Search This Blog

Jun 1, 2011

செய்திக்குறிப்பு: விளையாட்டு வினையாக மாறியதில் கட்டுவன்வில குளத்தில் ஓட்டமாடி சிறாஜிய்யா அரபிக்கல்லூரியைச் சேர்ந்த மூவர் வபாத்


- அபூ றப்தான் -
விளையாட்டு வினையாக மாறியதில் ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரியின் மூன்று பேர் கட்டுவன்வில குளத்தில் பலியான சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (29.5.2011) இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரியின் இரண்டு மாணவர்கள் உட்பட அதன் விடுதி மேற்பார்வையாளர் அடங்கலாக மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கட்டுவன்வில குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மரணமடைந்த செய்தி அன்றைய தினம் காலை 11மணிக்கு முழு கல்குடா பிரதேச மெங்கும் வேகமாக பரவியது.
பலரை சோகத்துக்குள்ளாக்கிய இச்செய்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலையொன்றின் மாணவர்களும், பெற்றோர்களுமாக பல பேர் கண்டியை நோக்கி சுற்றுலா சென்ற போது புகையிரத விபத்தொன்றில் பலர் பலியான சம்பவததை; நினைவுகூரவும் வந்தது. அந்த சேகா நாள் போன்ற ஒரு உணர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்பிரதேசத்தில் காணப்பட்டது.
ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரி கல்குடாவில் மிகவும் பிரசித்தி பெற்ற அறபுக்கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லுரியானது 1989ம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இக்கல்லூரியிலிருந்து வருடந்தோறும் பல மாணவர்கள் மௌவிகளாக வெளியேறுகின்றனர்.
இக்கல்லூரியின் வருடாந்த பாடத்திட்டத்தின் படி வருடத்தில் ஒரு சுற்றுலாவை மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது வழமையாகும்.
அந்த வகையில் இவ்வருடத்திற்கான சுற்றுலாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வைத்திருந்தனர்.
இந்த சுற்றுலாவுக்கான திகதி மற்றும் எங்கு சுற்றுலாவை செல்வது என்பது தொடர்பில் கல்லூரியின் அதிபர் மௌலவி யு. மஜீத் (சிறாஜி) உட்பட கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் அதன் நிருவாகிகள் கலந்தாலோசித்து ஞாயிற்றுக்கிழமை (29.05.2011) அன்று கட்டுவன்வில பிரதேசத்திற்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுலா செல்வதற்கு தீர்மானித்த இடத்தை முன் கூட்டி பார்ப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலா செல்வதற்கு மூன்று திங்களுக்கு முன் உரிய இடத்தை சென்று பார்வையிட்டு வந்தது.
இக்குழுவில் இதில் மரணித்த மௌலவி அன்வரும் சென்றிருந்தார். இக்குழு இடத்தை பார்வையிட்டு திரும்பியதையடுத்து மரணித்த மௌலவி அன்வர் இந்த இடத்திற்கே சுற்றுலா செல்லவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதுடன் அதற்காக அனைவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் என சிறாஜிய்யா அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி மஜீத் தெரிவிக்கின்றார்.
இந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணிக்கு கட்டுவன்வில பிரதேசத்தை நோக்கி இவர்கள் பஸ் வண்டியொன்றில் சுற்றுலா சென்றனர்.
இச்சுற்றுலாவில் 38 கல்லூரி மாணவர்களும், 8 விரிவுரையாளர்களும், அதிபர் மற்றும் நிருவாகிகள் பெற்றோர்கள் சிலர் அடங்களாக மொத்தம் 52 பேர் சென்றிருந்தனர்.
கட்டுவன்வில பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் அங்கிருந்து சுற்றலாவுக்கு தெரிவு செய்த இடத்திற்கு பஸ் வண்டி செல்லமுடியாததால் உழவு இயந்திரத்தில் உரிய இடத்திற்கு சென்றனர்.
காலை 8 மணிக்கு உரிய இடத்திற்கு  சென்ற இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து காலை உணவு மற்றும் பகல் உணவுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
சிலர் கிரிக்கட் விளையாடுவதும் சிலர் ஏனைய விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காலை 10 மணிக்கு காலை உணவு தயாரானது காலை உணவை முடித்த இவர்களில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் அடங்கலாக 25 பேர் அங்கிருந்த குளத்தில் நீராட தயாரானார்கள்.
