950 ஆம் ஆண்டுகளில் தேசியவாத அலை நாட்டில் பரவலாக வீசிய போது மிகவும் துணிச்சலுடன் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வதில் அறிஞர் அஸீஸ் சிறந்து விளங்கினார். உத்தியோகபூர்வ மொழி என்ற விவகாரம் தலைதூக்கிய போது அறிஞர் அஸீஸ், முஸ்லிம்களை பொறுத்தவரை தாய்மொழியாக தமிழைக் கற்பதிலேயே ஆர்வம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் விரிவாக தூர நோக்கும், தூய போக்கும் கொண்ட மர்ஹும் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் 1950 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.எம்.ஏ.என்ற இந்த இஸ்லாமிய வாலிபர் இயக்கம் நாடு பூராகவும் கிளைகளை அமைத்து வியாபித்துள்ளது
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை ஒரு சமூகம் சார்ந்த இயக்கமாக இருந்த போதிலும் நாட்டில் சகல இனங்களுக்குமிடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் முன்னின்று பணியாற்றி வருகின்றது என்றும் இலங்கை சட்டமன்றத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர் வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கெதிரான செயல்திட்டங்கள், அனர்த்த நிவாரண உதவிகள் போன்றவற்றை முஸ்லிம் வாலிபர் பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. முஸ்லிம்களை பொறுத்தவரை துரதிஷ்டவசமாக சிந்தனை ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பலவீனங்களை மேற்கு நாடுகள் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றனர். இஸ்லாத்தில் வகுப்பு வாதம், பிரிவினை வாதம் என்பன இல்லை. அவ்வாறே மேற்கு நாடுகளில் கூறப்படுவது போல இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை என்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة