வட ஆப்ரிக்க நாடான துனிஷியாவில் பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. துனிஷியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி சவுதிக்கு ஓடி விட்டார்.
அதையடுத்து அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால் முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று துனிஷிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக போராட்டம் வலுவடைந்தது. கடந்த 25, 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் துனிஷில் நடந்த போராட்டத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் கன்னவுச்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர்,"நான் எனது பொறுப்பில் இருந்து ஓடவில்லை. எனது பதவி விலகல் புதிய பிரதமருக்கு வழி வகுக்கும். மேலும் போராட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க நான் தயாராகவில்லை" என்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் அல் பாஜி காயித் அல் செப்சி புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. கன்னவுச்சியின் ராஜினாமா குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் தான் என்றாலும் அதுவே போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தி விடாது. அமைச்சரவையில் முன்னாள் அதிபர் அலியோடு தொடர்புடையவர்கள் இருக்கும் வரை போராட்டம் நிற்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் போராட்டத்தின் போது சிலர் பலியானது தொடர்பாக 188 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிபர் அலியின் நெருங்கிய அதிகாரிகள் சிலர் இவர்களுக்குப் பணம் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் சிலரை கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment