ஐந்து உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கி கொழும்பு ‘மெட்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன்’ என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி இந்த சிட்டி கோப் ரேசனை அமை ப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்து ள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற் கான வாராந்த ஊடகவியலாளர் மாநாடு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி கொழும்பு மெற்றோபொலிட்டன் சிட்டி கோப்ரேசன் என்ற ஸ்தாபனத்தை அமைக்கும் யோசனையை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவரது யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.
தலைநகரான கொழும்பின் நிர்வாகத்தையும் ஏனைய நகர அபிவிருத்தி நிலையங்களுக்கிடையில் பலம் மிக்க ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு தான் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது. இதன் மூலம், அந்நிறுவனங்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் தற்போது கொழும்பு பிரதேசத்தில் செயற்படுகின்ற உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது,
இப்புதிய நிறுவனத்திற்கு சகல அதிகாரங்களையும் கொண்ட தலைவராக நகர ஆளுனர் ஒருவர் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவார். என்றாலும் இந்த நிறுவனத்திற்குள் உள்ளடக்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், எதிர்க் கட்சியினால் நியமிக்கப்படும் ஒருவர் ஆகியோர் இப்புதிய நிறுவனத்தில் அங்கம் வகிப்பார்கள்.
மேலும் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை உள்ளடக்கி 12 ஆலோசனைக்குழுக்களும் உள்ளூராட்சி கமிட்டி ஒன்றும் இப்புதிய நிறுவனத்திற்காக நியமிக்கப்படவுள்ளது.
இப்புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வரைவதற்கான பொறுப்பு சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் சனத் தொகை அதிகரித்துள்ளது. இவ்வதிகரிப்புக்கு ஏற்ப சேவை வழங்க முடியாத நிலைக்கு இந்த உள்ளூராட்சி சபைகள் முகம் கொடுத்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் கழிவுப் பொருட்களை தொடராகவும் சீராகவும் முகாமைப்படுத்த முடியாத நிலையையும் இச்சபைகள் எதிர்கொண்டுள் ளன.
இந்த உள்ளூராட்சி சபைகள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகளைத் தீர்த்துவைத்து இங்கு வாழுகின்ற மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவே இப்புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றோம்.
கொழும்பு மேற்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன் அமைக்கப்படுவதால் இதனுள் உள்ளடக்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படமாட்டாது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியசேன அத்துகலவும் கலந்து கொண்டார்.- மர்லின் மரிக்கார் தினகரன்
No comments:
Post a Comment