கெய்ரோ:லிபியாவில் ஏகாதிபத்திய அரசுக்கெதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அந்நாட்டின் சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவருடைய ஆதரவு ராணுவத்தினருக்கெதிராக தாக்குதலை நடத்திவருகிறது அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும்.இத்தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்துள்ளார்.
லிபியாவை விமானம் பறக்கத்தடைச்செய்யப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தும் ஐ.நாவின் தீர்மானம் லிபியாவின் சாதாரணமக்களை பாதுகாப்பதற்காகும்.அத்தீர்மானம் தாக்குதலுக்கான அனுமதியல்ல. ஐ.நா தீர்மானத்திற்கு எதிரான செயல்கள் தற்பொழுது நடைபெறுகிறது என அம்ர் மூஸா கூறியுள்ளார்.ஆனால், நேற்று முன் தினம் ஐ.நாவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அம்ர் மூஸா ஆதரித்திருந்தார்.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கத்தாஃபியை அதிகாரத்திலிருந்து அகற்றுவது நிர்பந்தம் என கூறியிருந்தார்.ஆனால், கத்தாஃபி எங்களின் குறி அல்ல என இன்று பெண்டகன் விளக்கம் அளித்துள்ளது.அரசுக்கெதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள லிபியா அதிகாரிகளின் நடவடிக்கையை இனிமேலும் அங்கீகரிக்க இயலாது.எதிர்ப்பாளர்களை பாதுகாக்க அவசர ராணுவ நடவடிக்கை அத்தியாவசியமானது என சனிக்கிழமை இரவு தாக்குதல் லிபியாவின் மீது தாக்குதல் துவங்கும்பொழுது பிரான்சு அதிபர் சர்கோஸியும், பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனும் தெரிவித்திருந்தனர்.இவ்வாறு முரண்பட்ட தகவல்களைக்கூறும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை.அரசுக்கெதிராக போராட்டம் நடத்தும் எதிர்ப்பாளர்களை பாதுகாப்பதா?கத்தாஃபியை வெளியேற்றுவதா?அல்லது அந்நாட்டின் எண்ணெய்வளத்தை அபகரிக்க திட்டமா?என கேள்விகள் எழுந்துள்ளன.இதற்கிடையே முஅம்மர் கத்தாஃபி தொலைக்காட்சியில் மக்களுக்கு உரை நிகழ்த்த பயன்படுத்தும் 3 மாடி கட்டிடமான பாபுல் அஸீரியா மையம் கூட்டணி படைகளின் தாக்குதலில் தகர்ந்துபோனது.
No comments:
Post a Comment