அப்போது இவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அக்குளத்தின் ஆழம் மற்றும் குளிக்க வேண்டிய பகுதி ஆபத்தான பகுதி போன்றவைகளை  அடையாளம் காட்டி அதற்கான எல்லையாக கம்புகளை நட்டுக்காட்டினர்.
இதையடுத்து இவர்கள் நீராட ஆரம்பித்தனர்.
குதூகலமாக இவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது பந்து ஒன்று அங்கு கொண்டு வரப்பட்டு நீராடிக்கொண்டிருந்தவர்கள் பந்தை ஆள்மாறி ஆள் எறிந்து குளத்தினுள் விளையாட ஆரம்பித்தனர்.
இப்போது மிகவும் உற்சாகமாக குளத்தினுள் பந்தை எறிந்து விளையாடிக்கொண்டிருந்த போது மாணவன் றாபியை நோக்கி எறியப்பட்ட பந்தை பிடிப்பதற்கு ராபி தவறியதையடுத்து ராபி குளத்தினுள் விழுந்துள்ளார்.
தவறிய பந்து ஆளமான பகுதியை நோக்கிச்செல்ல அதை எடுப்பதற்கு றாபி முயற்சித்த வேளையில் றாபி குளத்தினுள் மூழ்கினார்.
இவர் மூழ்குவதையும் இவர் எழும்பமுடியாமல் திணறுகிறார் என்பதையும் அவதானித்த கல்லூரியின் விடுதி மேற்பார்வையாளர் மௌலவி அன்வர் றாபியை  காப்பாற்ற முயற்சித்த போது அவரும் குளத்தின் ஆழமான பகுதிக்குள் சென்று விட்டதால் மௌலவி அன்வரும் குளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது.
என்னைக்காப்பாற்ற உங்கள் கைகளை தாருங்கள் என மௌலவி அன்வர் மாணவர் றிபாஸை பார்த்து கேட்கவே றிபாஸ் கரங்களை நீட்ட அவரும் குளத்தினுள் மூழ்கினார்.
அப்போது அங்கிருந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் முயற்சியினால் அக்கிரமத்தவர்கள் வரவழைக்கப்பட்டு கிராமத்தவர் ஒருவர் இவர்களை காப்பாற்ற பகீரத முயற்சி எடுத்தும் முடியாமல் போனது.
ஒருவரை காப்பாற்றி அவரை கிராமத்தவர் தூக்கி எடுத்த போது அவர் மீண்டும் தவறி விழுந்துள்ளார்.
இவர்களை காப்பாற்றும் முயற்சியும் தோல்வியடைந்தது.
இறுதியில் கல்லூரியின் விடுதி மேற்பார்வையாளர் மௌலவி அன்வர், மாணவர்களான றாபி மற்றும் றிபாஸ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
மாணவர்களும், ரிவுரையாளர்களும் ஏனையவர்களும் சோகத்தில் ஆழந்து போய் தட்டுத்தடுமாறினர்.
முதலில் மௌலவி அன்வரின் ஜனாஸா எடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களிருவரின் ஜனாஸாக்களும் எடுக்கப்பட்டு அங்கிருந்து பரிசோதனைக்காக பொலன்னறுவ வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. பரிசோதனையின் பின் ஜனாஸாக்கள் உறவினர்களிடம் கையளிகக்கப்பட்டன.
இச்செய்தியை கேள்வியுற்ற பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் சம்பவ இடத்திற்கும் அதையடுத்து பொலன்னறுவ வைத்தியசாலைக்கும் விரைந்தனர்.
ஜனாசாக்கள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் ஞாயிற்றக்கிழமையிரவு 11.15 மணிக்கு ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்றாக ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்களின் ஜனாசா தொழுகையில் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ன்னாள் அமைச்சரும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ். அமீர்அலி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். ஜவாஹிர்சாலி, இஸ்மாயில் ஹாஜியார், ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் ஹமீட், உட்பட முக்கியஸ்த்தர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இச்செய்தியை கேள்விப்பட்ட ஓட்டமாவடி வர்த்தகர்கள் இவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டதுடன், சிலர் தமது வர்த்தக நிலையங்களையும் மூடியிருந்தனர்.
இதில் உயிரிழந்த மௌலவி மீராசாகிபு முஹம்மத் அன்வருக்கு வயது 23, பாறூக் முஹம்மத் றிபாசுக்கு வயது 20, தாஸீம் முஹம்மத் றாபிக்கு வயது 14
றிபாஸ் 7ம் வருடத்திலும், றாபி 2ம் வருடத்திலும் இக்கல்லூரியில் கல்வி கற்றதாகவும் இம்மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும் கல்லூரி அதிபர் மௌலவி மஜீத் தெரிவித்தார்.
தமது பிள்ளைகளை இழந்த சோகத்தில் அவர்களின் பெற்றோரும் சகோதரர்களும், உறவினர்களும், இன்னும் அழுது புலம்பிக்கொண்டே யிருக்கின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் பாவங்களை மன்னித்து இறைவன் இவர்களுக்கு சுவனபதியை வழங்குவானாக.

No comments:

Post a Comment

المشاركات الشائعة